Last Updated : 12 Nov, 2015 11:25 AM

 

Published : 12 Nov 2015 11:25 AM
Last Updated : 12 Nov 2015 11:25 AM

ஜிஇ, அல்ஸ்தோம் நிறுவனங்களுடன் ரூ.40,000 கோடிக்கு ரயில்வே ஒப்பந்தம்

பிஹார் மாநிலத்தில் டீசல் இன்ஜின் தயாரிப்பு ஆலை மற்றும் மின்சாரத்தில் இயங்கும் இன்ஜின் தயாரிப்பு ஆலைகள் அமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகள் ஜிஇ மற்றும் அல்ஸ்தோம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜிஇ நிறுவனம் அமெரிக் காவைச் சேர்ந்தது. அல்ஸ்தோம் நிறுவனம் பிரான்ஸை தலைமை யகமாகக் கொண்டு செயல் படுகிறது. இரண்டு ஆலைகள் (ரூ. 3,345 கோடி) அமைப்பது தவிர இன்ஜின் சப்ளை செய்வது உள்பட மொத்தம் 560 கோடி டாலர் (ரூ. 37,100) கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம்.

டீசல் இன்ஜின் தயாரிப்பு ஆலை ரூ. 2,052 கோடி முதலீட்டில் பிஹார் மாநிலம் மர்கோரா எனுமிடத்தில் அமைய உள்ளது. இதேபோல மாதேபுரா எனுமிடத்தில் மின்சார இன்ஜின் தயாரிப்பு ஆலை ரூ. 1,293 கோடி முதலீட்டில் அமைய உள்ளது.

ஆலை அமைப்பது மற்றும் இன்ஜின் சப்ளை செய்வது தொடர்பாக மொத்தம் 560 கோடி டாலருக்கு (ரூ. 37,100 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலை அமைக்கும் திட்டப் பணிகளை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்கும். இந்த ஆலைகளிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 டீசல் இன்ஜின்களும், 800 மின்சார இன்ஜின்களும் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் மாநிலத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு தோல்வியைச் சந்தித்த நிலையில் தேர்தல் முடிவு வெளியான மறு நாளே இத்தகைய அறிவிப்பை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதற்கான ஒப்பந்தம் ஒரு மாதத்தில் கையெழுத்தாகும் என ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2007-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது இவ்விரு திட்டப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு இத்திட்டம் முடங்கிப் போனது.

டீசல் இன்ஜின் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கு ஜிஇ நிறுவனம் மிகக் குறைந்த அளவு தொகையை டெண்டரில் குறிப்பிட்டிருந்ததால் அந்நிறு வனத்துக்கு ஆர்டர் வழங்கப் பட்டுள்ளது. இந்நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 டீசல் என்ஜின்களைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 100 இன்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும் என தெரிகிறது.

``மேக் இன் இந்தியா’’ திட்டத்தின் அடிப்படையில் எஞ்சிய 900 இன்ஜின்களை மர்கோரா ஆலையில் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு வகையான டீசல் இன்ஜின்கள் தயாரிக்கப்படும். 4,500 குதிரைத் திறன் கொண்டவை மற்றும் 6,000 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின்கள் தயாரிக் கப்படும். ஜிஇ நிறுவனம் இந்தியா வில் 100 ஆண்டுகளாக இருந்த போதிலும் இந்நிறுவனத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அளவிலான ஆர்டர் (260 கோடி டாலர் ரூ. 17,300 கோடி) இதுவாகும்.

இந்த நவீன டீசல் இன்ஜின்களை பராமரிக்க இரண்டு பணிமனைகள் குஜராத் மாநிலம் காந்திதம் மற்றும் பஞ்சாப் மாநிலம் படிண்டாவில் அமைக்கப்படும்.

இதேபோல மின்சார இன்ஜின் தயாரிப்புத் திட்டத்துக்கான டெண் டரில் மிகக் குறைந்த தொகையை டெண்டரில் குறிப்பிட்டிருந்த அல்ஸ்தோம் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை அடுத்த 10 ஆண்டுகளில் 800 உயர் சக்தி கொண்ட மின்சார இன்ஜின்களைத் தயாரிக்கும். இந்த இன்ஜின்கள் 12 ஆயிரம் குதிரைத் திறன் கொண்டவையாகும். 5 இன்ஜின் கள் இறக்குமதி செய்யப்படும். எஞ்சிய 795 இந்த ஆலையில் தயாரிக்கப்படும். இந்த இன்ஜின்களை பராமரிப்பதற்கான ஆலைகள் நாகபுரி மற்றும் ஷாரன்பூரில் அமைய உள்ளன.

இவ்விரு திட்டப் பணிகளில் ரயில்வேத்துறையின் முதலீடு 26 சதவீதமாகும். ஆலைகள் அமைவதற்கான இடத்தை ரயில் வேத்துறை அளிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களான ஜிஇ மற்றும் அல்ஸ்தோம் நிறுவனங்களின் பங்கு 74 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x