

மண்பாண்டக் கைவினைஞர்கள் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் பேர் பயனடையும் வகையில்,17,000 மின்சாரத்தில் இயங்கும் பானை செய்யும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தியா ‘சுயசார்பு இந்தியா’வாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக, மண்பாண்டக் கைவினைஞர் சமூகத்தினருக்கு அதிகாரம் வழங்கி, அவர்களையும் வளர்ச்சித் திட்டங்களின் கீழ் கொண்டு வருவதற்காக, காதி கிராமத் தொழில் ஆணையத்தின் கும்ஹார் சஷக்திகரண் யோஜனா திட்டத்தின் கீழ் 100 கலைஞர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய பானை செய்யும் இயந்திரங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வழங்கினார்.
காந்தி நகரில் தமது நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள கலோல் தாலுகாவின் கீழுள்ள பால்வா கிராமத்தில் உள்ளவர்களுக்கு மின் இயந்திரங்களை அமித் ஷா புதுடெல்லி இருந்து காணொலி மூலமாக வழங்கினார்.
கும்ஹார் சஷக்திகரண் யோஜனா திட்டத்தைப் பாராட்டிப் பேசிய உள்துறை அமைச்சர், தற்போது ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ள மண்பாண்டக் கைவினைஞர்கள் சமூகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக மட்டுமல்லாமல், பானை செய்தல் என்ற பாரம்பரியக் கலையை மீண்டும் உயிர்ப்பிப்பதாக இது அமையும் என்றார். அசோக் பாய் பிரஜாபதி, ராஜேஷ் பாய் பிரஜாபதி, ஜெயந்தி பாய் பிரஜாபதி, சுரேகா பென்பிரஜாபதி, வேல்ஜி பாய் பிரஜாபதி ஆகிய ஐந்து மண்பாண்டக் கைவினைஞர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இவர்கள் அனைவருக்கும் மின் இயந்திரங்கள் மற்றும் இதர இயந்திரங்கள் மூலமாக பானை செய்வதற்கு கதர் கிராமத் தொழில் ஆணையம், பத்து நாள் பயிற்சி அளித்திருந்தது.
“நம்முடைய மண்பாண்டக் கைவினைஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். மத்திய அரசு, பிரஜாபதி சமூகத்தினரின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெறுவது குறித்து எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. இந்த மின் இயந்திரங்கள், பிரதமர் குஜராத் மக்களுக்கு அளிக்கும் ஒரு பரிசாகும்” என்று அமித்ஷா கூறினார்.
மண்பாண்டக் கைவினைஞர்கள் தங்களது பொருள்களை விற்பதற்கு ஏற்ற வகையில் சந்தைப்படுத்துவதற்காக, ரயில்வே துறையுடன் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று மண்பாண்டக் கைவினைஞர்களுக்கு உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். இதுவரை நாடு முழுவதும் உள்ள மண்பாண்டக் கைவினைஞர்கள் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் பேர் பயனடையும் வகையில்,17,000 மின் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கதர் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.