Published : 27 Jan 2021 05:42 PM
Last Updated : 27 Jan 2021 05:42 PM

கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை: ரூ.10,335ஆக உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

2021ம் ஆண்டில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பிரதமர் தலைமையிலான, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9960ஆக இருந்தது. இது தற்போது ரூ.375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,300 ஆக இருந்தது. தற்போது, ரூ.300 அதிகரிக்கப்பட்டு 2021ம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைவிட, காய்ந்த கொப்பரைக்கு 51.87 சதவீத வருவாயையும், முழு கொப்பரைக்கான வருவாயை, 55.76 சதவீதமும் உறுதி செய்யும்.

வேளாண் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய உற்பத்தி செலவை விட, குறைந்த பட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என கடந்த 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு 50 சதவீத லாபத்தை உறுதி செய்கிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் இது முக்கியமானது.

தென்னை வளர்க்கப்படும் மாநிலங்களில், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலை மேற்கொள்வதில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, ஆகியவை, மத்திய அரசின் முகமைகளாக தொடர்ந்து செயல்படும்.

2020ம் ஆண்டில், 4896 தென்னை விவசாயிகளிடமிருந்து, 5053.34 டன் முழு கொப்பரைத் தேங்காயையும், 35.58 டன், காய்ந்த கொப்பரை தேங்காயையும் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x