Published : 23 Feb 2021 02:01 PM
Last Updated : 23 Feb 2021 02:01 PM
பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.
தொடர்ந்து 12 நாட்களாக விலை உயர்ந்ததால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும், மத்தியப் பிரதேசத்தின் அணுப்பூரிலும் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் லிட்டர் ரூ.92 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது.
டீசல் விலையும் லிட்டர் ரூ.88க்கு மேல் உயர்ந்துவிட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் தொடர்ந்து பெட்ரோலிய உற்பத்தியை தொடர்ந்து குறைத்து வருகின்றன. உற்பத்தி குறைவால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விரைவில் இதற்கான நடவடிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தான் பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசுகள் அதிகமான வரியை விதிக்கின்றன.
இதனை குறைக்கும்படி தாங்கள் ஆளும் மாநில முதல்வர்களை அவர் முதலில் கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT