Published : 27 Aug 2020 08:28 PM
Last Updated : 27 Aug 2020 08:28 PM

ரயில்வே மின்சாரத் தேவை 2030-ம் ஆண்டுக்குள் 33 பில்லியன் யூனிட்களாக உயரும்

புதுடெல்லி

இந்திய ரயில்வே மின்சாரத் தேவை 2030ஆம் ஆண்டுக்குள் 33 பில்லியன் யூனிட்களாக எட்டும். இப்போதைய தேவை சுமார் 21 பில்லியன் யூனிட்களாக உள்ளது.

ஆற்றல் தேவையில் 100 சதவீதம் தற்சார்பு நிலையை எட்டுவது மற்றும் நாட்டின் சூரிய மின் உற்பத்தி இலக்கை எட்டுவதில் பங்களிப்பு செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கையாக, தொடர்புடைய துறையினருடன் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில்வே மற்றும் வணிகம், தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய ரயில்வேயின் மின்சாரத் தேவைக்கு சூரிய மின் உற்பத்தி வசதியை முழு அளவில் பயன்படுத்திக் கொள்வன் மூலம் முழுக்கப் `பசுமை முறையிலான போக்குவரத்து' சேவையை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் முக்கிய அம்சங்கள்:

1. ரயில் பாதையை ஒட்டிய பகுதிகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு புதுமையான திட்டங்களை உருவாக்குதல்.

2. 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உற்பத்தியே இல்லாத அளவுக்கு மாறுவது என்ற இந்திய ரயில்வேயின் இலக்கை எட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க வளங்களின் மூலமான மின் உற்பத்தியை 20 கிகா வாட் அளவுக்கு எட்டும் வகையில் மின்சாரக் கொள்முதல் வழித்தடங்களை உருவாக்குவது.

3. இந்திய ரயில்வேயில் பெரிய அளவில் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துதல்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வளங்களின் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை ஊக்குவிப்பதில் இந்திய ரயில்வே முன்மாதிரியாக இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர். 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உற்பத்தி இல்லாத போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை இந்திய ரயில்வே எட்டுவதற்கு முழு ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரயில்வேக்குச் சொந்தமான காலி இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு 25 கே.வி. அளவுக்கு நேரடி இணைப்பு தரக் கூடிய 1.7 மெகாவாட் திறன் கொண்ட முன்னோடித் திட்டம் பினாவில் (ம.பி.) வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இது தவிர ரயில் பாதை அல்லாத தேவைக்குப் பயன்படுத்த ரேபரேலியில் எம்.சி.எப். வளாகத்தில் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, 2 மெகாவாட் திறனில் திவானாவிலும், 50 மெகாவாட் திறனில் பிலாயிலும் மாநில மற்றும் மத்திய மின் விநியோக நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்களில் 2030ஆம் ஆண்டுக்குள் 20 கிகா வாட் அளவுக்கு சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவது என்ற மெகா திட்டத்தை இந்தியன் ரயில்வே உருவாக்கியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்குள் ரயில்பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போது 21 பில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் இருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார தேவை 33 பில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x