Published : 27 Oct 2015 10:04 AM
Last Updated : 27 Oct 2015 10:04 AM

தொழில் கலாச்சாரம்: பூலோக சொர்க்கத்திலும் வாய்ப்புகள் ஏராளம்!

ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில், அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில், பறவைகள் போல் மயங்கித் திரிய வேண்டுமா? வெள்ளி மேகம் துள்ளியெழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில் புதுவிதமான சடுகுடு விளையாட வேண்டுமா? நீங்கள் போகவேண்டிய இடம் ஸ்விட்சர்லாந்து. கோடிக்கணக்கான பேருக்கு இதுதான் பூலோக சொர்க்கம்.

பூகோள அமைப்பு

மத்திய ஐரோப்பாவில் இருக்கும் நாடு. பிரான்சின் கிழக்கில், இத்தாலியின் வடக்கில். ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, லிஸ்ட்டென்ஸ்டெய்ன் (Liechtenstein) ஆகியவை அண்டை நாடுகள். நிலப்பரப்பு 41,284 சதுர கிலோமீட்டர்கள். இதில் சுமார் 60 சதவீதம் ஆல்ப்ஸ் மலை. மலையின் பனிக்கட்டிகள் உருகிவரும் ரைன் (Rhine) நதி நாட்டைப் பசுமைப் பிரதேசமாக்குகிறது.

சுருக்க வரலாறு

நாகரீகம் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல், நான்காம் நூற்றாண்டு வரை, ரோம சாம்ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்தது. கி.பி. 401 இல் இதிலிருந்து விடுபட்டு, பல தனியரசுகளானது. ஏராளமான ஜெர்மானியர்கள் வந்து குடியேறினார்கள்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் கொண்ட புனித ரோம சாம்ராஜ்ஜியம் என்னும் கூட்டமைப்பு உருவானது. கி.பி. 1291 இல் மூன்று தனியரசுகள் இணைந்து ஒரே நாடானது. 1353 இல், இன்னும் பல பகுதிகள் சேர்ந்தன. இன்றைய ஸ்விட்சர்லாந்தாக வடிவெடுத்தது. 1499 இல், கூட்டணியிலிருந்து வெளியேறியது, தனி நாடானது. 1848 - இல் வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தின்படி, குடியரசாக இயங்குகிறது. நடுநிலைமை நாடு. இரண்டு உலகப் போர்களிலும், ஒரு அணியிலும் சேரவில்லை. தற்காப்புக்காக, அனைத்துக் குடிமக்களுக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம்.

மக்கள் தொகை

81 லட்சம். இதில், ஜெர்மானியர்கள் 65 சதவீதம்: பிரெஞ்சுக்காரர்கள் 23 சதவீதம்: இத்தாலியர்கள் 8 சதவீதம்: ரோமானியர்கள் என்னும் இனப் பிரிவினர் அரை சதவீதம். எஞ்சியவர்கள் பிறர். இதனால், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ரோமன்ஸ் ஆகிய நான்கு மொழிகளும் பேசப்படுகின்றன. நான்குமே ஆட்சிமொழிகள். மத நம்பிக்கைபடி, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 38 சதவீதம்; பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் 27 சதவீதம்; பிற கிறிஸ்தவர்கள் 6 சதவீதம் முஸ்லிம்கள் 8 சதவீதம் மத நம்பிக்கைகள் இல்லாதவர்கள் 21 சதவீதம். கல்வியறிவு மிக அதிகம் - 99 சதவீதம். ஆண்களும், பெண்களும் சமமாகக் கல்வியறிவு பெற்றவர்கள்.

ஆட்சிமுறை

மக்களாட்சி. கான்ட்டன்கள் (Cantons) என்று அழைக்கப்படும் 26 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு கான்ட்டனுக்கும் ஒரு கவுன்சில். மொத்தமாக நாட்டுக்கு, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்னும் மேல் சபை. நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. கவுன்சில் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் பதவிக்காலம் ஒரே ஒரு வருடம்தான். மக்கள் குரலே மகேசன் குரல் என்று கடைபிடிக்கும் நாடு ஸ்விட்சர்லாந்து. முக்கிய பிரச்சினைகளில், நேரடியாக மக்கள் வாக்களிக்கும் தேர்தல்கள் நடத்தியே முடிவெடுக்கிறார்கள்.

பொருளாதாரம்

சேவைத் துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது - 72 சதவீதம். இதில் நிதித் துறையின் பங்கு அதிகம். உலக நிதிப் பரிவர்த்தனைகளில் ஸ்விட்சர்லாந்து ஒரு முக்கிய மையம். தொழில் துறையின் பங்கு 27 சதவீதம். ஸ்விஸ் வாட்ச்களின் பாரம்பரியத் துல்லியம் நம் எல்லோருக்கும் தெரியும். இதேபோல், நுண்ணியமான இயந்திரங்கள் தயாரிப்பிலும் ஸ்விட்சர்லாந்து முன்னணியில் நிற்கிறது. விவசாயத்தின் பங்கு ஒரே ஒரு சதவீதம் மட்டுமே.

நாணயம்

பிராங்க் (Franc). ஒரு பிராங்க் சுமார் 68 ரூபாய்.

இந்தியாவோடு வியாபாரம்

ஸ்விட்சர்லாந்துக்கு நம் ஏற்றுமதி ரூ. 6,538 கோடி. இவற்றுள் முக்கியமானவை உலோகங்கள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், ஷூக்கள், தேயிலை, கையால் நெய்த தரை விரிப்புகள் போன்றவை. நம் இறக்குமதி ரூ. 1,35,367 கோடி. இதில் சுமார் 90 சதவீதம் தங்கம், நகைகள் ஆகியவை. இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள், வாட்ச்சுகள், கெமிக்கல்கள், மருந்துகள், சாயங்கள், பேப்பர் ஆகியவை மற்ற முக்கிய பொருள்கள். 1856 ஆம் ஆண்டிலேயே இந்தியா ஸ்விஸ் வணிக உறவுகள் தொடங்கிவிட்டன. ஸ்விஸ் கூட்டுறவோடு, வோல்க்காட் பிரதர்ஸ் (Volkart Broothers, இன்றைய Voltas) தங்கள் வணிக முயற்சிகள் தொடங்கினார்கள். இன்று இருநூறுக்கும் அதிகமான இந்தோ- ஸ்விஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் செயல்பட்டு வருகின்றன. நெஸ்லே, கிளாக்சோ, மருந்துகள் தயாரிக்கும் Merck, Novartis ஆகியவை இந்தியாவில் இருக்கும் பிரபல ஸ்விஸ் நிறுவனங்கள். ஸ்விட்சர்லாந்தில், இன்ஃபோசிஸ், மைன்ட் ட்ரீ (Mindtree), டிசிஎஸ், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ், ராம்கோ போன்ற இந்திய நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. ஸ்விட்சர்லாந்தில் சுமார் 16,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் பல சங்கங்கள் இருக்கின்றன. வர்த்தகத்துக்கு இந்தத் தொடர்புகள் உதவலாம்.

பயணம்

டிசம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம். கோடையில் வாழ்ந்து பழகிய நமக்கு இது கொஞ்சம் சிரமம் தரலாம். ஜூலை. ஆகஸ்ட் மாதங்களில் ஏராளமானோர் விடுமுறை எடுக்கிறார்கள். மற்ற எல்லா மாதங்களும் விசிட்டுக்கு இனிமையானவை.

பிசினஸ் டிப்ஸ்

காலம் தவறாமைக்கு எடுத்துக்காட்டே ஸ்விட்சர்லாந்துதான். பிசினஸ் மீட்டிங்குகள், பொது நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்: அடுத்தவர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். சந்திக்கும்போது, கை குலுக்குதல்தான் வரவேற்பு முறை. அனைவருக்கும் மரியாதை தரும் நாடு. முதியவர்கள் வரும்போது, பஸ், ரெயில்களில் அவர்களுக்கு உட்கார இடம் இல்லாவிட்டால், எழுந்து இடம் தாருங்கள். நீங்கள் செய்யாவிட்டால், பண்பாடற்ற செயலாகக் கருதுவார்கள். வெறும் பெயரைச் சொல்லி யாரையும் அழைப்பதில்லை. Dr., Mr, Mrs, Miss ஆகிய அடைமொழிகளை முன்னால் சேர்த்தே கூப்பிடுகிறார்கள். நெருக்கம் ஏற்பட நாட்களாகும், ஆனால், பழகியபின், அற்புதமான நட்புணர்வு காட்டுகிறார்கள். பிசினஸ் சந்திப்புகளுக்கு அப்பாயின்ட்மென்ட் அத்தியாவசியம். இல்லாவிட்டால், முக்கிய மானவர்களைச் சந்திக்க முடியாது. விசிட்டிங் கார்டுகள் அவசியம். பிசினஸில் அதிக நாட்கள் நீடித்திருக்கும் கம்பெனிகளுக்கு மதிப்புத் தருகிறார்கள். உங்கள் நிறுவனம் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவா? தவறாமல், உங்கள் லெட்டர்ஹெட்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் குறிப் பிடுங்கள். உங்கள் பிசினஸ் முயற்சிகள் ராஜபாட்டையாகும்.

பிசினஸ் பேச்சு வார்த்தைகளின்போது, தீவிரக் கவனத்தை எதிர்பார்க்கிறார்கள். ஜோக் அடிப்பது கூடவே கூடாது. பிரெஞ்சு, இத்தாலி இனத்தவர்கள் ஓரளவு உணர்ச்சி பூர்வமானவர்கள். ஜெர்மன் இனத்தவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை. சீக்கிரம் முடிவுகள் எடுக்கமாட்டார்கள். விவரங்கள் தேடுவார்கள். ஆனால், நேர்மை யானவர்கள். வாக்குக் கொடுத்துவிட்டால், ஒப்பந்தம் கையெழுத்துப்போட்டது போல்தான். வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.

சீக்கிரம் எழுந்து சீக்கிரம் தூங்குகிற பழக்கம் கொண்டவர்கள். இரவு ஒன்பது மணிக்குமேல் யாருக்கும் போன் செய்யவேண்டாம். பெரும் பாலும், தூங்கியிருப்பார்கள்.

உடைகள்

பிசினஸ் சந்திப்புகளுக்கு சூட், முழுக் கைச்சட்டை, டை அணிவது நல்லது.

பரிசுகள் தருதல்

பரிசுகளை எதிர்பார்ப்பதில்லை. அப்படி நீங்கள் எடுத்துக்கொண்டு போனால், விலை உயர்ந்த பரிசுகளும், கம்பெனி லோகோவைப் போட்ட பரிசுகளும் வேண்டாம். நம் நாட்டின் பாரம்பரியக் கலைப்பொருட்களைத் தரலாம். slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x