Published : 01 Sep 2015 10:27 AM
Last Updated : 01 Sep 2015 10:27 AM
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கூகிள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி பிரின், டெல் கம்ப்யூட்டர் தொடங்கிய மைக்கேல் டெல், மாக்ஸ் ஃபேக்டர், எஸ்ட்டீ லேடர், கால்வின் க்ளெயின் போன்ற அழகுச் சாதனங்கள் தயாரிப்பாளர்கள், நியூயார்க் டைம்ஸ், யு.எஸ். நியூஸ் அன்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகைகளின் உரிமை யாளர்கள்.
இவர்களுக்குள் ஏராளம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு பொதுவான ஒற்றுமை என்ன தெரியுமா? இவர்கள் எல்லோருமே யூதர்கள். உலகில் ஒரு கோடி நாற்பது லட்சம் யூதர்கள் வசிக்கிறார்கள். என் நண்பர் மேனேஜ்மென்ட் ஆலோசகர் ஹரீஷ் ஷிவ்தசானி சொல்லுவார், “பிரபலம் இல்லாத ஒரு யூதர்கூட உலகத்தில் கிடையாது.” பல்வேறு சரித்திரக் காரணங்களால், சாதனை செய்வது இந்த இனத்தாரின் ரத்தத்தில் ஊறிய குணம்.
இஸ்ரேலிலிருந்து நம் இறக்குமதி ரூ.14,230 கோடி. இதில் 40 சதவீதம் ராணுவ விமானங்கள், இயந்திரங்கள் 36 சதவீதம், அவர்களுடைய ராணுவத் தளவாடங்களின் முக்கிய வாடிக்கையாளர் இந்தியாதான். இஸ்ரேலுக்கு நம் ஏற்றுமதி ரூ. 20,071 கோடிகள். முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள், உலோகங்கள், ஜவுளிப் பொருட்கள், காய்கறிகள்.
விண்வெளி ஆராய்ச்சியிலும், தொழில் நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத் திட்டுள்ளோம், இஸ்ரேல் நாட்டோடு தொடர்பை வளர்த்தால், அரபு நாடுகளின் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால், இஸ்ரேலோடு நாம் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறோம்.
பூகோள அமைப்பு
மத்தியதரைக் கடற்கரையில் இருக்கும் மிகச் சிறிய நாடு. நிலப் பரப்பு 20,770 கிலோமீட்டர்கள். அதாவது, திருச்சி மாவட்டத்தைவிடச் சுமார் இரண்டு மடங்கு பெரியது. லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகியவை அண்டைய நாடுகள். வறண்ட பாலைவனங்கள் ஒரு பக்கம், பனிமூடிய மலைகள் இன்னொரு பக்கம் என இரு மாறுபட்ட பருவநிலைகள்.
1950 இல் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்த நகரம் ஜெருசலேம். ஆனால், அரபிய நாடுகள் இதை எதிர்ப்பதால், தலைநகராக இயங்குவது டெல் அவிவ்.
மக்கள் தொகை
80 லட்சம். 75 சதவீதம் யூதர்கள். மீதியில் பெரும்பாலானோர் அராபிய முஸ்லீம்கள். கொஞ்சம் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். பேசும் மொழி ஹீப்ரூ.
சுருக்க வரலாறு
பைபிள் நாட்களிலிருந்தே, பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்த இஸ்ரேல், யூதர்களின் தாயகம். ரோம சாம்ராஜ்ஜியத்தின் அங்கமாக இருந்தது. கி.பி. 66 இல் யூதர்கள் ரோமின் அடிமைத்தளையை உடைத்தார்கள்.
ஆனால், நான்கே ஆண்டுகளில் ரோம் மறுபடியும் பாலஸ்தீனத்தைப் பிடித்தது. யூதர்கள்மீது அடக்குமுறை. மண்ணின் மைந்தர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஓடிப்போய் அங்கே புதுவாழ்வு அமைத்துக்கொண்டார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று வாழவேண்டிய கட்டாயம், சொந்த நாடே இல்லாத நிலை.
1897 இல், தியோடோர் ஹெர்ஜெல் என்னும் பத்திரிகையாளர் உலக யூதர்கள் இயக்கம் தொடங்கினார். பல நாடுகளில் சிதறிக் கிடக்கும் யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பது குறிக்கோள். 1948 இல், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தக் கனவு நனவானது.
சுற்றியிருக்கும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேலின் ஜனனத்தை ஜீரணிக்க முடியவில்லை. 1948, 1967 1973 என மூன்று முறை போர் நடந்தது. எல்லாத் தடவையும் ஜெயித்தவர்கள் இஸ்ரேலியர்கள்.
நாம் இஸ்ரேலை அங்கீகரித்தது 1992 இல்தான்.
ஆட்சி முறை
மக்களாட்சி நடக்கிறது. நெஸ்ஸெட் (Knesset) என்னும் ஒரே மக்கள் சபைதான். நாட்டுத் தலைவர் ஜனாதிபதி. ஆட்சித் தலைவர் பிரதமர்.
நாணயம்
ஷெக்கெல் (Shekl). சுமார் 17 ரூபாய்க்குச் சமம்.
பொருளாதாரம்
தொழில் நுட்பத்தில் மகா கெட்டிக்காரர்கள். சொட்டு நீர்ப்பாசனம் மூலம், பாலைவன நாட்டைச் சோலைகளாக்கியிருக்கிறார்கள். இந்தத் தொழில் நுட்பத்தை இந்தியா உட்படப் பல நாடுகள் இஸ்ரேலிலிருந்து பெற்று வருகிறோம். ராணுவத் தளவாடங்கள், போர் விமானங்கள், நுணுக்கமான இயந்திரங்கள் தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்கள். கம்ப்யூட்டர் உதவியுடன் பொருட்களை வடிவமைப்பதில், உலக அரங்கில் இஸ்ரேலுக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டின் முக்கிய செல்வம், அவர்கள் மூளை, கடும் உழைப்பு.
பயணம்
அக்டோபர் முதல் மே வரை மழை பெய்யும். அதுவும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கொட்டும். வடக்குப் பகுதியில் பனி. பிற இடங்களில் வெயில் அதிகம். பயணம் செய்யும் பகுதியின் பருவநிலையைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப ஆயத்தமாகப் போகவேண்டும்.
பிசினஸ் டிப்ஸ்
யூதர்களின் வார விடுமுறை சனிக்கிழமை. வெள்ளி அரை நாள். இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை. கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு ஞாயிறு விடுமுறை. வேலைநேரம் காலை 8 மணி முதல் மாலை 4.30 வரை. அரை நாட்களில் மதியம் 1 மணிவரை.
அவர்கள் அலுவலகங்களுக்குப் போனால், காத்திருக்க வைப்பார்கள். மீட்டிங்கின்போதும், அறைக்குள் பலர் வருவார்கள், போவார்கள். உங்களிடம் பேசிக்கொண்டே போன் பண்ணுவார்கள், அதிக நேரம் கதையடித்துக்கொண்டேயிருப்பார்கள். பிசினஸ் செய்யவேண்டுமா? உங்களுக்குத் தேவை, அசாத்தியப் பொறுமை.
சந்திப்புகளுக்கு நேரத்துக்கு வருவது இஸ்ரேலியப் பழக்கமல்ல. தாமதமாக வருவார்கள், சில சமயங்களில் வராமலே இருப்பார்கள். இந்தப் பழக்கம் இப்போது மெள்ள மாறிவருகிறது.
விசிட்டிங் கார்டுகள் மிக அவசியம். அதில் உங்கள் பதவி விவரங்களைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். ஏராளமானவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். என்றாலும், விசிட்டிங் கார்டுகளில், ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், மறுபக்கம் ஹீப்ரூ மொழியிலும், விவரங்கள் தருவது நல்லது.
நீங்கள் எதைப் படிக்கக் கொடுத்தாலும், கடைசிப் பக்கத்தைத்தான் முதலில் பார்ப்பார்கள். பின்பக்கமாகத் திருப்பியபடியே, முதல் பக்கத்துக்கு வருவார்கள். ஆச்சரியப்படாதீர்கள். எனென்றால் ஹீப்ரூ இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மொழி.
விவாதம் செய்வது அல்வா சாப்பிடுவது மாதிரி. பேச்சு வார்த்தை களின்போது, உணர்ச்சிவசப்படுவார்கள். கத்துவார்கள். சீக்கிரத்தில் முடிவுகள் எடுக்கமாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். ஒரு நாளுக்கு ஒரு மீட்டிங்குக்கு அதிகமாக வைத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், முதலில் போகும் மீட்டிங் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்று யாருக்குமே தெரியாது.
உங்கள் வயது, வருமானம், குடும்பம் போன்ற எல்லா விஷயங்களையும் கேட்பார்கள். நீங்கள் கேட்டாலும், கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல் பதில் சொல்லுவார்கள். தொட்டுப் பேசுவதும், கையைப் பிடித்துக்கொண்டே பேசுவதும், நட்புக்கும், நெருக்கத்துக்கும் அடையாளம். மத விஷயங்கள் பேசவே பேசாதீர்கள். எப்போதும் பேசக்கூடிய சப்ஜெக்ட், விளையாட்டு, அதிலும் குறிப்பாக, நீச்சல், ஸாக்கர் என்னும் கால்பந்து ஆட்டம், பாஸ்க்கெட் பால்.
சில தனித்துவ உடல்மொழிகள் இஸ்ரேலியர்களுக்கு உண்டு. ஐந்து கை விரல்களையும் மேலும், கீழுமாக ஆட்டினால், ‘‘வேகமாகப் பேசுகிறீர்கள். மெதுவாகச் சொல்லுங்கள்” என்று அர்த்தம். உள்ளங்கையில் இன்னொரு கையின் ஆள்காட்டி விரல் குத்துவதுபோல் சைகை காட்டினால், ”நீங்கள் சொல்வதை, நான் நம்பவில்லை” என்று சொல்வதாகப் புரிந்துகொள்ள வேண்டும். .
உடைகள்
பான்ட், முழுக்கைச் சட்டை சாதாரண பிசினஸ் உடை. அவர்கள் பாரம்பரிய உடைகளை நீங்கள் அணிந்துபோனால், போலித்தனமாக நினைப்பார்கள். பெண்கள் உடலை மறைக்கும் ஆடைகள் அணியவேண்டும்.
உபசரிப்புக்கள்
விருந்தோம்பலில் சிறந்தவர்கள். ஓரளவு பழகிவிட்டால், வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுவார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், வீடுகளுக்குள் காலணிகள் போட்டுக்கொண்டு போகக்கூடாது. அவற்றுக்கான இடங்களில் கழற்றிவைக்க வேண்டும். பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. முஸ்லீம்கள் வீடுகளில், மதுவும் பரிமாறுவதில்லை. இடது கையால் எதையும் எடுத்துச் சாப்பிடக்கூடாது, நீங்கள் இடதுகைப் பழக்கம் உடையவராக இருந்தாலும். தட்டை வழித்துச் சாப்பிடுவது அநாகரிகம். கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.
பரிசுகள் தருதல்
ஓரளவு நெருங்கிப் பழகிய பிறகு மட்டுமே, பரிசுகள் தரவேண்டும். சில நிறுவனங்களில் ஊழல் தடுப்புக்காக, தங்கள் ஊழியர்கள் யாரிடமிருந்தும் பரிசுகள் பெறுவதைத் தடை செய்திருக்கிறார்கள். எனவே, பரிசுகள் தருவதில் கவனமாக இருங்கள். அவர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைக்கும்போது, பூங்கொத்துக்களோ, சாக்லெட்களோ வாங்கிப்போகலாம். பரிசுகளை வலது கையால் மட்டுமே கொடுக்கவும், வாங்கவும் வேண்டும். இரண்டு கைகளையும் பயன்படுத்துவதும் சரியே.
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT