Published : 22 Jul 2020 07:36 PM
Last Updated : 22 Jul 2020 07:36 PM
பெரும்பான்மையான தொழில் பிரிவுகளில் இருந்து 2020 மே மாதத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைகள் நடந்துள்ளதை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 20 ஜூலை, 2020 அன்று வெளியிட்ட ஊதியப் பட்டியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3.18 லட்சம் புதிய நிகர உறுப்பினர்கள் மே மாதத்தில் இணைந்துள்ளதால், மிகவும் அதிகமான அளவில் 218 சதவீதம் மாதாந்திர வளர்ச்சியை சந்ததாரர் எண்ணிக்கை அடைந்துள்ளது.
பொது முடக்கத்துக்கு இடையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் சுமார் 1 லட்சம் நிகர சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். அந்த மாதத்தில் இணைந்து பங்களிப்பு அளித்த அனைத்து புதிய உறுப்பினர்களையும் சேர்த்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக அளவிலான புதிய உறுப்பினர்கள், குறைந்த வெளியேற்றம் மற்றும் அதிக அளவில் மறுபடி இணைதல் ஆகிய காரணங்களால் சந்தாதாரர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் 1.67 லட்சத்தோடு ஒப்பிடும் போது, மே 2020-இல் புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 66 சதவீதம் அதிகரித்து 2.79 லட்சம் என்னும் அளவில் உள்ளது.
கூடுதலாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருந்து வெளியேறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் 2.97 லட்சத்தோடு ஒப்பிடும் போது சுமார் 20 சதவீதம் குறைந்து, 2.36 லட்சமாக மே 2020-இல் இருந்தது.
வெளியேறி மறுபடி இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்களுக்குள் பணி மாறுதல்கள் நடந்துள்ளது தெரிகிறது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் இறுதி பைசலை விரும்பாமல் நிதிமாற்றம் செய்து கொண்டு உறுப்பினராகத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதால், ஏப்ரல் 2020-ஐ விட மே 2020-இல் சுமார் 19 சதவீதம் இது உயர்ந்துள்ளது.
கட்டிடம், கட்டுமானத் துறை, உணவகங்கள், போக்குவரத்து, மின்சாரம், இயந்திரங்கள் அல்லது பொதுப் பொறியியல் பொருள்கள், கல்வி மற்றும் ஜவுளி ஆகிய துறைகள் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏப்ரல் 2020-இல் பாதிக்கப்பட்டதாக தொழில்களின் துறை வாரியான பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இதில் பெரும்பாலான துறைகள் எதிர்மறையான உறுப்பினர் சேர்க்கையை ஏப்ரல் 2020-இல் பதிவு செய்தன. கோவிட்-19-க்கு முந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 4 லட்சம் உறுப்பினர்களை இணைத்த நிபுணத்துவ சேவைகள் தொழில் பிரிவு, ஏப்ரல் 2020-இல் வெறும் சுமார் எண்பது ஆயிரம் உறுப்பினர்களையே சேர்த்தது. மனித சக்தி முகமைகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சிறு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரை முதன்மையாக உள்ளடக்கியது நிபுணத்துவ சேவைகள் துறை ஆகும்.
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பொதுமுடக்கம் தொடர்வதால், கல்வித் துறையை தவிர மேற்கண்ட அனைத்து இதர துறைகளும் நேர்மறை வளர்ச்சியை மே 2020-இல் கண்டன. 1.8 லட்சம் புதிய நிகர உறுப்பினர்களை மே 2020-இல் இணைத்ததன் மூலம், 125 சதவீத மாதாந்திர வளர்ச்சியை நிபுணத்துவ சேவைகள் பிரிவு பதிவு செய்தது.
ஏப்ரல் 2020-இல் புதிதாக இணைந்த 4853 நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, 8367 புதிய நிறுவனங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மே மாதத்தில் புதிதாக இணைந்து, 72 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதே போல், முதல் மின்னணு செலுத்துச் சீட்டு தாக்கல் செய்யும் நிறுவனங்களைப் பொருத்த வரை, ஏப்ரல் 2020-ஐ ஒப்பிடும் போது 98 சதவீதம் வளர்ச்சியை ஊதியப் பட்டியல் தகவல்கள் மே மாதத்தில் அடைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள அமைப்பு சார்ந்த/அமைப்பு சாரா பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதியை நிர்வகிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஆறு கோடி நடப்பு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
பணியாளர் கோப்புகளின் புதுப்பிப்பு ஒரு தொடர் நடவடிக்கை என்பதாலும், வரும் மாதங்களில் அது புதுப்பிக்கப்படும் என்பதாலும் ஊதியப் பட்டியல் தகவல்கள் என்பது தற்காலிகமானது ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT