Published : 13 Jun 2014 10:00 AM
Last Updated : 13 Jun 2014 10:00 AM
சரிவிலிருந்து மீண்டெழுவதன் அடையாளமாக, கடந்த ஏப்ரலில் தொழில்துறை உற்பத்தி 3.4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி, சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறைகளின் செயல்பாடு அதிகரித்திருப்பதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
கடந்த 2013 ஏப்ரலில் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 1.5 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 1.2 சதவீதம் குறைந்த தொழில்துறை உற்பத்திக் குறியீடு, டிசம்பர் இறுதி வரை அதே நிலையில் நீடித்தது. ஜனவரியில் சற்று சாதகமான அம்சம் காணப்பட்டாலும், மீண்டும் பிப்ரவரியில் சரிவைச் சந்தித்தது.
தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டில் 75 சதவீத பங்களிப்பைச் செலுத்தும் உற்பத்திப் பிரிவானது கடந்த ஏப்ரல் மாதம் 2.6 சதவீதம் வளர்ச்சி பெற்றது. இதுவே கடந்த 2013 ஏப்ரலில் ஒரு சதவீதமாக இருந்தது. கேபிடல் கூட்ஸுக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து அவற்றின் உற்பத்திக் குறியீடு ஏப்ரல் மாதம் 15.7 சதவீதம் உயர்ந்தது.
சுரங்கத் துறை 1.2 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது 3.4 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. மின் உற்பத்தி துறை ஏப்ரலில் 11.9 சதவீதம் உயர்ந்தது. கடந்த 2013 ஏப்ரலில் இது 4.2 சதவீதமாக இருந்தது. இருப்பினும், நுகர் பொருள் துறை (கன்ஸ்யூமர் கூட்ஸ்) உற்பத்தி கடந்த 2013 ஏப்ரலோடு ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் குறைந்தது. கடந்த ஏப்ரலில் 1.7 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது.
கன்ஸ்யூமர் டியூரபிள் பிரிவு, 7.6 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 9.6 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்த அளவில், மொத்தமுள்ள 22 தொழிற்துறை உற்பத்திப் பிரிவுகளில் 14 பிரிவுகள் கடந்த ஏப்ரலில் வளர்ச்சியை எட்டியிருந்தன.
சில்லறைப் பணவீக்கம் குறைந்தது
மே மாத இறுதியில் சில்லறைப் பணவீக்க விகிதம் 8.28 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 8.59 சதவீதமாக இருந்தது என அரசு வியாழக்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதியில் ஏப்ரல் மாதத்தில் 9.17 சதவீதமாக இருந்த சில்லறைப் பணவீக்க விகிதம் 8.86 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதுவே, நகர்ப்புறத்தில் 7.69 சதவீதத்திலிருந்து 7.55 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT