Published : 13 Jul 2020 10:11 PM
Last Updated : 13 Jul 2020 10:11 PM
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுடெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
நிதியமைச்சகச் (நிதிச் சேவைகள்) செயலாளர் தேபாசிஷ் பாண்டா, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், மற்றும் நிதிச்சேவைகள் துறை, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வங்கிகளின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2016-ம் ஆண்டு கரீப் பருவம் முதல் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்து வந்த பாதை, எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் தற்போதைய 2020 கரீப் பருவத்தில், இத்திட்ட செயலாக்கம் வரை, குறிப்பாக, இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு அதன் செயலாக்கம் குறித்து, வேளாண் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தாமாக முன் வந்து சேருவதை கருத்தில் கொண்டு, இது பற்றிய தகவல்கள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், மாநில அரசுகள் ப்ரீமியம் தொகையை விடுவிப்பதன் மூலம், காப்பீட்டுக் கோரிக்கைகளை குறித்த காலத்தில் முடித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
2020 கரீப் பருவத்தில், இத்திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்கள், நிலுவையில் உள்ள மானியத் தொகைகளை விடுவிப்பது குறித்து, மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், ஊக்குவிப்புத் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக உள்ளதாகக் குறிப்பிட்ட வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள்
நலத்துறைச் செயலாளர், 2023-ஆம் ஆண்டில் கிடைக்கக்கூடிய விளைச்சலை தொழில்நுட்ப ரீதியாக மதிப்பிட நடவடிக்கை எடுத்து வருவதுடன், 2020-21 ராபி பருவத்திற்குப் பிறகு, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT