Published : 02 Sep 2020 07:12 AM
Last Updated : 02 Sep 2020 07:12 AM

ரூ.1.5 லட்சம் கோடி நிலுவையை செலுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம்

புதுடெல்லி

டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் பகிர்வு (ஏஜிஆர்) நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தது. மனு மீதான தீர்ப்பில் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையைத் தவணை முறையில் 2031-க்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 20 ஆண்டுகள் அவகாசம் தர கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிமன்றம் 10 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது.

முதல் தவணை தொகை அதாவது மொத்த நிலுவைத் தொகையில் 10 சதவீதத்தை இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தந்த டெலிகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அல்லது முதன்மை நிர்வாக அதிகாரிகள் இந்த ஏஜிஆர் நிலுவைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நான்கு வாரங்களில் இதற்கான தனிநபர் உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தவணைகளைச் செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டாலோ, செலுத்த தவறினாலோ டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிலுவைத் தொகைக்கு உத்தரவாதம் அளித்த அதிகாரிகளும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திவால் ஆன நிறுவனங்களின் நிலுவைத்தொகை குறித்து என்சிஎல்ஏடி முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் ஏஜிஆர் தொகையை மார்ச் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. சுய மதிப்பீட்டின் அடிப்படையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏஜிஆர் தொகையை முழுமையாகச் செலுத்தின.

அரசு கணக்கீட்டின்படி ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.25,976 கோடி செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மிகவும் பாதிக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் கோடி நிலுவையில் ரூ.7,854 கோடி மட்டுமே செலுத்தியது.

கரோனா நெருக்கடி நிலையில் டெலிகாம் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x