Last Updated : 15 Jun, 2014 01:00 AM

 

Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM

டைட்டன் ஸூப் – குழந்தைகளால் குதூகல வளர்ச்சி

பொதுவாக சந்தையில் ஒரு பொருள் பிரபலமாகாமல் தோற்றுப் போனால் அதற்குப் பல காரணங்கள் கூறப்படுவதுண்டு.

ஆனால் ஒரு பொருள் வெற்றி பெற்று பிரபலமாக தொடர்ந்து சந்தையில் இருந்தால், அதை யாரும் கண்டுகொள்வதேயில்லை. அந்தப் பொருளின் வெற்றிக்கு அடிநாதமாக இருந்தது எது என்பதை எவரும் ஆராய்ந்தது கிடையாது. அந்த நிறுவனத்துக்கு மட்டும்தான் வெற்றியின் ரகசியம் புரியும். அதையும் தொழில் போட்டி காரணமாக அந்நிறுவனம் வெளியிடாது. ஆனால் ஒரு பொருள் வெற்றி பெற்றதற்கான காரணத்தை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பதை அந்த நிறுவனம் தடுக்காது.

மேலும் அத்தகைய அறிவியல் பூர்வமான புள்ளி விவரங்களுடன் கூடிய ஆய்வுக் கட்டுரைகள் புதிய தொழில்முனைவோருக்கு நிச்சயம் பாடமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அத்தகைய ஆராய்ச்சியைத்தான் பேராசிரியர் கே. னிவாசன் மேற்கொண்டார்.

கோவையில் உள்ள ஜான்சன் வணிகவியல் கல்வி மையத்தின் பேராசிரியரான இவரது ஆய்வுக் கட்டுரை ``கேசில்’’ (Castle) எனப்படும் ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. டாடா நிறுவனம் டைட்டன், சோனட்டா, டைமெக்ஸ் என பல பிராண்டுகளில் கைக்கடிகாரங்களை வெளியிட்டது. இதில் குறிப்பாக குழந்தைகளுக்காக இந்நிறுவனம் வெளியிட்ட ஸூப் கடிகாரத்தின் வெற்றிக் கதையை புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடுகிறார் பேராசிரியர்.

2010-ம் ஆண்டுகளின் பிற்பாதியில் குழந்தைகளுக்கான கைக்கடிகாரங்களை ஸூப் என்ற பிராண்டுப் பெயரில் மறு அறிமுகம் செய்தது டைட்டன் நிறுவனம். இந்நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் வெற்றிகரமானதாக இது அமைந்து குழந்தைகள் மத்தியில் பிரபலமானது. இந்நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் கணிசமான வருவாயை ஸூப் ஈட்டியது.

குழந்தைகளுக்கான கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது ஏன், அதன் பின்னணி, இதில் உள்ள உத்தி ஆகியவற்றை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

குழந்தைகள் கைக்கடிகார சந்தை

1868-ம் ஆண்டு கைக்கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டபோதிலும் குழந்தைகளுக்கான கடிகாரங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியது 1930-ம் ஆண்டுகளுக்குப் பிறகுதான். சர்வதேச அளவில் வெகு சில நிறுவனங்களே குழந்தைகளுக்கான கடிகாரங்களைத் தயாரித்தன. இவை அனைத்துமே விலை அதிகம். ஆனால் டைட்டன் ஸூப் கடிகாரங்கள் மட்டுமே இந்தியக் குழந்தைகளுக்காக இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டன.

குழந்தைகளுக்கான கடிகார சந்தை மிகப் பெரிய அளவில் இருந்தபோதிலும், அதில் பிரபல நிறுவனங்கள் நுழைவது மிகப் பெரும் சவாலான விஷயமாகும். தரமான அதேசமயம் கட்டுபடியாகும் விலையில் இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது என்கிறார் இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக மேலாளர் வி.டி. வாத்வா.

இந்தியாவில் குழந்தைகள் கைக்கடிகார சந்தை

2009-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 36 சதவீதம் பேர் 14 வயதுக்குள்பட்ட பிரிவினராக இருப்பர் என தெரியவந்துள்ளது. கடிகார சந்தை வாய்ப்பு ரூ. 20 ஆயிரம் கோடி. இது உலகிலேயே மிக அதிகமான சந்தையாகும். இருப்பினும் குழந்தைகளின் ரசனை, விருப்பம் ஆகியவற்றைக் கண்டறிவது மிகவும் சவாலான விஷயமாகும். நிறம், வடிவமைப்பு, ஸ்டைல் ஆகியவற்றை மாற்றிக் கொண்டேயிருக்கவேண்டும். இத்தனை சிரமங்கள் இருந்தபோதிலும் அதை உணர்ந்தே இந்த பிரிவில் மறுபடியும் பிரவேசித்தது டைட்டன்.

குழந்தைகள் பிரிவை ஒரு வாய்ப்பாகப் பார்க்காமல் எதிர்கால வாடிக்கையாளராகப் பார்த்தது டைட்டன். ஸூப் கடிகாரம் மூலம் தொடர்ந்து வளர்ச்சியை எட்ட முடிவு செய்தது.

டைட்டன் நிறுவனம் வெவ்வேறு பிராண்டு பெயரில் கைகடிகாரங்களை பல்வேறு பிரிவினருக்காகத் தயாரிக்கிறது. சொனாட்டா – பெரும்பகுதி மக்களுக்கானது; ஃபாஸ்ட் டிராக் – இளைஞர்களுக்கானது; ராகா – யுவதிகளுக்கானது; எட்ஜ் – அழகிய தோற்றமுடையது. தங்கத்திலான ஸைலஸ் கடிகாரங்களைத் உயர் பிரிவினருக்காக தயாரிக்கிறது.

டைட்டன் நிறுவனம் உலகிலேயே 5வது பெரிய கடிகாரம் தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. பிரபல நிறுவன தயாரிப்புகள் விற்பனைச் சந்தையில் 70 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் கடிகார சந்தை அளவு ரூ.4,000 கோடியாகும். இதில் பிரபல நிறுவனத் தயாரிப்பு சந்தை ரூ. 3,000 கோடி. டைட்டன் நிறுவனம் 10 கோடி கடிகாரங்களை தயாரித்துள்ளது. இதன் வாடிக்கையாளர் வட்டம் 8 கோடியாகும்.

நீண்ட நாள் உத்தி - ஸூப்

நிறுவனத்தின் நீண்ட நாள் உத்தியாக இந்தியச் சந்தையில் குவார்ட்ஸ் கைக்கடிகாரங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கைக்கடிகாரங்கள் ஒவ்வொருவருக்கும் அழகு சேர்க்கும் ஒரு பொருள் என்ற நினைப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தியில் செயல்பட்டு இன்று சந்தையில் முதலிடத்தை அசைக்க முடியாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது. முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது.

செல்போன்கள் புழக்கத்துக்கு வந்தபிறகு கைக்கடிகாரங்கள் விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட கைக்கடிகாரத்துக்கு எப்போதும் அழிவிருக்காது என்பது புலனாகியுள்ளது. 25 வயதுக்குள்பட்டவர்கள் கைக்கடிகாரங்களை தவிர்த்தாலும், விற்பனையகத்தில் ஒவ்வொரு 12-வது நபரும் கேட்பது குழந்தைகளுக்கான கைக்கடிகாரங்களைத்தான் என்பது தெரியவந்தது.

மேலும் 3 வயது முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு செல்போன்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கைக்கடிகாரங்களுக்கு பள்ளிகளில் தடை கிடையாது. இதுவும் ஆய்வில் தெரியவந்தது. டைட்டன் நிறுவனம் 200 நகரங்களில் வெவ்வேறு தரப்பினரிடையே கருத்து கேட்டது. அதில் குழந்தைகள் தங்களுக்கு கைக்கடிகாரம், பை, தொப்பி உள்ளிட்டவை பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்ற விரும்பியது தெரியவந்தது.

குழந்தைகளுக்கான கைக்கடிகாரம்

டைட்டன் நிறுவனம் 1998-ம் ஆண்டு டாஷ் என்ற பிராண்டு பெயரில் முதலில் குழந்தைகளுக்கான கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் விலை அதிகமாக இருந்ததால் இதற்கு வரவேற்பு இல்லை. 2003-ம் ஆண்டு மறு அறிமுகம் செய்தபோது குழந்தைகளுக்கான கடிகாரத்தின் விலை

ரூ. 250 முதல் ரூ. 395 வரை என நிர்ணயித்தது.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நீர்புகா தன்மை, அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. சிறுவர்களுக்காக வெவ்வேறு நிறங்கள், சிறுமிகளுக்கு சில நிறங்கள் என ஒவ்வொரு பிரிவினரைக் கவரும் வகையில் கடிகாரங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தியது டைட்டன்.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை

டைட்டன் நிறுவனம் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உயர் தரத்திலான மூலப் பொருள் மூலம் இவை தயாரிக்கப்பட்டன. ஸ்டிராப்புகள் பாலியூரித்தேனால் ஆனவை. வண்ணங்கள் அனைத்தும் சான்று பெற்ற நிறமிகள். இவை கார்சினோஜெனிக் கலப்பு இல்லாதவை. தோலில் படும் பகுதியானது உயர் தரத்திலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினாலானவை. இதனால் தோல் வியாதி ஏற்படாது.

ஸூப் கடிகாரங்கள் இப்போது ரூ. 350 முதல் ரூ. 900 விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகளுக்கு பரிசளிக்க மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.

ஸூப் கைக்கடிகாரங்கள் 140 நகரங்களில் 1,200 விற்பனையகங்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

குழந்தைகளைப் பொறுத்தமட்டில் கடிகாரம் ஒரு பொருள்தான். அது அவர்களைக் கவர வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் குழந்தைகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஸூப். 5-வது ஆண்டிலேயே 10 லட்சம் கைக்கடிகாரங்களை விற்றுள்ளது டைட்டன்.

குழந்தைகளுக்கான தயாரிப்பு என்பதாலேயே தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது டைட்டன். ஆரம்ப காலத்தில் பெற்ற வளர்ச்சியை அந்நிறுவனம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

k.srinivasan@jsb.ac.in
தமிழில்: எம்.ரேமஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x