Published : 12 Nov 2020 01:15 PM
Last Updated : 12 Nov 2020 01:15 PM

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பியூஷ் கோயல் அழைப்பு

புதுடெல்லி

இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையையும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியா, மாற்றத்தின் உந்து சக்தி' என்ற தலைப்பிலான மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் பியூஷ் கோயல், முதலீடுகளுக்கு உகந்த மதிப்பை இந்தியா வழங்கி வருகிறது என்று கூறினார்.

சர்வதேச மதிப்பீடுகளில் இந்தியா, நம்பிக்கைக்கு உகந்த நாடாக கருதப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மையையும், திறந்த ஜனநாயகத்தையும் இந்தியா பெற்றுள்ளதாகக் கூறிய அவர், மிகப்பெரும் வர்த்தகங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபடாத துறைகளிலும் வணிகம் புரியும் வகையில் வர்த்தகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் குறித்து பேசியபியூஷ் கோயல், இந்தியாவை தற்சார்பு அடையச் செய்யும் நோக்கத்தில் இந்தியாவின் உற்பத்தி கொள்ளளவு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த 10 முக்கிய துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

இந்த ஊக்கத்தொகைகளின் மூலம் இந்தியா வலுவான, தன்னிறைவு அடைவதுடன் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து ஏற்றுமதியிலும் ஈடுபட வழி வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார். சமூகத் துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தனியார் முதலீடுகளுக்கு வழிவகை செய்யப்படும் என்றார் அவர்.

தைரியம், தன்னம்பிக்கை, போட்டி மனப்பான்மை, இரக்க குணம் ஆகிய நான்கு குணங்களை வலியுறுத்தி அவர் பேசினார்.

தற்சார்பு இந்தியா இலக்கை அடையும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு, வேளாண்மை, நிலக்கரி, சுரங்கம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் தனியார் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு துறைகளில் தனியாரின் பங்களிப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x