Published : 03 Oct 2015 08:15 AM
Last Updated : 03 Oct 2015 08:15 AM

தொழில் ரகசியம்: சமூக ஆதார கோட்பாடும் மனித மனமும்...

டீவி காமெடி சீரியல்களில், நிகழ்ச் சிகளில் கெக்கே பிக்கே ஜோக்குகளுக்கு பேக்ரவுண் டில் சிலர் சிரிப்பது போல் ட்ராக் ஒலிபரப்பப்படுவதைக் கேட்டிருப் பீர்கள். சப்பை ஜோக்குக்கு சிரிப்பு சத்தம் கேட்டால் நாமும் சேர்ந்து சிரித்து விடுவோமா? இது சும்மா டகால்டி என்று நமக்குத் தெரியாதா? எதனால் இதை உபயோகிக்கிறார்கள்?

இதை உணர `சமூக ஆதார கோட்பாடு’ (The principle of social proof) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயம் சரியா, தவறா என்று தெரியாத போது மற்றவர்கள் எது சரி என்கிறார்களோ, எதை செய்கிறார்களோ அதுவே சரி என்று நினைக்கிறோம். பலர் சரி என்று சொன்னால் அது சரியாய் தான் இருக்கும் என்று நம்புகிறோம். பலர் சிரிக்கிறார்கள் என்றால் நல்ல ஜோக்காய் தான் இருக்கும் போலிருக்கிறது என்று நம்மையறியாமல் நினைக்கிறோம். இது தெரிந்து தான் டீவிகாரர்கள் சிரிப்பு ட்ராக்கை உபயோகிக்கிறார்கள்.

ஏதோ, இந்த மட்டும் சோக சீரியல் களுக்கு ஒப்பாரி ட்ராக் உபயோகிக் காமல் இருக்கிறார்களே என்று வேண்டுமானால் சந்தோஷப்படலாம்!

சில படங்களை தியேட்டரில் பார்ப் பதற்கும் வீட்டில் பார்ப்பதற்கும் வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள். மற்றவர்கள் ரசிக்கும் போது ‘படம் நன்றாகத்தான் இருக்கிறது போலி ருக்கிறது’ என்று மனம் நினைக்கிறது. தியேட்டரில் படம் பார்ப்பது போல் வராது என்று சிலர் நினைப்பதும் இதனாலேயே.

பலர் ஒரு செயலைச் செய்யும் போது அதுவே சரியான செயல் என்று மனம் முடிவு செய்கிறது. நம்மையறியாமல் அதே செயலை செய்யத் தோன்றுகிறது. இதை நாம் பிறந்ததிலிருந்தே செய்கிறோம், ஆனால் உணர்வதில்லை, எல்கேஜி படிக்கையில் வகுப்பில் ஒரு குழந்தை அழும் போது ஏன், எதற்கு என்று தெரியாமல் அதோடு நாமும் சேர்ந்து அழுதது ஞாபகமில்லையா!’இபாங் குபாங் ஜபாங்’ இந்த கோட்பாட்டை சில கம்பெனிகள் மட்டுமே சரியாய் புரிந்துகொண்டு பிரமாதமாய் பயன் படுத்தி பெரிய லெவலில் பயன் பெறுகின்றன.

ஹெல்த் ட்ரிங்க்ஸ் பிரிவில் பல கம்பெனிகள் தங்கள் பிராண்டை ஒரு சிறுவனோ, சிறுமியோ குடிப்பது போல் காண்பிக்கும். ஆனால் ‘ஹார்லிக்ஸ்’ தன் விளம்பரங்களில் பல சிறுவர்கள் ஒன்று சேர்ந்து ‘இபாங் குபாங் ஜபாங்’ என்று சொல்லி பருகுவதைப் போல் காட்டும். அந்த விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள் தங்களை அறியாமல் ‘நம்மைப் போல் பலருக்கு ஹார்லிக்ஸ் தான் பிடித்திருக்கிறது, நாமும் இதையே குடிப்போம்’ என்று அம்மாவை நச்சரிக்க, ஏதோ நல்லது பிடித்தால் சரி என்று அம்மாக்கள் அதையே வாங்க இன்று அந்த பொருள் பிரிவின் நம்பர் ஒன் பிராண்ட் ஹார்லிக்ஸ். குடிக்கும் குழந்தைகளை விட ஹார்லிக்ஸ் தான் புஷ்டியாய் திடகாத்திரமாய் திகழ்கிறது!

இந்த கோட்பாடு ஏதோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், ஹார்லிக்ஸும் பயன்படுத்தி பயன் பெற மட்டுமே என்று எண்ணாதீர்கள். பிச்சைக்காரர்கள் கூட பிரயோகப்படுத்தி பயன் பெறலாம். பிச்சையையும் சேர்த்துப் பெறலாம். பெறுகிறார்கள்.

ராஜதந்திரம்

‘அம்மா தாயே’ என்று பிச்சைக் காரர்கள் வெறும் டப்பாவை நீட்டு வதில்லை. அதில் கொஞ்சம் சில்லறை போட்டு டப்பாவை ஆட்டி சத்தப்படுத்தி பிச்சை கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த சத்தம் நம் பரிதாப உணர்ச்சிக்கு அடிக்கும் காலிங் பெல் மட்டுமல்ல. ஏற்கனவே பலர் பிச்சை போட்டிருக்கிறார்கள். ஒழுங்கு மரியாதையாக நீயும் போட்டுவிட்டு போவது தான் முறை என்று நமக்கு அளிக்கும் வார்னிங் பெல்லும் கூட. ஊரோடு சேர்ந்து போவோம் என்று பையிலிருக்கும் சில்லறையை டப்பாவில் போட்டு நமக்கு இது போல் யாரும் தருவதில்லையே என்று நம் தலையெழுத்தை நொந்தபடி போகிறோம்!

’ஆல்பர்ட் பந்துரா’ என்ற சைக்காலஜிஸ்ட் இக்கோட்பாட்டை கொண்டு குழந்தைகளின் பயங்க ளைப் போக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார். நாய்களைக் கண்டால் பயப்படும் குழந்தைகளை நாய்களோடு கொஞ்சி விளையாடும் குழந்தைகளைப் பார்க்கச் செய்தார். தினம் இருபது நிமிடம் இதைப் பார்த்த குழந்தைகள் படிப்படியாக தாங்களும் நாய்களோடு பயமில்லாமல் கொஞ்சி விளையாட ஆரம்பித்துவிட்டன.

குப்பையில்லா இடத்தில் குப்பை போட நமக்கு மனம் வராது. இது இக்கோட்பாட்டின் கைங்கர்யமே. அதே போல் பலர் சிறுநீர் கழித்திருக்கும் சுவரை தாண்டிச் செல்லும் போது வரவில்லை என்றாலும் வற்புறுத்தி வந்த வரை அடித்துவிட்டு போகலாமா என்று நமக்குத் தோன்றுவதும் சாட்சாத் இந்த கோட்பாட்டால் தான்!

ரோட்டில் யாராவது விழுந்து கிடந்தால் பல சமயங்களில் பார்த்தும் பார்க்காமல் போகிறோம். ஈவிரக்க மில்லாத ஜடங்களாகி விட்டோமா? மருந்துக்கும் மனதில் பரிவும், உதவும் குணமும் துறந்த பிண்டங்கள் ஆகி விட்டோமா?

இல்லை. இதுவும் சமூக ஆதார கோட்பாட்டின் செயலே. ரோட்டில் விழுந்திருப்பவரை பார்க்கிறோம். யாரும் கவனிக்காமல் செல்வதைப் பார்க்கிறோம். நாம் உதவாமல் அந்த இடத்திலிருந்து நகர்வதற்கு இரண்டு காரணம் என்கிறார்கள் `பிப் லடானே’ மற்றும் ‘ஜான் டார்லி’ என்ற அமெரிக்க சைக்காலஜி பேராசிரியர்கள்.

அனைவருக்குமான பொறுப்பு

பல பேர் இருக்கும் இடத்தில் உதவி செய்யும் பொறுப்பு அனைவருக்கும் குறைகிறது. மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்று நினைத்து நாம் அங்கிருந்து நகர்கிறோம். இப்படியே அனைவரும் நினைப்பதால் தான் யாரும் உதவி செய்வதில்லை. ஒரு முறை `எழுத்தாளர் சுஜாதா’ காரில் செல்லும் போது ரோட்டில் அடிபட்டுக் கிடந்த ஒருவனுக்கு உதவலாம் என்று கூற டிரைவர் ‘விடுங்க சார், அவங்க பார்த்துப்பாங்க’ என்று பதிலளிக்க, ‘யார் அந்த அவர்கள்’ என்று அழகாய் எழுதியிருப்பார்.

இரண்டாவது காரணம், பல சமயங்களில் எம்ர்ஜென்சி ஒரு எமர்ஜென்சி போல் தெரிவதில்லை. ரோட்டில் ஒருவர் விழுந்திருக்கிறார். அனைவரும் கவனிக்காமல் போகிறார் கள். அப்படியென்றால் ஆபத்தில்லை என்று நினைக்கிறோம். குடித்துவிட்டு விழுந்திருப்பார் என்று நினைக்கிறோம். இதை pluralistic ignorance என்கிறார்கள். யாரும் கவனிக்கவில்லை என்றால் கவலைப்பட அங்கு ஏதுமில்லை என்று நினைக்கிறோம்.

பக்கத்து தெருவில் சத்தம் கேட் டால் என்ன, ஏது என்று பார்க்கத் தோன்றுவதில்லை. பட்டாசு வெடித் திருப்பார்கள் என்று நாமாய் முடிவு செய்கிறோம். எதிர் வீட்டில் பெண்ணின் அலறல் கேட்டால் புருஷன் அடிக்கிறான் என்று நினைத்து நமக்கு ஏன் அப்படி தைரியம் வருவதில்லை என்று நினைப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.

ஓரிடத்தில் ஒருவர் இருப்பதை விட பல பேர் இருக்கும் போது அங்கு உதவிக்கு பிரச்சினை இருக்காது என்று நினைப்பது தவறு என்று ஆய்வின் ஆதாரத்தோடு விளக்குகிறார்கள் லடானே மற்றும் டார்லி. தங்கள் வகுப்பு மாணவன் ஒருவனை ரோட்டில் காகா வலிப்பு வந்தவனைப் போல் விழச் சொன்னார்கள். ஒருவர் மட்டுமே அந்தப் பக்கம் சென்றபோது அந்த மாணவன் விழ 85% சமயங்களில் அவர் உதவ முயற்சித்தார். ஆனால் குறைந்தது ஐந்து பேராவது அந்தப் பக்கம் செல்கையில் அந்த மாணவன் விழ 31% சமயங்களில் மட்டுமே யாராவது உதவ முன் வந்தார்கள்.

தனியாய் இருக்கும் போது ஓடி உதவ ரெடியாய் இருக்கும் நாம், கூட்டத்தோடு இருக்கும் போது உதவுவதில்லை. ஆக, நாம் அப்படி ஒன்றும் ஈவிரக்கமில்லாத ஜடங்களாக போய்விடவில்லை. அட்லீஸ்ட் இன்னமும்!

டீவி நிகழ்ச்சி சிரிப்பில் துவங்கி ரோட்டில் நடக்கும் விபத்து வரை வியாபிக்கும் இந்த கோட்பாடு தற் கொலை வரைக்கூட தொடரும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதை அடுத்த வாரம் பார்ப்போம்.

அப்படி பொறுமையாய் காத்தி ருந்து ஞாபகமாக படிக்க முடியாது என்கிறீர்களா? நிறைய பேர் படிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள். சமூக ஆதார கோட்பாட்டின் படி நீங்களும் படிப்பீர்கள். எனக்குத் தெரியும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x