Published : 06 Oct 2015 10:30 AM
Last Updated : 06 Oct 2015 10:30 AM
பள்ளித் தேர்வுகளிலும், வினாடி வினா போட்டிகளிலும் கேட்கும் கேள்விகள்:
தென் ஆப்பிரிக்கா தலைநகரம் எது?
கியூபா தலைநகரம் எது?
அயர்லாந்துத் தலைநகரம் எது?
நமக்கு இந்த நாடுகள் பற்றித் தெரியும். ஆனால், இவற்றின் தலைநகரங்களைத் தெரியுமா என்பதற்காகத்தான் இந்த அறிவுச் சோதனை. சில நாடுகள் இதற்கு விதிவிலக்கானவை. இவற்றின் தலைநகரங்கள் உலகப் பிரபலம். உதாரணமாக, பாங்காக் எல்லோருக்கும் தெரிந்த கேளிக்கை நகரம். ஆனால், இது தாய்லாந்து நாட்டின் தலைநகரம் என்பது அத்தனை பேர் அறிந்திராத விவரம்.
இந்தியாவுக்கும்,தாய்லாந்துக்கும் காலம் காலமாகவே நெருங்கிய தொடர் புகள் உண்டு. பேரரசர் அசோகர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், சோனதீரா, உத்தரதீரா என்னும் புத்த சந்நியாசி களைத் தாய்லாந்துக்கு அனுப்பினார். அங்கே, 94 சதவீத மக்கள் பின்பற்றும் புத்த மதத்துக்கு வித்திட்டவர் பேரரசர் அசோகர்தான்.
பூகோள அமைப்பு
தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவின் மத்திய பகுதியில் இருக்கிறது. அந்த மான் கடல், தாய்லாந்து ஜலசந்தி இரு பக்கங்களில். பர்மா, லாவோஸ், கம்போடியா, மலேசியா ஆகியவை அண்டைய நாடுகள். நிலப்பரப்பு 5,13,120 சதுரக் கிலோமீட்டர்கள். மலை கள், சமவெளிகள் நிறைந்த பிரதேசம்.
சுருக்க வரலாறு
தாய்லாந்தின் முந்தைய பெயர் சயாம் (Siam). லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே, கற்காலத்தில் மக்கள் இங்கே வாழ்ந்துள்ளதாக நம்பப்படு கிறது. இன்றைய தாய் மக்கள் சீனாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
10 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை - கம்போடியாவின் கொடிக்கீழ்.
1352 முதலாம் ரமாத்திபோடி (Ramathibodi I ) என்னும் பேரரசர் ஆயுத்தாயா (Ayutthaya) என்னும் வம்சாவளியை நிறுவினார். இவரும், இவர் வழி வந்தவர்களும், அண்டைய நாடுகளுக்கு நட்புக்கரம் நீட்டினார்கள், வணிக உறவுகளை வளர்த்தார்கள்.
1767 பர்மா படையெடுத்து வந்து ஆக்கிரமிக்கிறது.
1782 முதலாம் ராமா என்னும் சயாம் மன்னர் அரியணை ஏறுகிறார். சாக்ரி வம்சாவளி (Chakri Dynasty) தொடங்குகிறது. நவீனப் பாதையில் நாடு காலடி எடுத்துவைத்தது.
1932 அரசருக்கு எதிராகப் புரட்சி. அவரைத் தலைவராக ஏற்கும் மக்களாட்சி மலர்கிறது.
1939 சயாம் என்னும் பெயரை, தாய்லாந்து என்று மாற்றுகிறார்கள். “சுதந்திர நாடு” என்பது இந்தப் புதிய பெயரின் அர்த்தம்.
1941, 1942 ஜப்பான் படைகள் தாய்லாந்தில் நுழைகின்றன. தாய்லாந்து அவர்களை அனுமதிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கப் படைகளைத் தாக்குகிறது.
1945 இரண்டாம் உலகப் போர் முடிவு. தான் வென்ற பகுதிகளைத் தாய்லாந்து திருப்பித் தருகிறது.
1947 ஜப்பானை ஆதரிக்கும் ராணுவப் புரட்சி. 26 ஆண்டுகள் ராணுவ ஆட்சி.
1973 மாணவர் போராட்டங்கள். மக்களாட்சி.
1976 மக்களாட்சியால் நிலையான அரசு தரமுடியவில்லை. மறுபடியும் ராணுவம் பதவியில்.
1983 ராணுவமே மறுபடி மக்களாட் சியைக் கொண்டு வருகிறார்கள்.
1992 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவத் தொடர்பில்லாதவர் முதலமைச்சராகிறார்.
1992 2006. நிலையில்லாத பல மக்களாட்சிகள்.
2006 - ராணுவப் புரட்சி.
2007 - மறுபடியும் ஜனநாயகம். ஊழல்கள். பல ஆட்சி மாற்றங்கள்.
2014 - ராணுவப் புரட்சி.
2016 இல் தேர்தல்கள் நடக்கலாம் என்று தோன்றுகிறது.
மக்கள் தொகை
ஆறு கோடியே எண்பது லட்சம். 96 சதவீதம் மண்ணின் மைந்தர்கள். 2 சதவீதம் பர்மியர்கள். மிச்சம் பிறர். மக்களில் 94 சதவீதம் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். 5 சதவீதம் முஸ்லீம்கள். 1 சதவீதம் கிறிஸ்தவர்கள். மொழி, தாய். கல்வியறிவு சுமார் 97 சதவீதம். ஆண்களோடு, பெண்களும் சமக் கல்வியறிவு கொண்டவர்கள்.
ஆட்சிமுறை
மக்கள் தேர்ந்தெடுக்கும் அசெம்பிளி. நாட்டுத் தலைவர், வம்சாவளி முறையில் பதவிக்கு வரும் அரசர். நிர்வாகத் தலைவர் முதலமைச்சர்.
பொருளாதாரம்
விவசாயத்தின் பங்கு சுமார் 12 சதவீதம், முக்கிய பயிர்கள் அரிசி, சோளம், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, தேங்காய், பனை, அன்னாசிப் பழம், ரப்பர். தொழில் துறையின் பங்கு 33 சதவீதம். நல்ல கட்டமைப்பு, முனை வோரை ஊக்குவிக்கும் கொள்கைகள் ஆகியவை அரசு தரும் டானிக்குகள்.
உலக டங்க்ஸ்டன் உலோகத் தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தகரத் தயாரிப்பில் 3வது இடம். ஜவுளி, உணவுகள், உலோகங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், ரப்பர், ஃபர்னிச்சர் போன் றவை முக்கிய தயாரிப்புத் தொழில்கள். பொருளாதாரத்தின் 55 சதவீதம் சேவைத் துறையிலிருந்து வருகிறது. சுவையான உணவு வகைகள், மசாஜ் நிலையங்கள், நைட் கிளப்புகள், ஷாப்பிங் என நாடு முழுக்கப் பொழுது போக்கு வசதிகள் ஏராளம்.
இத்தோடு புத்தர் கோவில்களும். உடலுக்கும், உள்ளத்துக்கும் சுகம் தேடும் பயணிகள் உலகின் பல பாகங்களிலிருந்து வருகிறார்கள். பொருளாதாரத்துக்கு ஏற்றுமதியின் பங்கு 65 சதவீதம். அதில், சுற்றுலாவின் பங்கு 20 சதவீதம்.
நாணயம்
பாத் (Baht). ஒரு ரூபாய் 88 காசு கொடுத்தால், ஒரு பாத் வாங்கலாம்.
இந்தியாவோடு வியாபாரம்
தாய்லாந்துக்கு நம் ஏற்றுமதி ரூ.21,284 கோடி. இறைச்சி, மீன், காபி, டீ, இரும்பு, உருக்கு, இயந்திரங்கள், வாகனங்கள், ரசாயனங்கள் இவற்றுள் முக்கியமானவை. நம் இறக்குமதி ரூ.35,863 கோடி. இயந்திரங்கள், பிளாஸ்டிக்ஸ், ரப்பர், அலுமினியம்.
பயணம்
ஜூன் முதல் அக்டோபர் வரை மழை அதிகம். ஏப்ரல், மே மாதங்களில் பலர் விடுமுறை எடுப்பார்கள். டிசம்பர், ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகம். இந்த மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பிசினஸ் டிப்ஸ்
நேரம் தவறாமை மிக முக்கியம். தாய்லாந்தில், குறிப்பாகப் பாங்காக்கில் டிராஃபிக் நெருக்கடி மிக அதிகம். சந்திப்புகளுக்குப் போகும்போது, பயணத்தின் நேரத் தேவைகளையும் கணக்கிடவேண்டும்.
சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வரவேற்பது பாரம்பரியம். கை குலுக்கலும் இன்று சாதாரணமாகி வருகிறது.
முதல் சந்திப்பு பெரும்பாலும், மதிய உணவு. இது ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள. இந்தச் சந்திப்பில் சாதாரணமாக பிசினஸ் பேசுவதில்லை.
இந்தச் சந்திப்பின்போது, விசிட்டிங் கார்டுகள் அவசியம். ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபுறம் தாய் மொழியிலும் விவரங்கள் தருவது நல்லது. நம் ஊரில் இதைச் செய்யமுடியாவிட்டால், கவலைப்படா தீர்கள். பாங்காங்கில் இந்த வசதிகள் ஏராளம்.
முடிவுகள் பல நிலைகளில் எடுக் கப்படும். ஆகவே, உடனடி பதில்களை எதிர்பார்க்காதீர்கள்.
செய்யக்கூடாத உடல்மொழிகள் கைகளை நாற்காலிகளின் பின்னால் போடுதல், அவர்கள் பக்கம் காலை நீட்டுதல், சுட்டுவிரல் நீட்டுதல், தலை, தோள் ஆகிய அங்கங்களைத் தொடுதல், முதுகில் தட்டுதல், பாண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி பேசுதல்.
சந்திப்புகளின்போது காபி, டீ அல்லது ஜூஸ் தருவார்கள். இவற்றை மறுப்பது அவமரியாதை.
உடைகள்
உயர் அதிகாரிகளைச் சந்திக்கப் போகும் போது, கோட், சூட் உத்தமம். பிற மீட்டிங்களுக்கும் பான்ட், வெள்ளைச் சட்டை அணியுங்கள். கறுப்புச் சட்டை கூடவே கூடாது.
பரிசுகள் தருதல்
கலைப் பொருட்கள், எலெக்ட்ரா னிக்ஸ் கருவிகள் தரலாம். உங்கள் முன்னால் அவற்றைத் திறக்கமாட் டார்கள்.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT