Published : 31 Aug 2020 09:38 PM
Last Updated : 31 Aug 2020 09:38 PM
கரோனாவால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால், ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) இதுவரை பார்த்திராத அளவில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லாக்டவுன் நடவடிக்கையால், நுகர்வோர் செலவிடுவது குறைந்தது, தேவை குறைந்து, முதலீடு செய்வதும் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் (2019-20)முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த ஜனவரி –மார்ச் மாதத்தில் 3.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாக குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டிலிருந்துதான் காலாண்டு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்போது இருந்து ஏறக்குறைய 24 ஆண்டுகளில் இதுபோன்ற மோசான வீழ்ச்சியை கண்டதில்லை என்றும், இது எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சி எனவும் பொருளதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகளவில் ரஷ்யாவின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 8.5 சதவீதம் குறைந்துள்ளது,சீனாவின் பொருளாதாரம் 3.2 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் கரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த ஜனவரி மார்ச் மாதத்தில் சீனாவில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அமெரிக்காவில் ஏப்ரல் –ஜூன் மாதங்களில் பொருளாதாரம் வளர்ச்சி 32.9 சதவீதம் எப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. லட்சக்கணக்கான மக்களை வேலையின்மையில் தள்ளி, வேலையின்மையை 14.7 சதவீதமாக உயர்த்தியது.
இன்று வெளியிடப்பட்ட ஜிடிபி புள்ளிவிவரத்தில், வேளாண் துறை மட்டுமே ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல்காலாண்டில் வேளாண் துறை 3 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
உற்பத்தித் துறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 39.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத்துறை வளர்ச்சி 50.3 சதவீதம் வீழ்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் முதல்காலாண்டில் 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
சுரங்கத் தொழில் வளர்ச்சி 23.3 சதவீதம் சரிந்துள்ளது, கடந்த ஆண்டின் முதல்காண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது.
ஹோட்டல், வர்த்தகம், போக்குவரத்து, தகவல்தொடர்பு, சேவைத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல்காலாண்டில் 3.5சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது.நிதிச்சேவை, ரியல்எஸ்டேட் போன்றவை 5.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்புநிதியாண்டின் 2-ம் காலாண்டிலும் அதாவது ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும், வீழ்ச்சி அடையும் என எச்சரித்திருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, கடவுளைக் காரணம் காட்டி, இந்த நிதியாண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி மோசமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதரம் கடந்த 2017-18-ம் ஆண்டிலிருந்து சரிந்து வருகிறது. 2017-18ம் ஆம்டில் 7 சதவீதமாக இருந்த பொருளதார வளர்ச்சி, 2018-19ம் ஆண்டில் 6.1 சதவீதமாக குறைந்தது, 2019-20ம் ஆண்டில் 4.2 சதவீதமாகச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT