Published : 13 Oct 2015 09:59 AM
Last Updated : 13 Oct 2015 09:59 AM

தொழில் கலாச்சாரம்: சாப்ட்வேரில் சவால் விடுக்கும் பிலிப்பைன்ஸ்!

பல பத்தாண்டுகளுக்கு முன்னால், ஏழை நாடாக நாம் பார்க்கப்பட்டோம். இன்று நமது வளர்ச்சி உலகைப் பிரமிக்கவைக்கிறது. இதற்குக் காரணம், கம்ப்யூட்டர் மென்பொருளில் நமது அபாரத்திறமை, இதனால், நம்மை நம்பி வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் அவுட்சோர்ஸிங் பிராஜெக்ட்டுகள் வந்து குவிகிறது.

தோலோன்ஸ் (Tholons) என்னும் ஆலோசனை நிறுவனம், உலகில் அவுட்சோர்ஸிங் பணிகளைக் கச்சி தமாகச் செய்துமுடிக்கும் நகரங்களை ஆண்டுதோறும் திறமை வாரியாகப் பட்டியலிடுகிறது. இவர்களுடைய அண்மைக் கணிப்பின்படி, முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கும் நகரங்கள்:

முதல் இடம் பெங்களூரு

இரண்டாவது இடம் மணிலா (பிலிப்பைன்ஸ்)

மூன்றாவது இடம் மும்பை

நான்காவது இடம் தில்லி

ஐந்தாவது இடம் சென்னை

ஆமாம், நமக்கு முக்கிய போட்டி பிலிப்பைன்ஸ்தான்.

பூகோள அமைப்பு

பிலிப்பைன்ஸ் நாடு, பிலிப்பைன்ஸ் கடலுக்கும், தென்சீனக் கடலுக்கும் நடுவே இருக்கும் தீவுக்கூட்டம். 7,107 தீவுகள் கொண்டது. வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகே இருக்கிறது. நிலப்பரப்பு மூன்று லட்சம் சதுரக் கிலோமீட்டர்கள். தலைநகர் மணிலா.

சுருக்க வரலாறு

2,50,000 ஆண்டுகளுக்கு முன்பா கவே மக்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள். 1380 இல், போர்னியோ நாட்டிலிருந்து முஸ்லிம்கள் வந்து குடியேறத் தொடங்கி னார்கள். 1542 இல், ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்பல் ஆய்வு பயணம் செய்துகொண்டிருந்த ஒரு குழு, இந்தத் தீவுக் கூட்டத்துக்கு பிலிப்பைன்ஸ் என்று பெயர் வைத்தார்கள். இது ஸ்பெயின் இளவரசர் பெயர். பல ஸ்பானிஷ் காலனி மக்கள் இங்கே குடியேறினார்கள். அடுத்த 300 ஆண்டுகள் ஸ்பானிஷ் ஆட்சி. 1898 காலகட்டத்தில், ஸ்பெயினுக்கும், அமெரிக்காவுக்குமிடையே போர் வந்தது. தோல்வி கண்ட ஸ்பெயின், பிலிப்பைன்ஸை அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பித்தது. அவர்கள் ஆதரவோடு ராணுவ ஆட்சி நடந்தது.

அடுத்த சில வருடங்கள். ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் இறங்கினர். மக்களாட்சி தொடங்கியது. அடுத்த பத்து வருடங்களில் முழு சுதந்திரம் தர அமெரிக்கா சம்மதித்தது. இப்போது ஒரு திருப்பம். 1941 இல் ஜப்பான் பிலிப்பைன்ஸை பிடித்தது. மறுபடியும் கைப்பற்றிய அமெரிக்கா, 1946 இல் முழு சுதந்திரம் வழங்கியது. பிலிப்பைன்ஸ் குடியரசு என்னும் புதிய பெயரோடு பயணம் ஆரம்பம். அதே சமயம், தங்கள் நாட்டில் அமெரிக்கா ராணுவ முகாம்கள் அமைக்கவும் பிலிப்பைன்ஸ் சம்மதம் தந்தது.

நாட்டு வரலாற்றில், 1965 முதல் 1986 வரை, பெர்டினான்ட் மார்க்கோஸ் ஜனாதிபதியாக இருந்த 21 ஆண்டுகள் ஒரு சோக சகாப்தம். இவர் செய்யாத அராஜகங்கள், ஊழல்கள் இல்லை. மக்கள் எதிர்ப்பு பொங்கியவுடன், ஹவாய் தீவுக்கு ஓடிப்போனார். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும், இதே ஊழல் பாதை போட்டார்கள். இன்றைய குடியரசுத் தலைவர் மூன்றாம் அக்யுனோ 2010 இல் ஆட்சிக்கு வந்தார். முஸ்லிம் புரட்சியாளர்களும், கம்யூனிஸ்டுகளும் அரசுக்கு எதிராகக் கொரில்லாப் போர்களுக்கு நடுவே, ஐந்து ஆண்டுகள் முடித்துவிட்டார். அடுத்த தேர்தல் மே 2016 இல்.

மக்கள் தொகை

பத்து கோடி பத்து லட்சம். கத்தோலிக்கர்கள் 83 சதவீதம். முஸ்லிம்கள் 5 சதவீதம். கிறிஸ்தவர்கள் 5 சதவீதம். மற்றவர்கள் பிறர். கல்வியறிவு 96 சதவீதம். ஆண்கள் 96, பெண்கள், கொஞ்சம் அதிகமான 97 சதவீதம். பெரும்பாலானோர் சிறந்த ஆங்கில அறிவு கொண்டவர்கள். அவுட்சோர்ஸிங்கில் சாதனை படைப்பதற்குக் கல்வி அறிவும், ஆங்கில ஞானமும் முக்கிய காரணங்கள்.

ஆட்சிமுறை

செனட் என்னும் மேல்சபை: ஹெளஸ் ஆஃப் ரெப்ரசென்டேட்டிவ்ஸ் என்னும் கீழ்சபை. நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. சபை அங்கத்தினர்கள், ஜனாதிபதி ஆகிய அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பொருளாதாரம்

விவசாயத்தின் பங்கு சுமார் 11 சதவீதம். நெல், கரும்பு, தென்னை, வாழை, மரவள்ளிக் கிழங்கு, அன்னாசிப் பழம், மாம்பழம் ஆகியவை முக்கிய பயிர்கள். தொழில் துறையின் பங்கு 31 சதவீதம். எலெக்ட்ரானிக் கருவிகள், ஆயத்த ஆடைகள், காலணிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை முக்கிய தொழில்கள். இதில் இந்தியாவின் பங்கும் உண்டு. கிளென்மார்க் (Glenmark), ஜைடஸ் (Zydus) போன்ற இந்திய மருந்துக் நிறுவனங்கள், ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஜவுளிபிரிவு ஆகியோரின் தொழிற்சாலைகளும், பிலிப்பைன்ஸில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

சேவைத்துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 58 சதவீதம். இதில் பிபிஓக்களின் பங்கு கணிசமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிலிப்பைன்ஸ் பிபிஓ, துறையின் வளர்ச்சி இருபது சதவீதம். லோக்கல் திறமையைப் பயன்படுத்தி, உலகச் சந்தையில் அதிக இடம் பிடிக்க, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்களும், இங்கே பிபிஓ. மையங்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸில் எழுபதாயிரத் துக்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களுள் பெரும்பா லானோர் சிந்திகளும், பஞ்சாபிகளும். சிந்திகள் வியாபாரத்திலும், பஞ்சா பிகள் லேவாதேவியிலும் ஈடுபட்டிருக் கிறார்கள்.

நாணயம்

பெசோ (Peso). ஒரு ரூபாய் 40 காசு கொடுத்தால், ஒரு பெசோ வாங்கலாம்.

இந்தியாவோடு வியாபாரம்

பிலிப்பைன்ஸுக்கு நமது ஏற்றுமதி ரூ. 8,526 கோடிகள். இவற்றுள் முக்கியமானவை மாட்டிறைச்சி, இரும்பு, உருக்கு, மருந்துகள், ரப்பர் சாமான்கள், கெமிக்கல்கள். நம் இறக்குமதி ரூ. 2,585 கோடிகள். எலெக்ட்ரானிக் கருவிகள், நியூஸ்பிரிண்ட் காகிதம், அட்டை, ஒளியியல் கருவிகள் (Optical Instruments) போன்றவை இறக்குமதி ஐட்டங்களில் இடம் பெறுகின்றன.

விசிட்

மே முதல் அக்டோபர் வரை மழை அதிகம். இந்த மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பிசினஸ் டிப்ஸ்

பத்து மணிக்குச் சந்திப்பு என்றால், “டாண்” என்று வந்து நிற்கமாட்டார்கள். ஆனால், பத்தரைக்குள் வருவார்கள். ஆகவே, நேரத்தைப் பொறுத்தவரையில் ஒரளவு நீக்குப் போக்குக்குத் தயாராக இருங்கள். குறிப்பாகச் சமூகச் சந்திப்புகள், பொது நிகழ்ச்சிகள் என்றால், தாமதமாகத்தான் வருவார்கள். அதுவும், பிரபலங்களின் முக்கிய அடையாளம், நிகழ்ச்சிகளுக்குத் தாமதமாக வருதல்.

முன்னதாகவே நேரத்தை உறுதி படுத்தினால் மட்டுமே முக்கியஸ் தர்களைச் சந்திக்க முடியும். அரசாங்க அதிகாரிகள் என்றால், நீங்கள் விஐபியாக இருந்தாலொழிய, உயர்மட்ட அதிகாரிகளை முதலில் சந்திக்கமுடியாது. ஒவ்வொரு படிநிலை யாகத்தான் சந்திக்கவேண்டும். உள்ளூர் ஏஜென்ட் நியமித்துக்கொள்வது நல்லது.

ஏகதேசம் எல்லா பிசினஸ்மேன் களுக்கும் ஆங்கிலம் தெரியும். ஆகவே, விசிட்டிங் கார்டுகள் ஆங்கி லத்தில் மட்டுமே போதும். பேச்சு வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் நடத்தலாம். தங்கள் விசிட்டிங் கார்ட் களில் சில சமயங்களில் வீட்டு டெலி போன் நம்பர்களையோ, மொபைல் நம்பர்களையோ தருவார்கள். நீங்கள் போன் செய்யவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள் என்று இதற்கு அர்த்தம்.

முடிவுகள் பல மட்டங்களில் எடுக்கப்படும். ஆகவே, உடனடி பதில்களை எதிர்பார்க்காதீர்கள். பிலிப்பைன்ஸ் மக்கள் உரத்த குரலில் பேசமாட்டார்கள். பிறர் உணர்ச்சிகளைக் காயப்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இதனால், பேச்சு வார்த்தைகளின்போது அவர்கள் “ஆமாம்” என்று சொன்னால், அது இறுதி முடிவல்ல. ஒப்பந்தம் என்று வரும்போது அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம்.

பிசினஸ் உறவுகளை வளர்ப்பதில் விருந்துகள் மிக முக்கியமானவை. அதுவும், குறிப்பாக பிசினஸ் டீல் முடிந்துவிட்டால் விருந்து நிச்சயம் உண்டு. இரவு விருந்துகளுக்கு பிசினஸ்மேன்களின் மனைவிகளையும் அழைக்கவேண்டும். வெறும் பெயரைச் சொல்லி யாரையும் விளிக்கக்கூடாது. Mr, Mrs, Miss ஆகிய அடைமொழிகளை முன்னால் சேர்த்தே கூப்பிடவேண்டும்.

செய்யக்கூடாத உடல்மொழிகள் சுட்டுவிரல் நீட்டுதல், கண்களை உற்றுப் பார்த்தல். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நிற்பது கர்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

உடைகள்

வெயில் அதிகமாக இருப்பதால், பாண்ட், ஷர்ட் போதும், சில பாரம் பரியக் நிறுவனங்கள் சிஇஓக்களை சந்திக்கும்போது கோட், சூட் எதிர்பார்ப் பார்கள். உங்கள் ஏஜென்ட் ஆலோசனை யைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

பரிசுகள் தருதல்

பிலிப்பைன்ஸ் பிசினஸில் மிக முக்கியம். விலை உயர்ந்த பரிசுகள் தேவையில்லை. உங்கள் முன்னால் அவற்றைத் திறக்கமாட்டார்கள். சில நிறுவனங்களில் லஞ்சம் இருக்கிறது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x