Published : 02 Feb 2021 07:53 AM
Last Updated : 02 Feb 2021 07:53 AM

5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியில் தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் திட்டம்

புதுடெல்லி

நாட்டில் ஆராய்ச்சிக்கான சூழலை பலப்படுத்தும் வகையில், புதுமை சிந்தனை மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கு பல்வேறு புதிய முன்முயற்சிகள் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் பட்டுவாடாக்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் வளங்களைக் கண்டறிதல் போன்ற துறைகளில் பல திட்டங்களை அறிவித்தார்.

தேசிய ஆராய்ச்சி பவுன்டேஷன்

ஐந்தாண்டு காலத்தில் தேசிய ஆராய்ச்சி பவுண்டேசனுக்கு ரூ.50 ஆயிரம் கோடியிலான திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். ``நாட்டில் ஒட்டுமொத்த ஆராய்ச்சி சூழல் இதனால் வலுப்பெறும். தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அடையாளம் காணப்பட்ட துறைகளில் கவனம் செலுத்துவதாக இந்த ஆராய்ச்சிகள் இருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் பட்டுவாடாக்களுக்கு ஊக்கம் அளித்தல்

கடந்த சில காலமாக டிஜிட்டல் பட்டுவாடா எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் திருமதி சீதாராமன் தெரிவித்தார். இந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பட்டுவாடாக்களுக்கு ஊக்கம் அளிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சிக்கு இன்னும் உத்வேகம் அளிக்கவும் நிதியளவில் ஊக்கம் தருவதற்கான ஒரு திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மொழிபெயர்ப்பு மிஷன் (NTLM)

புதிதாக தேசிய மொழிபெயர்ப்பு மிஷன் (NTLM) உருவாக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. இணையதளங்களில் உள்ள நிர்வாகம்-மற்றும்-கொள்கை தொடர்பான விஷயங்களை, டிஜிட்டல் மயமாக்கி இந்தியாவின் முக்கிய மொழிகளில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.

இந்தியாவின் விண்வெளித் துறை

விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் புதிய விண்வெளி இந்தியா லிமிடெட் (NSIL) என்ற பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்படும். பிரேசிலில் இருந்து இந்தியாவின் நான்கு சிறிய செயற்கைக்கோள்களுடன், அமேசானியா செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சிஎஸ்51 ராக்கெட்டை ஏவுதலை இந்த நிறுவனம் செயல்படுத்தும். விண்வெளி பயணத்துக்கான அடிப்படை அம்சங்களில் நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷியாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். 2021 டிசம்பரில் மேற்கொள்ளப்படும் ககன்யான் மிஷனில் பயணம் செல்ல அவர்கள் இந்தப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

ஆழ்கடல் வளம் கண்டறியும் ஆய்வு

பெருங்கடல்களின் வளங்கள் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காக ஆழ்கடல் வளம் கண்டறியும் மிஷன் ஒன்று தொடங்கப்படும் என திருமதி சீதாராமன் அறிவித்தார். ஐந்தாண்டுகளில் இதற்கு பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி அளிக்கப்படும். ஆழ்கடல் வளங்களைக் கண்டறிதல் மற்றும் ஆழ்கடல் பல்லுயிர்ப் பெருக்க சூழலைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் இதில் உருவாக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x