Published : 18 Aug 2020 10:45 PM
Last Updated : 18 Aug 2020 10:45 PM

தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கும், நகராட்சிகளுக்கும் முக்கிய பங்கு: ஹர்தீப் சிங் பூரி வலியுறுத்தல்

புதுடெல்லி

தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கும், நகராட்சிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

பிரதமர் ஸ்வநிதித் திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக, மாநிலங்களின் வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள்; தலைமைச் செயலர்கள்; மாநில முதன்மைச் செயலர்கள்; காவல்துறை தலைமை இயக்குநர்கள்; முனிசிபல் ஆணையர்கள்; மாவட்ட ஆட்சியர்கள்; மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள்; இதர பங்குதாரர்கள் ஆகியோருடன் வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி இன்று நடத்திய கூட்டத்தில் தெரு வியாபாரிகள் குறித்து, அவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைவருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள, தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் வியாபாரிகளின் தள்ளுவண்டிகளைத் தள்ளிவிடுவது; அவர்களிடம் கையூட்டு கேட்பது; அல்லது வேறு விதமாகத் தொல்லை கொடுப்பது என்பது மிக மோசமான கொடூரமான செயல் ஆகும். ஏற்கனவே கழுத்து வரை கடனில் உள்ள தெரு வியாபாரி, அதிக அளவிலான வட்டி விகிதத்தில் அவர்களுக்கு கடன் கொடுக்கும் மோசமான அடகு கடைக்காரர்களிடம், கடன் கொடுப்பவர்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தங்களை மீட்பதற்காக அவர்கள் எதிர்நோக்கும் அரசே, அவர்களுக்கு தொல்லைத் தரக்கூடிய ஏதேனும் ஒரு சிறு செயலைச் செய்தாலும் அது பரிகாசத்திற்கு உரியதாக கேலிக்கூத்தாக மாறிவிடும்” என்று அவர் கூறினார். மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் துர்கா ஷங்கர் மிஸ்ரா; உள்துறை செயலர் அஜய் பல்லா; நாடு முழுவதிலும் இருந்து பல மூத்த அதிகாரிகள் ஆகியோர், இந்த மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடன் என்ற கோரப்பிடியின் சுழற்சியிலிருந்து வியாபாரிகளை விடுவிப்பதற்காக முதன்முறையாக தீவிரமான முயற்சி பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் ஸ்வநிதித் திட்டப் பயனாளிகள் அனைவரது சமூகப் பொருளாதார விவரங்களையும் பதிவு செய்து, அவர்களுக்கு அவர்கள் தகுதிகளுக்கு ஏற்ப, பல்வேறு அரசுத் திட்டங்கள் சென்றடையும் வசதியை ஏற்படுத்துவதற்காக திட்டமொன்றை அமைச்சகம் தயாரித்து வருகிறது. சாதாரண காலத்தின் போதும் தெரு வியாபாரிகள் ஒடுக்கப்பட்ட நிலையிலான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்றை அடுத்து அவர்கள் மேலும் அதிக அளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அமைச்சர் கூறினார். தேவையற்ற தொல்லைகள் கொடுத்தல்; இடம்பெயரச் செய்தல் போன்ற செயல்கள் நிகழாமல், தெரு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பான உணர்வு ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார். நகர்ப்புற மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் தெரு வியாபாரிகள் என்றும், முறைசாராப் பொருளாதாரத்திற்கு அவர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இதுவரை பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் கடன் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றும் இவற்றுள் ஒரு லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டன என்றும் 37 ஆயிரம் பேருக்கு கடன் தொகை விநியோகிக்கப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், வியாபாரிகளின் முழுமையான வளர்ச்சிக்கும், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களை சென்றடைவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ((DAY-NULM) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற வியாபாரிகளுக்கு ஆதரவு (Support to Urban Street Vendors - SUSV) தொகுப்புத் திட்டம் மூலமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Bodies - ULBs) விற்பனைக்கு சாதகமான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான அம்சம் உள்ளது. தெரு வியாபாரிகளுக்கான சட்டம் 2014, மே 2014 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்படுகின்றன. இச்சட்டம் நகர்ப்புற வியாபாரிகளின் விதிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து, தெரு வியாபாரிகளின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தெரு வியாபாரிகளின் பணி மூலதனத் தேவைகளுக்காக, அரசு பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தை 1 ஜூன் 2020 அன்று அறிமுகப்படுத்தியது என்றும், இத்திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் ஓராண்டு காலக் கடனாகப் பத்தாயிரம் ரூபாய் வரை பிணையில்லா பணி மூலதனக் கடன் பெறலாம் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x