Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
சிட்டி குழுமத்தின் சர்வதேச நுகர்வோர் வர்த்தகப் பிரிவின் தலைவராக மதுரையைச் சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி பொறுப்பேற்கிறார்.
மதுரை மாநகருக்கு தூங்கா நகரம் என்ற சிறப்புப் பெயருண்டு. சிட்டி குழுமும் தனது வாசகத்தில் சிட்டி தூங்குவதில்லை (சிட்டி நெவர் ஸ்லீப்) என்ற கோஷத்தோடு தன்னை தமிழகத்தில் பிரபலப்படுத்திக் கொண்டது. தற்போது தூங்கா நகரத்தைச் சேர்ந்தவரையே வர்த்தகப் பிரிவுக்குத் தலைமையேற்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
மதுரையில் உள்ள விகாசா பள்ளியில் பயின்று, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் எம்பிஏ பயின்றுள்ளார். சிட்டி குழுமத்தில் 1991-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர், தற்போது ஜேன் பிரேஸருக்கு பதிலாக இப்பொறுப்பை ஏற்கிறார். ஜேன் பிரேசர் தற்போது சிட்டி குழும தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள முக்கியமான 4 வங்கிகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதலாவது பெண்மணி என்ற பெருமையும் பிரேசருக்கு உண்டு.
ஏறக்குறைய 30 ஆண்டுகள் இக்குழுமத்தில் பணியாற்றிய செல்வா என சக ஊழியர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். இதற்கு முன்பு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சில்லரை வர்த்தக வங்கி சேவை பிரிவுக்கு தலைமை ஏற்றிருந்தார். தைவானில் இக்குழுமத்தின் சில்லரை வர்த்தக பிரிவுக்கு இயக்குநராகவும் இருந்தார். 2015-ம் ஆண்டில் இருந்து ஆசிய பசிபிக் பிராந்திய நுகர்வோர் வங்கிச் சேவை பிரிவுக்கு தலைவராக இருந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT