Published : 12 Dec 2015 09:28 AM
Last Updated : 12 Dec 2015 09:28 AM

தொழில் ரகசியம்: அதிகாரக் கோட்பாடும் கண்மூடி பழக்கமும்

மருத்துவ கல்லூரி டீன் முதல் நாள் மாணவர்களிடம் `நீங்கள் கற்க வேண்டியது இரண்டு பாடங்கள்’ என்று கூறி க்ளாஸை எடுத்து, மாணவர்களையும் அவர்கள் முன் இருந்த க்ளாஸை எடுக்கச் சொன்னார். ‘என் க்ளாஸிலும் உங்கள் க்ளாஸிலும் உள்ள மஞ்சள் கலர் திரவம் என்ன என்பது புரிந்திருக்கும்’ என்றவர் அதில் அனைவரையும் விரலை வைக்கச் சொல்லி தானும் வைத்தார். `இப்பொழுது விரலை வாயில் வையுங்கள்’ என்று கூறி தானும் வைக்கிறார். முகத்தைச் சுளித்தவாறே மாணவர்கள் செய்ய ’மருத்துவ படிப்பின் முதல் பாடம் சகித்துக் கொள்ளும் குணம்’ என்றார் டீன்.

நீங்களும் ஏன் முகத்தை சுளித்துக் கொள்கிறீர்கள்? என் எழுத்தை சகித்துக் கொண்டு மேலே படியுங்கள்.

கண்றாவி என்று தெரிந்தும் மாணவர் கள் ஏன் அப்படி செய்தார்கள்? அவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே பொது வாக அதிகாரத்திற்கு கட்டுப்படுபவர்கள். ஆழ் மனதில் அதிகாரத்திற்கு மதிப்பு தரவேண்டும் என்று நினைப்பவர்கள். அதிகாரத்திற்கு இணங்கி எந்த அள விற்கும் கட்டுப்பட்டு நடக்கும் குணம் உடையவர்கள். இதற்கு காரணம் ‘அதி கார கோட்பாடு’ (Authority principle).

‘யேல் பல்கலைக்கழக’ சைக்காலஜி பேராசிரியர் ‘ஸ்டேன்லி மில்க்ராம்’ இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் ஆணைக்கிணங்கி ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த ஜெர்மன் நாட்டு வீரர்களின் செயலுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று ஐரோப்பா சென்று ஆராய நினைத்தார், அதற்கு முன் தன் கல்லூரி்யிலேயே சிறிய ஆராய்ச்சி ஒன்றைச் செய்தார்.

அறையில் ஒருவர் அமர்ந்திருக்க அவர் உடம்பெங்கும் ஒயர்களால் பின்னியிருக்கும் படி செய்தார். ஆய்வில் கலந்து கொண்டவர்களை, அவரிடம் சில கேள்வி கேட்க செய்து தவறான பதிலளித்தால் கேள்வி கேட்பவர் தன் முன்னிருக்கும் ஸ்விட்சை தட்ட அறையில் இருப்பவருக்கு ஷாக் அடிப்பது போல் செய்தார். அடுத்தடுத்து தவறான பதில்கள் வர ஷாக்கின் அளவு கூடிக்கொண்டே போவது போலும் செய்தார்.

ஆய்வில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்க, அறையிலிருப்பவர் தவறான பதில் தர கேள்வி கேட்டவர் மில்க்ராமை பார்க்க அவர் ‘ஷாக் கொடு’ என்றார். ஆய்வில் கலந்து கொண்டவர்கள் இஷ்டமில்லாமல் ஸ்விட்சை தட்டினார்கள். போகப் போக தவறான பதில்கள் வர கேள்வி கேட்பவர்களுக்கு அவர் மேல் இறக்கம் ஏற்பட்டாலும் மில்க்ராமிற்கு பயந்து ஸ்விட்சை தட்டினார்கள். ஒரு சமயத்திற்கு பின் அறையிலிருப்பவர் ‘எனக்கு முடியவில்லை, விட்டு விடுங்கள்’ என்று கதறியும் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் அறையிலிருப்பவர் மேல் பரிதாபம் இருந்தும் கேள்வி கேட்பதை, ஷாக் தருவதை நிறுத்தவில்லை. இந்த ஆய்வை மில்க்ராம் பல தடவை, பல பேருடன் செய்தும் இது போலவே தான் நடந்தது.

ஆய்வில் `பாஸ்’ என்ற அதிகாரத்தில் அமர்ந்திருந்த என் ஆணைக்கு கட்டுப்பட்டதால் நடந்தது இது என்கிறார் மில்க்ராம். ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள் என்று நினைக்காதீர்கள். அறையிலிருப்பவர் மீது இரக்கப்பட்டு அவரை விட்டு விடுங்கள் என்று மில்க்ராமிடம் கெஞ்சினார்கள். ஆனாலும் மில்க்ராமின் ஆணைக்கு கட்டுபட்டு நடந்தார்கள். பெண்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். ஆய்வில் பல பெண்களும் இருந்தார்கள்.

`இந்த ஆய்வின் மூலம் அதிகாரத்தின் மகிமையை, மனிதர்கள் நடத்தையைக் கட்டுபடுத்தும் அதன் சக்தியை உணர்ந்தேன்’ என்கிறார் மில்க்ராம். ‘ஜெர்மனி வீரர்கள் செய்ததன் காரணம் புரிந்தது. அங்கு சென்று ஆய்வு செய்யும் எண்ணத்தையே கைவிட்டேன்’ என்றார். இந்த மில்க்ராமிற்கு அரை கிராம் கூட ஈவிரக்கம் இல்லை என்று நினைக்காதீர்கள். அவர் உண்மையில் ஷாக் தரவில்லை. அறையில் அமர்ந்து பதிலளித்தவர் ஒரு நடிகர். ஷாக் தரப்பட்டது போல் நடித்தார். அவ்வளவே!

பிறந்தது முதல் அதிகாரத்திற்கு கீழ்படிய கற்றுத் தரப்படுகிறோம். சொல் பேச்சு கேளாமை தவறு என்று கேட்டு பழகிவிட்டோம். பள்ளி துவங்கி பிசினஸ் வரை, ஆஸ்திகம் துவங்கி அரசாங்கம் வரை அதிகாரத்திற்கு கட்டுப்படுவது என்பது நம் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அங்கீகரிக்கப்பட்ட அதிகார மையம் அறிவுறுத்தும் விஷயம் எல்லா நிலைமையிலும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறையை எளிதாக்குகிறது. அதிகாரத்திற்கு உட்பட்டு நடப்பது பிராக்டிக்கலாக நமக்கு பயனளிக்கும் ஒன்று என்கிறார் மில்க்ராம்.

சிறு வயதில் பெற்றோர்கள் சொல்வதை கேட்கிறோம். பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் சொல்வதை கேட்கிறோம். அவர்களுக்கு நம்மை விட அதிகம் தெரியும் என்பது ஒரு காரணம். சொல்வதை கேட்டால் பரிசு கிடைக்கும் என்ற ஆசையும், கேட்கவில்லை என்றால் தண்டனை கிடைக்கும் என்ற பயமும் காரணம். பெரியவர்களானதும் நம் அதிகார மையம் என்பது மேலாளர்கள், அரசாங்க விதிகள், நீதிபதிகள் என்று மாறினாலும் அதிகாரத்திற்கு கட்டுப்படுவதற்கு நாம் மறப்பதில்லை. சிறு வயதில் அதிகாரத்திற்கு கட்டுப்படுவதன் பயன் புரிந்து அது போலவே வளர்ந்த பின்னும் நடக்க துவங்கி அப்படியே வாழவும் பழகிவிடுகிறோம்.

கேள்வி கேட்காமல், கண்மூடி சொல்வதை செய்ய நாம் பழகிவிட்ட இன்னொரு அதிகார மையம் டாக்டர்கள். நம் நலம் முக்கியம், அதை பாதுகாப்பவர் டாக்டர். அதோடு உடம்பு என்பது நமக்கு ஒரு எழவும் தெரியாத விஷயம். இதனால் சொன்னால் கேட்கும் அதிகார லிஸ்ட்டில் டாக்டரையும் சேர்த்துவிட்டோம். அவர் சொல்வதற்கு மேல் மார்க்கம் கிடையாது, கேட்காவிட்டால் மேலே செல்வதை தவிர வேறு மார்க்கம் கிடையாது என்று நினைக்கிறோம்.

இதன் ஒரு வெளிப்பாட்டைத்தான் விளம்பரங்களில் பார்க்கிறீர்கள். விளம்பரத்தில் ஒரு டாக்டர் தோன்றி ஒரு பிராண்டை பரிந்துரைத்தால் நம்மை அறியாமலேயே அந்த பிராண்ட் மீது நல்ல அபிப்ராயம் உருவாகிறது. டாக்டர் சொன்னால் சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது. இதை சில பிராண்டுகள் சிறப்பாக பிரயோகித்து பயனடைகின்றன. அந்த லிஸ்டில் கில்லாடி கிங் ‘கோல்கேட்’ டூத்பேஸ்ட். காலகாலமாக பல் டாக்டரை விளம்பரங்களில் காட்டியே நம்மை பல் இளிக்க வைத்திருக்கிறார்கள். அதனால் தான் எந்த பல் டாக்டரை பார்த்தாலும் ‘நீங்க தானே கோல்கேட் விளம்பரத்தில் வருபவர்’ என்று கேட்கத் தோன்றுகிறது!

விளம்பரத்தில் தோன்றுபவர் எம்பிபிஎஸ் படித்த டாக்டராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. டாக்டர் போல் உடையணிந்து, டாக்டர் போல் தோற்றமளித்தால் போதும். அவரை டாக்டராகவே பாவித்து அவர் சொல் பேச்சு கேட்க மக்கள் ரெடி. `லைஃப்பாய்’, ‘லைஸால்’, ‘டெட்டால்’ என்று ஒரு பெரிய பிராண்ட் கூட்டமே இந்த டாக்டர் விளையாட்டை விளையாடி நமக்கு டீவியில் வைத்தியம் பார்த்து வருகிறது.

இதில் முக்கியமான விஷயம் விளம்பரத்தில் தோன்றுபவருக்கு டாக்டர் போல் மதிப்பான தோற்றம், தோரணையும் இருக்கவேண்டும். டாக்டர் போல் நடிப்பவர் பிரபல நடிகராக இருந்தால் அவரை யாரும் டாக்டராக பாவிக்கமாட்டார்கள். அந்த நடிகர் பெயரைச் சொல்லி ‘டேய் இவருடா’ என்று சிரிப்பார்கள்.

டாக்டர் என்றதும் நினைவிற்கு வருகிறது. ஆரம்பத்தில் பார்த்த மருத்துவ கல்லூரி டீன் கூறிய இரண்டு பாடங்களில் ஒன்றை மட்டும் தானே பார்த்தோம். அடுத்த பாடம் என்ன என்பதை அவரே விளக்கினார். ‘மருத்துவ படிப்பில் நீங்கள் கற்கவேண்டிய இரண்டாவது பாடம் கூர்ந்து கவனிக்கும் திறன். நான் ஆள்காட்டி விரலை க்ளாஸில் வைத்தேன். ஆனால் வாயில் வைத்தது என் நடு விரலை!’

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x