Published : 15 Dec 2015 08:59 AM
Last Updated : 15 Dec 2015 08:59 AM

தொழில் கலாச்சாரம்: ஊழலற்ற தேசத்தில் தொழில் வாய்ப்புகள்...

தொழில் தொடங்கவும், அதை வெற்றிகரமாக நடத்தவும், உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு எது? ஒவ்வொரு வருடமும், உலக வங்கி 189 நாடுகளை எடைபோட்டுப் பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலின் பெயர் Ease of doing Business Index. இதற்காகப் பத்து அம்சங்களைக் கணக்கிடுகிறார்கள். அவை:

# தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு, குறைந்தபட்ச முதலீடு

# அலுவலக / தொழிற்சாலைக் கட்டடம் கட்டுவதற்கான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு

# மின்சார சப்ளை - புதிய கட்டடத்துக்கு மின்சாரம் கிடைக்கத் தேவையான விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு

# தொழிற்சாலையைப் பதிவு செய்தல் - விதிமுறைகளின் எளிமை, ஆகும் காலம், செலவு

# தொழிற்கடன் வாங்குதல் - கடன் பெறும் உரிமைகள், வசதிகள், ஆகும் காலம்

# முதலீட்டாளர் பாதுகாப்பு

# வரிமுறை, வரி விகிதம்

# ஏற்றுமதிச் சட்டங்கள்

# தொழில் ஒப்பந்தங்கள் போடு வதற்கான விதிகள், எடுக்கும் காலம், செலவு

# நிறுவனம் திவாலானால், எதிர்கொள்ளவேண்டிய விதிமுறைகள்.

இந்தப் பட்டியலை உலக வங்கி 2006 - இல் தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை தவறாமல் முதல் இடம் பிடித்திருக்கும் நாடு சிங்கப்பூர்!

சிங்கப்பூரோடு தொழில் செய்யப் பிற தேசங்களுக்கு இவை உந்துதல் சக்தியாக இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு சிங்கப்பூர் சொந்த மண் மாதிரி. ஏன் தெரியுமா? சிங்கையின் மொத்த மக்கள் தொகையான 57 லட்சம். பேரில், 9.2 சதவீதம் பேர் இந்தியர்கள் அதில் தமிழர்கள் 5 சதவீதம். அதாவது சுமார் 2.5 லட்சம் பேர் தமிழர்கள். உலகில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும் நாடுகள் இரண்டு. அவை, சிங்கப்பூரும், இலங்கையும்.

பூகோள அமைப்பு

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தேசம். சிங்கப்பூர் என்னும் முக்கிய தீவையும், 63 குட்டித் தீவுகளையும் தன்னுள் கொண்ட நகரம்தான் நாடாக இருக்கிறது. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் இருக்கிறது. மலேசியாவிலிருந்து ஜோஹோர் நீர்ச்சந்தியும் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நீர்ச்சந்தியும், சிங்கப்பூரைப் பிரிக்கின்றன. நிலப்பரப்பு 697 சதுர கிலோமீட்டர்கள். தலைநகரம் சிங்கப்பூர்தான். இயற்கை வளங்கள் எதுவுமே கிடையாது. குடிநீரைக்கூட அண்டைய நாடான மலேசியாவிலிருந்துதான் வாங்குகிறார்கள்.

சுருக்க வரலாறு

சிங்கப்பூரில் மனிதக் குடியேற்றம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று நிபுணர்கள் யூகிக்கிறார்கள். தமிழகத்தோடு, குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி செய்த பத்தாம் நூற்றாண்டில், சோழப் பேரரசோடு நெருங்கிய நட்புறவு வைத்திருந்தது. தென்னிந்தியாவோடு மட்டுமல்ல, வட இந்தியாவோடு புத்தமதத் தொடர்புகள்; சீனாவோடு அமோகமான ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம்; மத்திய கிழக்கு அரேபிய நாடுகளோடு மதத் தொடர்புகள்.

சுமாத்ராவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விஜய சாம்ராஜ்யத்தை, அண்டைய மன்னர்கள் தாக்கினார்கள். இளவர சராக இருந்த சாங் நிலா உத்தமா தப்பியோடி, ஒரு புதிய தீவுக்கு வந்தார். அங்கே ஏராளமான புலிகள் நடமாடிக்கொண்டிருந்தன. ராஜா ஏனோ, புலிகளைச் சிங்கங்கள் என்று நினைத்துவிட்டார்.

காட்டு ராஜாவான சிங்கங்களைப் பார்த்த அதிர்ஷ்டத்தால்தான் தனக்கு நாட்டு ராஜ்யம் கிடைத்தது என்று நம்பினார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம்: பூரா என்றால், ஊர். இதன் அடிப்படையில், சிங்கங் களுக்கு நன்றியறிவிப்பாகப் புதிய தீவுக்குச் சிங்கப்பூரா என்று பெயர் சூட்டினார்.

1511 - இல், போர்த்துக்கீசியர்கள் சிங்கப்பூராவைக் கைப்பற்றினார்கள். இந்தத் தீவால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்தார்கள். சிங்கப்பூரா என்னும் தேசமே மறக்கப்பட்டுவிடும் நிலை. அடுத்து, டச்சுக்காரர்கள் மலாயா, சிங்கப்பூரா பகுதிகளைப் போர்த்துக்கீசியரிடமிருந்து தட்டிப் பறித்தார்கள். இவர்களும், சிங்கப்பூராவுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. இந்தச் சோகம் சுமார் 200 ஆண்டுகள் தொடர்ந்தது.

1819. சிங்கப்பூர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் என்னும் கவர்னர், நாட்டின் வாழ்க்கை வசதிகள், பொருளாதாரம் ஆகியவை வளர, பலமான அடித்தளங்கள் அமைத்தார். ஆனாலும், சிங்கப்பூர் ஏழ்மையான பிரிட்டிஷ் காலனியாகத் தொடர்கிறது.

1954-ல், லீ குவான் யூ என்னும் வழக்கறிஞர் பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி (Peoples Action Party) என்னும் கட்சி தொடங்குகிறார். 1959 இல், முதலமைச்சராகிறார். 1963 - சிங்கப்பூர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெறுகிறது. மலாயா, சராவாக், சபா ஆகிய பகுதிகளோடு இணைந்து, மலே சியக் குடியரசு பிறக்கிறது. விரைவிலேயே, மலாயாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையே மனக் கசப்பு உருவாகி, 1965 இல் சிங்கப்பூர் தனி நாடாகிறது. லீ குவான் யூ தலைமையில், நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு பிறருக்கு முன்னோடியாகிறது. லீ குவான் யூ 2015, மார்ச் 3 அன்று மறைகிறார். நல்லாட்சி தொடர்கிறது.

மக்கள் தொகை

57 லட்சம். இதில், சீனர்கள் 74.2 சதவீதம்: மலாய்கள் 13.3 சதவீதம், இந்தியர்கள் 9.2 சதவீதம்: பிறர் 3.3 சதவீதம். இதனால், சீனம், மலாய் தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சிமொழிகளாக இருக் கின்றன.

45 சதவீதம் புத்த மதத்தினர்: முஸ்லீம்கள் 14 சதவீதம்; கிறிஸ்தவர்கள் 18 சதவீதம்; இந்துக்கள் 5 சதவீதம்; மத நம்பிக்கை இல்லாதவர்களும், பிறரும் 18 சதவீதம்.

கல்வியறிவு 97 சதவீதம். ஆண்கள் சுமார் 99 சதவீதம். பெண்கள் 95 சதவீதம். ஆங்கில அறிவு அதிகம்.

ஆட்சிமுறை

நாடாளுமன்ற முறை மக்களாட்சி. 21 வயது நிறைந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. நாட்டின் தலைவர் அதிபர் என்றழைக்கப்படுகிறார். (President). இவர் மக்களால், ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை. பெரும்பான்மைக் கட்சி, ஆட்சி நடத்தும் பிரதமரைத் தேர்வு செய்கிறார்கள். 1959 முதல், பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி கட்சிதான் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திவருகிறது.

பொருளாதாரம்

ஊழல்கள் மிகக் குறைவான, தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் சூழல். ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் நாடு. பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 75 சதவீதம். உலகப் பணப் பரிவர்த்தனை மையங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. தொழில் துறையின் பங்கு 25 சதவீதம். கம்ப்யூட்டர், ரசாயனங்கள், பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆகியவை முக்கிய தொழில்கள். தொழிலாளிகள், தொழில் முனைவோர் எனப் பல வகைகளில், நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிகக் கணிசமானது.

நாணயம்

சிங்கப்பூர் வெள்ளி என்று தமிழில் அழைக்கப்படும் சிங்கப்பூர் டாலர். சுமார் 47 ரூபாய்க்கு சமம்.

இந்தியாவோடு வியாபாரம்

சிங்கப்பூருக்கு நம் ஏற்றுமதி ரூ. 61,021 கோடி. இவற்றுள் முக்கியமானவை பெட்ரோலியப் பொருட்கள், கப்பல்கள், படகுகள், நிக்கல், உணவுப் பொருட்கள்.

நம் இறக்குமதி ரூ.43,550 கோடி. எலெக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவக் கருவிகள், ரசாயனங்கள், பிளாஸ்டிக்ஸ் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. 5,000 த்துக்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்திருக்கின்றன / கிளைகள் வைத்திருக்கிறார்கள்.

விசிட்

கிட்டத்தட்ட தமிழ்நாடு போல, டிசம்பர், ஜனவரி தவிர்த்த பிற மாதங்களில் வெயில்தான். ஆகவே, நமக்கு எல்லா மாதங்களும், பயணத் துக்கு ஏற்றவை.

பிசினஸ் டிப்ஸ்

என் அனுபவத்தில், தொழில் செய்வதற்கான விவரங்களை அள்ளித் தரும் அரசு இணையதளங்கள் கொண்ட ஒருசில நாடுகளில் சிங்கப்பூர் முக்கியமானது. ஏராளமான தமிழர்கள் அரசிலும், தனியார் துறையிலும், உயர் பதவிகளில் இருப்பதால், நம் தொழில் முயற்சிகள் இன்னும் எளிதாகின்றன.

சிங்கப்பூரியர்கள் எனும் உணர்வோடு எல்லோரும் வாழ்ந்த போதிலும், சீனா, மலேசியா, இந்தியா என்று மூன்று கலாச் சாரங்கள் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அடிப்படையில் உங்கள் அணுகுமுறை இருக்கட்டும்.

நேரம் தவறாமை முக்கியம். தாமதமாகப் போனால், அவமதிப்பாக நினைப்பார்கள். கை குலுக்கல், வணக்கம் சொல்வது ஆகியவை வரவேற்பு முறைகள்.

அவசர முடிவுகள் எடுக்கமாட் டார்கள். ஆகவே, ஒரே பயணத்தில், பெரிய தொழில் ஒப்பந்தங்கள் போடலாம் என்று நினைக்காதீர்கள். நிதானத்தோடு அணுகுங்கள்.

உடைகள்

வெயில் நாடாக இருப்பதால், பான்ட், ஷர்ட் போதும். அரசு உயர் அதிகாரிகள், சி.இ.ஓ.க்களைச் சந்திக் கும்போது சூட் அணிவது நல்லது.

பரிசுகள் தருதல்

ஊழல் மாபெரும் குற்றம். ஆகவே, பரிசுகள் தேவையில்லை.

- slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x