Published : 01 Feb 2021 04:40 PM
Last Updated : 01 Feb 2021 04:40 PM
உள்ளூர் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுங்க வரியிலும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் இவ்வாறு கூறிய அவர், கடந்த சில மாதங்களாக சாதனை அளவாக ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி-யை மேலும் எளிதாக்கவும், குறைபாடுகளை களையவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறந்த ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், மூலப் பொருட்களை எளிதில் அணுகவும், மதிப்புக்கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்பு அளிக்கப்பட்டிருந்த 400 வரி விலக்குகளை ஆய்வு செய்து இந்த ஆண்டு சுங்க தீர்வையை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றியமைக்கப்படும் சீரான சுங்கத் தீர்வை முறையை கொண்டுவர 2021 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
மொபைல் போன்களுக்கான மின் ஊக்கிகள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான சில வரி விலக்குகளை திரும்பப் பெறுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். சில வகை உதிரிப்பாகங்களுக்கு மிதமான வகையில் 2.5 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
துருப்பிடிக்காத உருக்கு, உலோகக் கலப்பு மற்றும் உலோகக் கலப்பற்ற பொருட்களுக்கு ஒரே சீராக 7.5 சதவீதம் என்ற விதத்தில் சுங்கத் தீர்வை குறைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். தாமிரப்பட்டைக்கான சுங்கத்தீர்வை ஐந்து சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
மனிதர்கள் உருவாக்கும் ஜவுளிகளுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியை சீராக்கும் வகையில், பாலியெஸ்டர், நார்ப்பொருட்கள், நைலான் வகைக்கு ஐந்து சதவீதம் என்ற சீரான வரி விதிக்கப்படும். இது ஜவுளித்துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும் என்று அமைச்சர் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கத் தீர்வை சீரமைப்பையும் அமைச்சர் அறிவித்தார்.
சூரியசக்தி தகடுகள், மற்றும் மின் ஊக்கிகளை படிப்படியாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் சூரியசக்தி மாற்றிகள் மீதான வரியை ஐந்து சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார்.
இதே போல சூரியசக்தி விளக்குகள் மீதான தீர்வையும் ஐந்து சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கனரக உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளப்பரிய ஆற்றல் உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். சிலவகை வாகன உதிரிப் பாகங்களுக்கு 15 சதவீதம் அளவுக்கு வரி உயர்வை அவர் அறிவித்தார்.
இரும்புத் திருகாணிகள், பிளாஸ்டிக் கட்டுமானப் பொருட்கள், இறால் மீனுக்கான உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான தீர்வை 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், பருத்திக்கு பத்து சதவீதம் என்ற அளவுக்கும், கச்சாப் பட்டு, பட்டு நூல் ஆகியவற்றுக்கு 15 சதவீதம் அளவுக்கும் சுங்கத் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் எனப்படும் கூடுதல் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வரியை விதிக்கும் போது நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வண்ணம் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தங்கம், வெள்ளி, ஆல்கஹால் கலந்த திரவங்கள், கச்சா பனை எண்ணெய், கச்சா சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆப்பிள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சிலவகை உரங்கள், பட்டாணி, காபூல் கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை, பருத்தி ஆகியவை இந்த வரி வரிவிதிப்பின் கீழ் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50-ம் டீசலுக்கு நான்கு ரூபாயும் கூடுதல் வரி விதிக்கப்படும். இருப்பினும் பெட்ரோல், டீசல் மீது அடிப்படை கலால் வரி மற்றும் சிறப்புக் கூடுதல் கலால் வரி விகிதங்கள் நிதி நிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளதால் நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT