Published : 02 Jun 2021 04:55 PM
Last Updated : 02 Jun 2021 04:55 PM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது.
வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, வீட்டை காலி செய்வதில் ஏற்படும் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் கொண்டு வரப்பட்டது.
* வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
* வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்
* முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும்.
* ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
* ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.
* அதே சமயம், ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
* வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT