Published : 07 Dec 2020 10:14 AM
Last Updated : 07 Dec 2020 10:14 AM
கடந்த 18 நாட்களில் டீசல் ரூ.4-ம், பெட்ரோல் ரூ.2.59 காசுகளும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை, எண்ணெயின் சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம், மத்திய மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரி ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை அமையும்.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு விற்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று.
அண்மைக் காலமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறைந்த பாடில்லை. தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பீகார் தேர்தலை ஒட்டி அக்டோபர் 1 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை பெட்ரோல் ரூ.84.14 காசுகளும், டீசல் ரூ.78.69 காசுகளும் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டது.தேர்தல் முடிந்த நிலையில் நவம்பர் 20 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இன்று பெட்ரோல் ரூ.86.73 காசுகளும், டீசல் ரூ.79.93காசுகளும் விற்பனையாகிறது.கடந்த 18 நாட்களில் டீசல் ரூ.3.30 காசுகளும், பெட்ரோல் ரூ.2.37 காசுகளும் அதிகரித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து குறைத்து இயக்கப்படும் சூழலில், இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வாகன எரிபொருள் விலையுயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுமுடக்கம் தளர்ததப்பட்டு தற்போது தான் பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்பட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலை உருவாகிய போதிலும், ஏற்கனவே கிடைத்த ஊதியத்தில் பாதியளவு தான் கிடக்கின்ற நிலையில், வாகன எரிபொருள் செலவுக்கே பெரும்பகுதி செலவாகிறது என்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.
இதுதொடர்பாக சமூக பொருளாதார நிபுணர் பிரகாஷ் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 160 லிட்டர் கொண்ட ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை 49 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பீட்டில் ரூ.3626 ஆகும். ஒரு லிட்டர் விலை ரூ.23.
ஆனால் மத்திய அரசு எண்ணெய் வள நாடுகளிடம் செய்துகொண்ட ஒப்பந்ததத்தின் படி 2020 ஆண்டு வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18-க்கு இறக்குமதி செய்கிறது.மத்திய மாநில அரசுகள் வருமானத்திற்கு பெட்ரோல் டீசல் விற்பனை மீதான வரியை பெரிதும் நம்பியுள்ளதால், தற்போது பெட்ரோல் விற்பனையில் 255 சதவிகிதமும், டீசல் விற்பனை மூலம் 248 சதவிகிதம் கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரியை மத்திய, மாநில அரசாங்கங்கள் வசூலிக்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய்விலை உயரும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவும்,விலை குறையும்போது அவற்றின் விலையைக் குறைத்தும் விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது மத்திய அரசின் டைனமிக் கொள்கை.ஆனால், மத்திய அரசு கடந்த 5 வருடங்களாக எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயித்தலில் தலையிட்டு கச்சா எண்ணெய் விலை கூடும்போது மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியும், விலை குறையும் போது, அவற்றின் விலையை அதே முந்தைய விலையில் லாக் செய்துவிடுகிறது. இதனால் கச்சா எண்ணெயின் விலை குறைவின் பலன்கள் பொதுமக்களை சென்றடையவதில்லை.
கடந்த 49 நாளில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ள போதிலும், மத்திய அரசு தனது டைனமிக் கொள்கையை மாற்றிக் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உச்சத்தில் லாக் செய்து விட்டு அந்த விலையிலேயே விற்பனை செய்துவருவது தான் தற்போதைய விலை உயர்வுக்கு காரணம்..
கலால் வரி என்பது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் வரி, அந்த வரியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ஆனால் அந்த வரியை தனிமனிதன் விலையாக செலுத்தி பெட்ரோல் அல்லது டீசலைப் பெற்றுக்கொள்ளும் நிலை உள்ளது..பெட்ரோல் விலை உயர்வால் வணிகத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் டீசல் விலை உயர்வால் வணிகம் பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் டீசலைப் பயன்படுத்துகின்றன.
இதனால் அதிக விலைகளை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோருக்கு அழுத்தம் அதிகரிக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டுமே பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி எரிபொருள் விநியோக கூட்டமைப்பின் தலைவர் கே.பி.முரளி கூறுகையில், பெட்ரோல். டீசல் விலையின் தினசரி ஏற்படும் மாற்றத்தின் மூலம் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது பொதுமக்களுக்குத் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் பட்ஜெட்டின் போது மட்டும் தான் விலை அதிகரிப்பு இருக்கும், தற்போது தினசரி 10 பைசா, 12 பைசா அளவுகளில் ஏற்றப்படும் விலை உயர்வு பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், ஒரு மாதத்திற்கான எரிபொருள் செலவின்போது அதை உணருகின்றனர். எனவே மத்திய அரசின் விலை ஏற்ற இறக்கத்தில் வெளிப்படைத் தன்மையும் பொதுமக்களை சென்றடையவேண்டும். அப்போது தான் விலை உயர்வுக்கான காரணத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT