Published : 14 Aug 2020 05:04 PM
Last Updated : 14 Aug 2020 05:04 PM

சிறு தொழில் முனைவோர், வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்க நுண் கடன் அமைப்பு: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி

சிறு தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக நுண் கடன் அமைப்பு பற்றிய கொள்கை இறுதியாக்கப்பட்டு வருவதாக குறு, சிறு, நடுத்தரத்தொழில்துறை, சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இன்று இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை உறுப்பினர் அமைப்புகளுடனும், எஃப் ஐ சி சி ஐ பிரிவு அமைப்புகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலில், நெகிழி, ஆடைத் தயாரிப்பு, தோல், மருந்தாளுமை போன்ற பிரிவுகளும், இவை சார்ந்த தொழில்களும் தனிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவை என்று கூறினார். பல்வேறு சிந்தனைவாதிகள் கொண்ட அமைப்புகள் மூலமாக, முக்கியமான பிரிவுகளில், அடிமட்ட நிலையில் உள்ள பிரச்சினைகள் குறித்து எஃப் ஐ சி சி ஐ யும் தொழில் துறை அமைப்புகளும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கொள்கை முடிவுகள் எடுக்க உதவும் வகையில் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுயசார்பு இந்தியா திட்ட முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தொழில்துறை அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலமாக இறக்குமதியை குறைத்து, தொழில்துறை தயாரிப்புச் செயல்பாடுகள் உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினப் பகுதிகளில் தொழில்துறை தொகுப்புகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என்று கட்காரி கூறினார். சிறு தொழில் முனைவோர்களுக்கும், வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக நுண் கடன் அமைப்பு பற்றிய கொள்கை இறுதியாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அடிமட்ட நிலையிலான பிரிவு வாரியான, தொழில் வாரியான ஆய்வே தற்போதைய தேவை என்று கட்கரி வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலமாக அவர்களது பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, கொள்கைகளை வரையறுக்க முடியும் என்று அவர் கூறினார்.

சமூக விலகியிருத்தல் என்பது புதிய விதியாக உருப்பெற்றுள்ளதால் முதல் 50 ஆயிரம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய இணையவழி மின்னணு புத்தகம் ஒன்றை உருவாக்கலாம் என்று தொழில்துறை அமைப்புகள் ஆலோசனை தெரிவித்தன.

இது தவிர மற்ற ஆலோசனைகளையும் அவை தெரிவித்தன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அமைப்பினர் உறுதியளித்தனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x