Published : 24 Jul 2020 09:34 PM
Last Updated : 24 Jul 2020 09:34 PM
புதிய, எளிமையான வருமான வரி செலுத்தும் நடைமுறை மக்களுக்கு பயனளிக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வருமானவரி தினத்தின் 160ஆவது ஆண்டையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரிய அலுவலகத்திலும், நாடு முழுவதிலும் உள்ள அதன் கள அலுவலகங்களிலும் வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது.
160ஆவது வருமானவரி தினத்தை ஒட்டி, நிதித்துறை கார்ப்பரேட் விவகாரங்கள் துறை ஆகியவற்றுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள செய்தியில், வரி நிர்வாகம், வரி செலுத்துபவர்களுக்கு இணக்கமானதாகவும் வெளிப்படையாகவும் மக்கள் தாங்களாகவே முன் வந்து வருமானவரி செலுத்தும் வகையிலானதாகவும் இயங்க வருமானவரித்துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்காக பாராட்டு தெரிவித்தார்.
சமீப ஆண்டுகளில், வருமான வரித்துறை, வருவாய் சேகரிக்கும் அமைப்பாக மட்டும் இல்லாமல் குடிமக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக மாறி செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். வருமான வரித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய, எளிமையான வரி செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது; கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்தது; உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சலுகை விகிதத்தில் வரி செலுத்துவது; உட்பட பல்வேறு நடவடிக்கைகளும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ‘சுயசார்பு இந்தியா’ என்ற அறைகூவலுக்கான பாதையை வகுப்பதாக அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பெருந்தொற்று நிலவும் இந்தக் காலத்தில் வருமானவரி செலுத்துவதற்கான பல்வேறு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வருமானவரி செலுத்துபவர்களின் பணப்புழக்கம் குறித்த பிரச்சினைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு வருமானவரி செலுத்துபவர்களின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் வருமான வரித்துறை செயல்படுவதாக நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
வருமான வரி செலுத்துவோருக்கான திறம்பட்ட சேவைகளை வழங்குதல்; விதி முறைகளைக் கடைப்பிடித்தல்; பல்வேறு துறைகளையும் உள்ளடக்கி செயல்படுதல் ஆகிய நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டதால் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதற்காக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் வருமான வரித்துறைக்கு பாராட்டு தெரிவித்தார்.
வருமானவரித் துறையில் திறமையான மின்ஆளுகையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருவது குறித்து தாக்கூர் திருப்தி தெரிவித்தார். வழக்குகளைக் குறைக்கும் வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்காக விவாத் சே விஷ்வாஸ் சட்டம் கொண்டு வந்தது குறித்தும் அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT