Published : 23 Sep 2015 10:15 AM
Last Updated : 23 Sep 2015 10:15 AM
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 3 மாடல் டீசல் கார்களின் புகையளவு குறித்து விசாரணை நடத்தப்போவதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
டீசல் வாகன புகையளவு சோதனையில் மோசடி செய்ததாக `ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. அமெரிக்காவில் இந்நிறுவனம் அளித்த வாக்குமூலம் இப்போது கொரியாவுக்கும் பரவியுள்ளது. இதனால் இந்நிறுவனத் தயாரிப்பு களின் புகையளவு குறித்து விசாரணை நடத்த தென்கொரியா உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமையிடம் (இபிஏ) டீசல் கார்களின் புகையளவை மதிப்பீடு செய்யும் கருவியின் சாஃப்ட்வேரில் மாறுதல்கள் செய்து ஏமாற்றியதாக ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை இந்நிறுவன பங்குகள் 19 சதவீதம் சரிந்தன.
இந்நிறுவனம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 1,800 கோடி டாலர் வரை அபராதம் செலுத்த நேரிடும்.
அமெரிக்க நீதித்துறை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஆடி நிறுவன மாடல்களான ஆடி ஏ3, ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, பீட்டில், கோல்ப் மற்றும் பசாட் ஆகிய கார்களின் புகையளவு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ள தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியா 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஜெட்டா, கோல்ப் மற்றும் ஆடி ஏ3 கார்கள் அதாவது 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் உற்பத்தியானவற்றை ஆய்வு செய்யுமாறு உத்தவிட்டுள்ளதாக தென்கொரிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் துணை இயக்கு நர் பார்க் பான் கியு தெரிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு இந்த வாகனங்களை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சகம் முடிவு செய்யும் என அவர் மேலும் கூறினார். ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகையளவு வெளியேற்றம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக இருந்தால் அனைத்து ஜெர்மன் நிறுவன டீசல் கார்களையும் சோதனைக்கு உள்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இது தொடர்பாக கொரியாவில் உள்ள ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவன செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கருத்து கூறுகையில், ஜெர்மனியில் உள்ள தலைமையகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். இப்போது எழுந்துள்ள பிரச்சினையால் ஆஸ்திரேலியாவில் நிறுவன கார் தயாரிப்பு பாதிக்கப்படும். எனவே எத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று கருத்து கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கட்டமைப்பு அமைச்சகம் இது குறித்த மேல் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள கார்களிலும் இதேபோன்ற சாஃப்ட்வேர்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பசாட் மாடல் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவுத் தலைவர் மைக்கேல் ஹார்ன் கூறுகையில், இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள தாகக் கூறினார்.
இந்த விவகாரத்தால் ஜெர்மன் கார் தயாரிப்புத் தொழில் மீதான நம்பகத்தன்மை தகர்ந்துபோய் விட்டதாக ஜெர்மனியின் பொருளாதாரத்துறை அமைச்சர் சிக்மர் கேப்ரியல் கூறினார். தென்கொரியா இறக்குமதி செய்யும் கார்களில் மூன்றில் இரண்டு பங்கு டீசல் கார்களே என்று அவர் குறிப்பிட்டார்.
2011-ம் ஆண்டு ஜெர்மனி, கொரியா இடையே மேற்கொள் ளப்பட்ட தாராள வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஜெர்மனியிலிருந்து கார்கள் இறக்குமதி செய்வது அதிகரித் துள்ளது. கடந்த 8 மாதங்களில் தென் கொரியா இறக்குமதி செய்துள்ள கார்களின் மதிப்பு 450 கோடி டாலராகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் இறக்குமதி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து தென் கொரியா வின் இறக்குமதி 42.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8 மாதங்களில் தென் கொரியாவில் விற்பனையான வெளிநாட்டு கார்களில் ஃபோக்ஸ் வேகன் மற்றும் ஆடி கார்களின் பங்கு 28.2 சதவீதமாகும்.
இந்தத் தகவலால் இறக்குமதி குறையும். அதே சமயம் உள் நாட்டு தயாரிப்பான ஹூண்டாய் விற்பனை அதிகரிக்கும் என்று கொரிய முதலீடு மற்றும் செக்யூரிட் டீஸ் நிறுவன ஆய்வாளர் சுஹ் சுங் மூன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஃபோக்ஸ் வேகன் கார்களை சோதனை செய்யும் நடவடிக்கை தங்கள் நிறுவனத் தயாரிப்புகளுக்குப் பொருந்தாது என்று டெய்ம்லர் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT