Published : 17 Oct 2015 03:13 PM
Last Updated : 17 Oct 2015 03:13 PM
சமூக ஆதார கோட்பாடு (The principle of social proof) பற்றி பேசுகிறோம். ஒரு விஷயம் சரியா, தவறா என்று தெரியாத போது மற்றவர்கள் எது சரி என்கிறார்களோ, எதை செய்கிறார்களோ அதுவே சரி என்று நினைக்கிறோம்.
இரண்டு வாரங்களாக தொடரும் இக்கட்டுரையை படித்து மதுரை நண்பர் ‘ஜே.கே. முத்து’ என்னிடம் பகிர்ந்த செய்தியை கூறுகிறேன். டொனேஷன் கேட்டு யாராவது வரும் போது மற்றவர்கள் என்ன தந்திருக்கிறார்கள் என்று ரசீது புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து அதற்கேற்ப தருகிறோம். அதனால் டொனேஷன் கேட்டு வருபவர்கள் ரசீது புத்தகத்தில் பெரிய தொகைகளாக எழுதி வைத்திருப்பார்கள். இது தெரியா மல் தந்தவர்களை மனதில் திட்டிய வாறே அந்த தொகைக்கேற்ப அழுது தொலைப்போம்!
இந்த கோட்பாடு நம்மை பல சமயங்களில் தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும். காரிலோ பைக்கிலோ செல்கிறீர்கள். ட்ராஃபிக் ஜாம் போல் தெரிகிறது. முன்னால் வண்டிகள் நிற்கின்றன. காத்திருக்கிறீர்கள்.
முன்னேயிருக்கும் சில வண்டிகள் யூ டர்ன் செய்து வந்த வழி சென்று அடுத்த தெருவில் திரும்புவதைப் பார்க்கிறீர்கள். முன்னே போக முடியாது போலிருக்கிறது, அது தான் திரும்பி வேறு வழி செல்கிறார்கள் என்று முடிவு செய்கிறீர்கள். யாரையும் கேட்கக் கூட தோன்றாமல் நீங்களும் திரும்பி வேறு பாதையில் செல்கிறீர்கள்.
சின்ன ட்ராஃபிக் ஜாமாக இருந்திருக்கும். திரும்பிய முதல் வண்டி வேறு எதற்கோ திரும்பியிருக்கலாம். அடுத்த வண்டிகள் அதைப் பார்த்து திரும்ப, நீங்களும் அவர்கள் எல்லாரும் செய்வதால் அது சரியாகத்தான் இருக்கும் என்று திரும்புகிறீர்கள். சமூக ஆதார கோட்பாடு சப்ஜாடாய் செய்யும் சில்மிஷ சித்து விளையாட்டு இது.
பலர் ஒரு காரியத்தை செய்யும் போது அவர்களுக்கு தெரிந்த ஒன்று நமக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறோம். நமக்கு பரிட்சையமில்லாத சூழ்நிலையிலோ, தெரியாத விஷயத்திலோ, புரியாத நிச்சயமற்ற நிலையிலோ கூட்டத்தின் செயல்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கிறோம். நமக்குத் தெரியவில்லை, அவர்கள் செய்வதே சரி, அது போலவே செய்வோம் என்று முடிவு செய்கிறோம். செயல்படுகிறோம்.
வாழ்க்கையில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் இந்த கதைதான். தொழி லில் புலப்படாத விஷயம் இருந்து, அதற்கு விடை தெரியாமல் எந்த வழி செல்வது என்று புரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அச்சூழ்நிலை யில் மற்ற தொழிலதிபர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதுவே சரியான வழி என்று நினைக்கிறோம். அவர்கள் சென்ற பாதையில் செல்கிறோம். அவர்கள் மீதே மோதிக் கொள்கிறோம்!
விளம்பரங்களுக்கு எத்தனை செலவழிப்பது என்று தெரியாமல் பலர் தோராயமாக தான் செலவழிக்கிறார்கள். ‘நான் விளம்பரங்களுக்கு செலவழிக்கும் தொகையில் சரி பாதி வேஸ்ட் என்று தெரிகிறது. ஆனால் எந்த பாதி என்று தான் தெரியவில்லை’ என்றார் ‘ஜான் வானமேக்கர்’ என்ற தொழிலதிபர்.
அதனால் பலர் போட்டியாளர்கள் எத்தனை செலவழிக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு எத்தனை செல வழிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது, அவர்கள் செலவழித்த தொகையை செலவழிப்போம் என்று நினைத்து பணத்தை இறைக்கிறார்கள். அவர்கள் போட்டியாளர்களை சென்று கேட்டுப் பாருங்கள். அவர்களும் இதையே சொல்வார்கள். மற்றவர்கள் இத்தனை செலவழிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, அவர்களைப் போல செலவழிப்போம் என்று தான் செலவழிக்கிறேன் என்பார்கள். உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று கடைசி வரை தெரியாமல் பணத்தை செலவழிக் கிறார்கள்.
கம்பெனிகள் புதுமைகளை புகுத் தாமல் பழையதையே, எல்லாரும் செய்வதையே செய்து தொலைப்பதற் கும் இந்த கோட்பாடே காரணம். இதை விளக்கும் ஒரு பிரபல ஆய்வை விளக்குகிறேன். அறை நடுவில் ஏணி வைத்து அதன் மீது வாழைப்பழ குலை வைத்த ஆய்வாளர்கள் அறையில் ஐந்து குரங்குகளை அனுப்பினார்கள். உள்ளே நுழைந்த குரங்குகளில் ஒன்று வாழைப்பழத்தை பார்த்த மாத்திரம் கிடுகிடுவென்று ஏணியில் ஏறி அதை எடுக்க முனைந்தது. வாழைப்பழத்தில் கையை வைக்க ஆய்வாளர்கள் குழாய் மூலம் மேலிருந்து குரங்கின் மீது குளிர்ந்த நீரை பாய்ச்சினார்கள். குரங்கு பயந்து கீழே குதித்தது.
முதல் குரங்கு குதித்ததும் இரண்டாவது குரங்கு ஏணியில் ஏறி வாழைப்பழத்தில் கை வைக்க அதன் மீதும் குளிர்ந்த நீர் பாய்ச்சப்பட்டது. அதுவும் பயந்து குதித்தது. இதே கதை தான் மற்ற மூன்று குரங்குகளுக்கும் நடந்தேறியது. ஒரு சமயத்திற்கு பிறகு, ஏணி மீது வாழைப்பழ குலை இருந் தும் ஐந்து குரங்குகளுக்கும் ஏறி எடுக்க வேண்டும் என்ற ஆசையே போய் விட்டது.
அதன் பின் ஆய்வாளர்கள் ஒரு குரங்கை அறையிலிருந்து வெளியேற்றி புதிய குரங்கை நுழைத்தார்கள். உள்ளே நுழைந்த ஆறாவது குரங்கு வாழைப் பழ குலையை பார்த்தவுடன் ஏணி மீது ஏற முற்பட மீதி குரங்குகள் அதை தடுத்து நிறுத்தின. என்ன காரணத் திற்கோ நம் சொந்தக்காரர்கள் நம்மை தடுக்கிறார்கள் என்று ஆறாவது குரங்கு பழத்தை எடுக்கும் ஆசையை விட்டது.
ஆய்வாளர்கள் பழைய குரங்குகளை ஒவ்வொன்றாக அறையிலிருந்து அகற்றி புதிய குரங்குகளை நுழைத்தார்கள். ஓவ்வொரு முறையும் புதிதாக நுழையும் குரங்கு வழக்கம் போல் ஏணியில் ஏற முற்பட மற்ற குரங்குகள் அதை தடுத்து நிறுத்தின. ஒரு கட்டத்தில் முதலில் நுழைந்த ஐந்து குரங்குகளும் வெளியேற்றப்பட்டு முற்றிலும் புதிய குரங்குகள் அறையில் இருந்தன. அப்படி இருந்தும் பழைய குரங்குகள் புதிய குரங்கை ஏற விடாமல் தடுத்தன.
ஒரு விஷயம் புரிகிறதா இப்பொழுது அறையிலிருந்த ஐந்து குரங்குகளும் ஏணியில் ஏறியதே இல்லை. ஏன் ஏறக்கூடாது என்றும் அவைகளுக்குத் தெரியாது. ஆனாலும் தாங்களும் ஏறாமல் புதியதாய் வந்த குரங்குகளையும் தடுத்துக் கொண்டிருந்தன. அந்த குரங்குகளிடம் ‘ஏன் இப்படி புதியவர்களை ஏற விடாமல் தடுக்கிறாய்’ என்று கேட்டால் அவை என்ன சொல்லும்?
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்படி தான் ரொம்ப நாளா செய்யறோம்’!
இதுபோல் தான் பலர் மற்றவர்களைப் பார்த்து அவர்கள் செய்வதைப் போலவே பணிபுரிய பழகிவிட்டனர். மற்றவர்கள் செய்வது போல் செய்தால் வெற்றி என்று முடிவு செய்கின்றனர். பலர் செய்வதை செய்துகொண்டிருந்தால் போதும் என்று புதியதாய் சிந்திக்க மறுக்கின்றனர். புதுமைகளை புகுத்த பயப்படுகின்றனர். மற்றவர் செல்லும் பாதையில் செல்வதே ஆபத்தில்லாத வழி என்று நினைக்க பழகிவிட்டனர்.
‘இங்கு எப்பவுமே இப்படிதான் செய்வோம் என்ற வாக்கியமே உலக மொழிகளில் மகா டேமேஜிங்கான வாசகம்’ என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ‘க்ரேஸ் ஹாப்பர்’.
எல்லோரும் செல்கிறார்கள், நாமும் அவ்வழி செல்வோம் என்று ‘கிரிஸ் டஃபர் கொலம்பஸ்’ நினைத்திருந் தால் அமெரிக்காவை கண்டுபிடித் திருக்க மாட்டார். எல்லோரும் மெழுகு வர்த்தியை ஏற்றுகிறார்கள் நாமும் அதையே ஏற்றுவோம் என்று ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ நினைத்திருந்தால் பல்பை கண்டுபிடித்திருக்க மாட்டார். அனைவரும் செய்தி சொல்ல புறாவை பயன்படுத்துகிறார்கள், நாமும் புறாவைத் தேடுவோம் என்று ‘அலெக்ஸாண்டர் க்ரஹேம் பெல்’ நினைத்திருந்தால் டெலிஃபோனை கண்டுபிடித்திருக்க மாட்டார். எல்லாரும் ஷாம்புவை பாட்டிலில் விற்கிறார்கள், நாமும் அப்படியே விற்போம் என்று ‘சின்னி கிருஷ்ணன்’ நினைத்திருந்தால் சாஷேவை கண்டுபிடித்திருக்கமாட்டார்.
சமூக ஆதார கோட்பாடு ஒரு புறம் கிடக்கட்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்று எதையும் கண் மூடி செய்யா தீர்கள். புதிய ரூட்டில் பயணியுங்கள். புதுமை பல்பை ஏற்றுங்கள். புதிய சிந்தனைக்கு ஹலோ சொல்லுங்கள். வெற்றி உங்கள் மீது சாஷே போலில் லாமல் பாட்டில் பாட்டிலாக கொட்டும்!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT