Published : 12 Jun 2014 12:09 PM
Last Updated : 12 Jun 2014 12:09 PM
நாம் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலுக்கு, மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமாகிறது. மார்க்கெட்டிங் என்றவுடன் நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தையும் பத்திரிக்கை விளம்பரத்தையும் மட்டுமே நினைத்து விடாதீர்கள். அதை தவிர பல மார்க்கெட்டிங் வித்தைகள் இருக்கிறது. அதை உங்கள் தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ளுங்கள்.
தமிழர்களில் பெரும்பாலானோர்கள் மார்க்கெட்டிங் செய்வதை அல்லது விற்பனை செய்வதை விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடமுள்ள கூச்ச சுபாவம் ஆகும். பள்ளி பருவங்களில் நமது குழந்தைகள், பொருளாதாரத்தில் வளர்ந்தநாட்டு குழந்தைகளைப் போல, வெளியில் சென்று பகுதி நேரம் வேலை பார்ப்பதில்லை; அல்லது விற்பனை செய்வதில்லை.
இதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் கூச்ச சுபாவமாக மாறிவிடுகிறது. நாம் ஒருவரிடம் பேசுவதிலிருந்து, நாம் நினைப்பதை ஆணித்தரமாக எடுத்து கூறுவதிலிருந்து, ஒரு விற்பனையை செய்து முடிக்கும் வரை மார்க்கெட்டிங் என்ற துறை உலாவுகிறது. சிறுதொழில் ஆரம்பிப்பவர்கள் எவ்வாறு மிக மிக குறைந்த பணத்தில் அல்லது பணமே இல்லாமல் மார்க்கெட்டிங் செய்வது?
தரமான அனுபவம் வேண்டும்
செலவே இல்லாத மார்க்கெட்டிங் யுத்தி என்பது வாய்மூலமாக (Word of Mouth) பரவுவதுதான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கடையை ரோட்டில் பார்த்ததும் சிலர் கடையில் நுழைந்து வாங்க வருவார்கள். ஆனால், நீங்கள் அவர்களிடம் பேசும் விதம், பழகும் விதம், மற்றும் சேவை செய்யும் விதம் இவற்றைப் பொறுத்துத்தான் அவர்கள் உங்கள் கடைக்கு மறுமுறை வருவார்கள். (விலை போன்றவையெல்லாம் உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சமமாக இருக்கும் என்று எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்!)
இதுபோல் அவருக்கு உங்கள் கடையில் ஏற்படும் அனுபவம் இனிமையாக இருக்கும் பொழுது, அவர் உங்கள் கடையைப் பற்றி, அவருக்கு நெருக்கமானவர்களிடம் பரிந்துரை செய்வார்.
இவ்வாறு உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் தலைமுறை தலைமுறையாக உங்களுடன் உறவு கொண்டு இருப்பார்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய மார்க்கெட்டிங் செலவு எதுவும் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கடையில் அவருக்கு ஏற்படும் அனுபவம் இனிமையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!
உங்களிடம் பெரும் பணம் இல்லாத பொழுது உங்கள் சேவையை அதிகரிப்பது ஒன்றுதான் உங்களின் மார்க்கெட்டிங் யுத்தியாக இருக்க வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக மிகக் குறைந்த செலவில் உங்களுக்கு தொழிலை தேடித்தருவது உங்களது விசிட்டிங் கார்டு (Visiting Card) ஆகும். தொழில் ஆரம்பித்த புதிதில் நீங்கள் சந்திப்பவர்களிடம் எல்லாம் உங்களின் விசிட்டிங் கார்டை கொடுக்கும் பொழுது உங்களது தொழிலுக்கு ஒரு அடையாளம் கிட்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் பொழுது உங்கள் பொருளில் அல்லது உங்களின் சேவையில் விருப்பம் இருப்பவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள்.
குறைவான செலவில் வரக்கூடிய மற்றுமொரு கருவி தபால் ஆகும். உங்களது தொழிலைப் பற்றி சுருக்கமாக அச்சிட்டு அஞ்சல் செய்யும்பொழுது அது உரியவர்க்கு சென்று கிட்டும். அல்லது உங்களது பகுதியில் உள்ள அனைத்து தபால் பெட்டிகளிலும் நீங்கள் போடலாம்.
அதுபோல் நீங்கள் உங்கள் லிஸ்ட்டில் இருக்கும் 200 அல்லது 300 பேருக்கு அனுப்பும்பொழுது அதிலிருந்து சுமாராக 5% பேர் வாடிக்கையாளர்களாக மாற வாய்ப்பு இருக்கும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துதல்
இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமுறையினருக்கும் கிட்டாத ஒரு பொக்கிஷம் நமக்கெல்லாம் கிடைத்துள்ளது. அதுதான் இன்றைய இன்டர்நெட், இ-மெயில் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ சாட் (Audio, Video Chat) ஆகும். இ-மெயில் அனுப்புவதற்கு உங்களுக்கு செலவு ஏதும் கிடையாது. ஒவ்வொரு தொழிலுக்கும் வலைதளம் என்பது இன்று இன்றியமையாதது ஆகிவிட்டது. உங்களது வலைதளத்தை ஒரு குறிப்பிட்ட செலவில் ஆரம்பித்துக் கொள்ளலாம் - அதுபோல் facebook, twitter, linkedIn போன்ற இணையதளங்களில் உங்களது கணக்கைத் துவக்கினால் உங்களது பிஸினஸ் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும் உங்களின் சேவையினால் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை அணுகி உங்களைப்பற்றிய பரிந்து ரையைக் கேட்கலாம். அப்பரிந்துரையை உங்களது இணையதளத்தில் போட்டு வைக்கலாம்.
அவ்வாறு உங்களைப்பற்றிய பரிந்துரையை தர தயாராக இருக்கும் ஒரு சில நபர்களிடம் அனுமதி பெற்று, புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் யாரேனும் உங்களைப் பற்றி அல்லது உங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ரெஃபரன்ஸ் (reference) கேட்டால் அவர்களது பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுக்கலாம்.
ஏனென்றால் புதிதாக வரும் வாடிக்கையாளருக்கு உங்களது சேவை மற்றும் தொழில் செய்கைகள் குறித்து பலவிதமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் நீங்கள் கொடுக்கும் ரெஃபரன்ஸ் மூலம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவார்கள்.
இன்னும் பல சின்ன சின்ன யுத்திகளையும் நீங்கள் கையாளலாம். உதாரணத்திற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் உங்களது தொழிலின் முகவரி, தொலைபேசி எண்கள், இணையதளத்தின் விலாசம் நீங்கள் விற்கும் பொருட்கள் போன்றவற்றையெல்லாம் நிரந்தரமாக இணைத்து விடலாம். அதுபோல் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்ஸிலும் (SMS) உங்களின் பெயர், தொழிலின் பெயர், இணையதளம் போன்றவற்றை குறிப்பிட்டு அனுப்பலாம்.
புரபொஃஷனல்ஸ் (Professionals) என்று கூறக்கூடிய மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள், ஆலோசகர்கள், சார்டர்ட் அக்கவுண்டண்ட் (Chartered Accountants) போன்ற இன்னும் பல அறிவுசார் துறைகளில் இருப்பவர்கள் பொது மக்களுக்குள்ள சந்தேகங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணையதளங்கள் மூலமாக தீர்த்து வைப்பதன் மூலமாகவும் அவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. நாம் எப்பொழுதும் பலருடன் நட்பு மற்றும் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். அது நமது தொழிலுக்கும் உதவியாக இருக்கும். ஆகவே உங்கள் பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்-களில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். அதேபோல் உங்கள் பகுதியில் உள்ள சமூக அமைப்புகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்பொழுது, நீங்கள் பலரையும் சந்திக்க வாய்ப்புள்ளது. அவற்றின் மூலம் மறைமுகமாக உங்கள் தொழிலும் அபிவிருத்தி அடையும். இவையெல்லாம் சின்ன சின்ன செய்கைகள்தான்.
ஆனால் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உங்களுக்கு சில ஆண்டுகள் ஆகிவிடும். நாம் மேற்கூறிய முறைகளில் உங்கள் மார்க்கெட்டிங்கை செய்யும் பொழுது, ஒரு ஸ்டார்ட்-அப்-பிற்கு குறைந்த செலவில் நிறைய விளம்பரம் கிடைக்கும் தொழிலும் பெருகும்!
prakala@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT