Published : 12 Oct 2020 06:55 AM
Last Updated : 12 Oct 2020 06:55 AM

பெரிய பொருளாதார நாடாக 2050-ல் இந்தியா உயரும்: லான்செட் கணிப்பில் தகவல்

புதுடெல்லி

‘‘அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2050-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்’’ என்று லான்செட் அமைப்பு கணித்துள்ளது. இதே நிலை 2100-ம் ஆண்டு வரை தொடரும் என்று மருத்துவ இதழான லான்செட் கணித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம், பணி புரியும் வயதிலான திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. மேலும் பொருளாதாரம் வளர்வதற்கான புவியியல் அமைப்பு மற்றும் அரசியல் சூழல் ஆகியன வளர்ச்சிக்கு ஏதுவாக உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு உலகளவில் 7-வது இடத்தில் வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. 2030-ம் ஆண்டில் இது 4-வது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்ற கணிப்பும் உருவாகியுள்ளது. அதாவது அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உயரும் என்று கூறப்படுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் அதாவது 2050-ல் இந்தியா 3-வது இடத்துக்கு உயரும். இதே நிலை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதாவது 2100 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள 20 வயது முதல் 64 வயது வரையிலானோரை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் சீனாவில் பணிபுரியும் வயதிலானோர் விகிதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் 2100-ம் ஆண்டில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் அதிகஎண்ணிக்கையிலானோர் இருப்பர். தற்போதைய சூழலில் 2035-ம்ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடிக்கும். ஆனால் இந்த நிலை மாறி 2098-ல் அமெரிக்கா மீண்டும் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் என கணித்துள்ளது.

வரும் 2024-25-ம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர்பொருளாதாரமாக உயரும்என்று கணிக்கப்பட்டிருந்தாலும், கரோனா பாதிப்பு காரணமாக இந்த இலக்கை எட்டுவதில் பின்னடைவு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x