Published : 01 Feb 2021 12:15 PM
Last Updated : 01 Feb 2021 12:15 PM
சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்கவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
வரும் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
அதன்பின்னர் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் நாடாளுமன்றம் தொடங்கியதை தொடர்ந்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவரது அறிவிப்பில் தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். அந்த வகையில் கொச்சி மெட்ரோ பணிகள் விரிவாக்கத்துக்கு 1,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. செய்யப்படுகிறது.
இந்திய ரயில்வே வழித்தடங்கள் மேம்பாட்டுக்கு மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் 118 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ. தூரத்துக்கு சாலைப் பணிகள் அமைக்கப்படும்.
அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடத்திற்கான நெடுஞ்சாலை அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல மேற்கு வங்களத்துக்கு 25,000 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை கொல்லம் வரை நவீன வசதிகளுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT