Published : 25 May 2014 11:26 AM
Last Updated : 25 May 2014 11:26 AM
“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. எப்படி வேலை தேடலாம் என்றால் எத்தனையோ வழிகள் உண்டு என்று பட்டியல் இடுகிறார் ரிச்சர்ட் நெல்சன் போலஸ்.
உங்கள் ரெஸ்யுமேவை நீங்களாக கம்பெனிகளுக்கு அனுப் பலாம். தினசரி விளம்பரங்கள் பார்த்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்யலாம்.
வேலை பெற்றுத்தரும் தனியார் நிறுவனங்களை அணு கலாம். வலைதளங்களில் வாய்ப் புகள் தேடலாம். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை கேட்கலாம். உங்கள் ஆசிரியர்களை அவர்களின் மற்ற மாணவர்களிடம் பரிந்துரை செய்யச் சொல்லலாம். தொலைபேசிப் புத்தகத்தைப் பார்த்து வடிகட்டி வேலை தரக்கூடிய தொடர்புகளைக் கண்டு பிடிக்கலாம். சம்பளம் கிடைக்கா விட்டாலும் பயிற்சி மாணவராய்ச் சேரலாம். முதலா ளிகள் அதிகமுள்ள கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து வேலை கேட்கலாம்...! என பட்டியல் நீள்கிறது.
What color is your parachute? என்கிற புத்தகத்தின் தலைப்பே ஒரு தத்துவம் தோய்ந்த கவிதையாய் தோன்றுகிறது. 1970 முதல் 2009 வரை 30 பதிப்புகள் கண்டு ஒரு கோடி பிரதிகள் விற்ற புத்தகம் இது. தொடர்ந்து புதிப்பித்துக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு பதிப்பும் காலத்துக்கேற்ற விஷயத்தைச் சொல்லுகிறது.
ஒரு அறிவுரை நூலை இவ்வளவு ரசனையோடு கொண்டு வந்ததில் ஆசிரியரின் ஆளுமை தெரிகிறது. புத்தகம் முழுவதையும் படங்களும் கேலிச்சித்திரங்களும் நிறைக்கின்றன. தவிர முழுக்க முழுக்க “எப்படிச் செய்ய?” விளக்கங்களும் பட்டியல்களும் மாதிரி படிவங்களும் உள்ளதால் தொடக்க நிலை வாசகரும் எளிதாக படித்து முடிக்க இயலும்.
அமெரிக்க இளைஞர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதால் குறிப்பிடும் பல பெயர்களும் தகவல்களும் நமக்கு அன்னிய மானதாக இருக்கிறது. இருந்தும் பெரும்பாலான விஷயங்கள் நமக்கும் பொருந்துகிறது.
குறிப்பாக திடீரென்று வேலை போனால் என்ன செய்ய வேண்டும் என்கிற அத்தியாயத்தில் சொல்லப் பட்டவை அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. முதலில் பதட்டப்படாமல் இருங்கள். உடம்பை கவனித்துக் கொள் ளுங்கள்.
நன்றாக தூங்குவது முக்கியம். உடல் பயிற்சி அவசியம். தண்ணீர் குடிக்காமல் இருக்காதீர்கள். ஒரு மூன்று மாத காலம் தேவைப்படலாம் என்பதால் அதற்கு ஒரு குறுகிய கால பொருளாதாரத் திட்டம் தீட்டுங்கள்.
பணம் கிடைக்கும் எந்த வேலையையும் இக்காலத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். வேலை தேடலுக்கும் இதர தேவைகளையும் இது பூர்த்தி செய்யும். ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்க அவசியமில்லை.
நம் சமூக கட்டமைப்பில் இந்த குறுகிய கால “ஏதாவது ஒரு வேலை” மிகவும் சிரமம். என்ன பொருளாதார பிரச்சினை என்றாலும் நம் மக்கள் கௌரவத்திற்காக அடிமட்ட வேலைகளை செய்யமாட்டார்கள். டிகிரி படிச்சிட்டு கையை அசுத்தம் செய்யலாமா என்கிற எண்ணம் எப்படி நம் சமூகத்தை பின்னுக்கு தள்ளுகிறது என்பது இந்த புத்தகம் படிக்கையில் புரிகிறது.
வேலைகள் என்றும் நிரந்தர மில்லை எனும்போது அதை பெறுவதற்கும், தக்க வைப்பதற்கும், வேறு வேலை தேடுவதற்கும் சில திறன்களும் அறிவுரைகளும் தேவைப் படுகின்றன. அமெரிக்காவில் இதற்கு தயாராகி விட்டார்கள். நாமும் இதற்கு தயாராக வேளை வந்து விட்டது. வேலை தேடல் கலை என்கிறார். அதை வழி நடத்த ஆலோசனைகள் தருவதை தொழிலாக கொண்ட இவர், வெறும் வேலை என்று கொள்ளாமல் வாழ்க்கைத் தேர்வுகளை எப்படி செய்வது எனவும் எடுத்துச் செல்கிறார். சுமார் 35 ஆண்டுகள் அவர் இதை செய்ததால் இதை நிபுணத்துவத்துடன் நுண்ணியத் தகவல்களுடன் சொல்ல முடிகிறது.
ஒரு நிறுவனம் பணிக்கு ஆள் எடுப்பதென்றால் என்னெ வெல்லாம் பார்க்கிறது என்று முதலில் விளக்குகிறார். அதிகபட்சம் நிறுவனத்திற்கு உள்ளே தகுதியான ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டுத்தான் வெளியே நோக்கும். அதுவும் திறன்களுடன் யாராவது தெரிந்த வட்டத்தில் இருந்தால் முதல் முன்னுரிமை அவர்களுக்குத் தான். பிறகு செலவு செய்யாமல் வெளியிலிருந்து தருவித்துக் கொடுக்கும் அமைப்புகளுக்கு வாய்ப்பு.
பிறகு ரெக்ரூட்மெண்ட் கன்ஸல்டண்ட்ஸ் எனும் வேலைக்கு ஆட்கள் கொடுக்கும் தொழிலில் உள்ளவர்களை நாடுவர். பிறகு தான் ஈ-மெயிலுக்கு தானாக அனுப்பப்படும் சி.வி.க்களை பார்க்கக்கூடும்.
அதுவும் வெறும் 10 வினாடிகள் தான் ஒரு சி.வி யில் செலவிடப்படுகிறது என்கிறார்.
அந்த 10 செகண்டில் உங்களை அடுத்த கட்ட பரிசீலனைக்கு கொண்டு செல்லத் தக்க சி.வி.க்கள் எழுதுவது எப்படி என அடுத்த அத்தியாயத்தில் விளக்கு கிறார். பின்னர் ஒவ்வொரு வேலை தேடும் முறையையும் விளக்குகிறார். நிறைய உளவியல் சோதனகளை பரிந்துரைக்கிறார். அனைத்து தகவல்களையும் அள்ளித் தெறிக்கிறார்.
மிக மிக எளிய புத்தகம். 400 பக்கத்துக்கு கனமாக, ஆனால் சுவாரசியமாக எழுதி அதிக விலைக்கு உலக மெங்கும் விற்பதுதான் அமெரிக்க சாமர்த்தியம். இதை வேலை தேடுவோரின் பைபிள் என்கிறார்கள்.
பின் குறிப்பாக, உலகமெங்கும் (குறிப்பாக மேற்கே) எங்கெல்லாம் வேலை ஆலோசகர்கள் இருக்கி றார்கள், எப்படி அவர்களை தேர்வு செய்ய வேண்டும், என்ன உளவியல் ஆய்வு எடுக்கலாம், எப்படி அந்த ஆய்வறிக்கை இருக்கும், என்ன பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என சங்கில் பால் புட்டியை வாயில் வைத்து புகட்டுவது போல சுலபமாகக் கொடுக்கிறார்.
தமிழிலும் இதுபோன்ற நூல் கள் வர வேண்டும்.
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT