Published : 24 Oct 2015 09:36 AM
Last Updated : 24 Oct 2015 09:36 AM
அது என்னவோ என்ன கன்றாவியோ தெரியவில்லை. எல்லோரும் நம்மையே பார்க்கவேண்டும், நாள்தோறும் போற்றிப் புகழவேண்டும் என்ற ஆசை பலரைப் பிடித்து, பீடித்து பாடாய்படுத்துகிறது. மற்றவர் பார்வையில் நனையவேண்டும், அனைவரின் கவனத்தில் குளிக்கவேண்டும், ஊரார் புகழில் ஊற வேண்டும் என்ற ஆசை பிரவாகமாய் பெருக்கெடுத்து பாதாதிகேசமும் பைத்தியமாய் பிடித்தாட்டுகிறது. இழவு வீட்டுக்கு சென்றால்கூட இறந்தவரையே எல்லாரும் பார்க்கிறார்கள், நம்மை கவனிக்கவில்லையே என்று வருந்துபவர்கள் உண்டு.
இது அவர்கள் ஆசை, எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் தொழிலதிபர்கள் அப்படி எண்ணி பிராண்டோடு தங்களையும் விற்கும் போதுதான் பிரச்சினை துவங்குகிறது. நமக்கல்ல, அவர்கள் தொழிலுக்கு.
தங்கள் பிராண்டை விட்டு தாங்களே பிராண்ட் போல் விளம்பரங்களில் தோன்றி, தங்களை பல வழிகளில் முன்னிறுத்தி தங்கள் பிரதாபங்களைக் கதையளக்கும் போதுதான் சிக்கல் துவங்குகிறது. அவர்கள் பிராண்டுக்கு.
பெயரைச் சொன்னால் அடிக்க வருவார்கள். எதற்கு அனாவசியமாய் சொல்லி வம்பை ஹோம் டெலிவரி செய்துகொண்டு?. அது யாரார் என்று உங்களுக்கே தெரியுமே. டீவி விளம்பரங்களில் வந்து பாடாய் படுத்தும் பிசினஸ்மேன்கள் யாரென்று. டீவி போட்டாலே இவர்கள்தானே வருகிறார்கள். டீவியை அணைத்தால் கூட வந்து நிற்கிறார்களே பத்திரிகை விளம்பரங்களில். பத்திரிக்கை செய்திகளில். சிரித்துக்கொண்டு, ஏதோ இவர்களுக்காகதான் நாம் வரிந்து கட்டிக்கொண்டு அவர்கள் பிராண்டை வாங்குவது போல.
உலக நடிப்பு
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே பிரத்யேகமான கதையல்ல. உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் பரிதாபம். அமெரிக்காவில் ‘வெண்டீஸ்’ என்ற ஃபாஸ்ட் ஃபுட் செயினின் உரிமையாளர் `தாமஸ்’ சாகும் வரை அதன் விளம்பரங்களில் தோன்றி நடித்தார். ஒன்று இரண்டல்ல, சுமார் எண்ணூறு விளம்பரங்களில். தான் நடித்த விளம்பரங்களைக் கூட பார்க்க நேரமில்லாமல் நடித்து தள்ளியிருக்கிறார் மனிதர். சரி, ஒரு வழியாக போய் சேர்ந்தார் என்று பார்த்தால் ‘இல்லை, நான் இருக்கிறேன்’ என்று அடுத்து அதே பிராண்ட் விளம்பரங்களில் நடிக்க வந்திருக்கிறார் அவர் மகள் ‘மெலிண்டா லூ மார்ஸ்’. குடும்ப சொத்து, குடும்ப பிசினஸ் போல் இது குடும்ப சாபம் போலிருக்கிறது.
உலகின் நம்பர் ஒன் பிரீமியம் பாப்கார்ன் ஓனர் ‘ஆர்வில் ரெடன்பாக்கர்’ இதே கேஸ்தான். தன் பிராண்ட் விளம்பரங்களில் நடிப்பேன் என்று ஏகத்திற்கு அழிச்சாட்டியம் செய்தவர். வயதாகிவிட்டது என்று மற்றவர்கள் அவரை ஈசி சேரில் கட்டி காசி யாத்திரை அனுப்பும் வரை நடித்தார். ஆஸ்கார் வாங்காதது ஒன்று தான் குறை!
வாடிக்கையாளர்கள் நம்பி வாங்குவது தொழிலதிபரின் பிராண்டை. தொழிலதிபரை அல்ல. அவர்கள் உறவு தொழிலதிபர்களோடு அல்ல; அவர்கள் விற்கும் பிராண்டோடு. இதுதான் முறை. இப்படி நடப்பதே சரி.
உரிமையாளரா? பிராண்டா?
‘இதயம்’ நல்லெண்ணெய் நிறுவனத்தின் ஓனர் யார் தெரியுமா? அது தெரியாமல்தானே இத்தனை நாளாய் அந்த பிராண்டை வாங்கி சமைக்கிறோம். ஓனரை தெரியவில்லை என்பதால் ஓவராய் கசக்கிறதா இதயம்?
‘விவேக்ஸ்’ கடை யாருடையது? அவரை பார்க்கவா வருடந்தோறும் ஜனவரி முதல் தேதி ஸ்பெஷல் விற்பனைக்கு கோயிலுக்கு கூட போகாமல் முந்தின இரவிலிருந்து முட்டிக் கால் வலிக்க க்யூவில் முட்டி முன்னேறினோம்?
‘சென்னை சில்க்ஸ்’ உரிமையாளரை யாவது தெரியுமா? அதை எதற்கு தெரிந்துகொண்டு என்று தானே அங்கு படையெடுத்து பட்டு புடவைகளை கட்டு கட்டாய் அள்ளி சட்டை துணிகளை சரமாரியாக வேட்டையாடினோம்!
வாடிக்கையாளர்கள் பிராண்டை வாங்குவது அது தரும் பயனிற்கு. பிராண்டைப் பற்றிய எண்ணத்தை வளர்ப்பது அதன் பொசிஷனிங்கும் பர்சனாலிடியும். இதை அவர்கள் பெருவாரியாய் பெறுவது பிராண்டின் விளம்பரங்களிலிருந்து. பிராண்ட் விளம்பரங்கள் அதைச் செய்தால் போதுமானது. அதை விட்டுவிட்டு ஓனர்கள் தங்களை முன்னிறுத்துவதால் என்ன பயன்? யாருக்கு என்ன ப்ரீதி?
ஒன்றுமில்லாத நிலையில் உழைத்து, பிழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள் என்பது ஓகே. பாராட்டுக்குரியது. அதற்காக விளம்பரங்களில் வந்து நடிக்கவேண்டும் என்று என்ன விபரீத ஆசை? சதா பிராண்டோடு சேர்ந்து பத்திரிகை செய்திகளில் படர வேண்டும் என்று எதற்கு பிரியம்?
வாடிக்கையாளர்கள் அந்த தொழிலதிபர்களை மதிக்கலாம். அவர்கள் உயர்வைப் போற்றலாம். அதற்காக அவர்கள் பிராண்டை வாங்கப்போவதில்லை. பிராண்ட் தரும் பயன் தனக்கேற்றதா என்று பார்த்து மட்டுமே வாங்குவார்கள். அதன் ஓனர்கள் உழைத்து முன்னேறியவர்கள் என்பதற்காக அல்ல.
கண்டக்டரா? சூப்பர் ஸ்டாரா?
ரஜினிகாந்தை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடுவது அவர் கண்டக்டராக இருந்தார் என்பதற்காக அல்ல. அவர் ஸ்டைலுக்காக. கண்டக்டராக இருந்து முன்னேறினார் என்று சிலாகிப்பார்கள். அவர் படம் நன்றாக இல்லையென்றால் ஒதுக்கவும் தயாராக இருப்பார்கள். அது போலத்தான் தொழிலும், பிராண்டும்!
செய்யும் தொழிலையும் விற்கும் பிராண்டையும் தனியாக பார்க்கவேண்டும். அதன் ஓனர்கள் அதோடு தங்களையும் சேர்க்கும் போது தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வரும் போது அது அவர்களோடு பிராண்டையும், தொழிலையும் சேர்த்து பாதிக்கும். ‘விஜய் மல்லையா’ தன்னை தன் தொழிலோடு, பிராண்டோடு சேர்த்து முன்னிறுத்தியவர். அவர் பிளேன் கீழே இறக்கப்பட, அவர் தொழில்கள் சரியத் துவங்க இன்று அவர் வசமுள்ள நல்ல கம்பெனிகள் கூட அவருக்கு ஏற்பட்ட பெயர் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அவர் இழந்தது தன் தொழிலை மட்டுமல்ல. ஒரு சாம்ராஜ்யத்தை. தொழிலோடு தன்னை முன் நிறுத்தியதால் விளைந்த விபரீதம் இது!
தமிழ்நாட்டின் முன்னணி ஹோட்டல் செயின் அது. சுவைக்கும், சுத்தத்திற்கும் பெயர் போன ஹோட்டல். அதன் உரிமையாளர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் என்றும் தன்னை முன்னிருத்திக் கொள்ளவில்லை. தன் ஹோட்டல் விளம்பரங்களில் தோன்றவில்லை. பத்திரிகை செய்திகளில் தன் முகத்தை நீட்டியதில்லை. அப்பேற்பட்டவர் ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.
கொலை கேஸினால் ஹோட்டல் பாதிக்கப்பட்டதா?
இல்லை. அவர்தான் அந்த ஹோட்டல் முதலாளி என்பது பேப்பரில் கொலை வழக்கு செய்தி வந்த பின்தான் எல்லாருக்கும் தெரிந்தது. தன்னையும் தன் ஹோட்டலையும் அவர் பிரித்து வைத்திருந்தார். அதனாலேயே அவர் கொலை வழக்கையும் ஹோட்டலையும் வாடிக்கையாளர்கள் வெவ்வேறாக பிரித்து வைத்திருந்தார்கள். கொலை செய்தியை முழுவதும் படித்தார்கள். பேப்பரை மடித்து வைத்தார்கள். குடும்பத்தோடு அதே ஹோட்டலுக்கு சென்றார்கள். செல்கிறார்கள். செல்வார்கள். இன்றும் செழிக்கிறது அந்த ஹோட்டல்.
உங்கள் பிராண்ட் வேறு, நீங்கள் வேறு என்று பிரித்து வையுங்கள். உங்கள் முகத்தை உங்கள் பிராண்டிற்கும் தொழிலிற்கும் தராதீர்கள். பிராண்டின் முகம் அதன் பொசிஷனிங். அதன் பர்சனாலிடி. அது வாடிக்கையாளருக்கு தரும் பயன். பிராண்ட் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அது உங்களையும் தாண்டி புனிதமானது; சாஸ்வதமானது. அதை உங்களோடு சேர்ந்து மண்ணில் புதைக்கும் செயல்களை செய்து தொலைக்காதீர்கள்.
வாடிக்கையாளர் பிராண்டை கும்பிட போகும் வழியில் குறுக்கே வரும் தெய்வம் என்று தன்னை ஓனர் நினைத்தால், வாங்க கிளம்பும் வழியில் குறுக்கே வரும் பூனையாக மாறுவார்!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT