Published : 13 Jul 2020 03:45 PM
Last Updated : 13 Jul 2020 03:45 PM
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காகவும், வெப்பமாதலை தவிர்ப்பதற்காகவும், இந்திய ரயில்வேத் துறை, 2030 ஆம் ஆண்டில் பசுமை ரயில்வே-வாக மாறுவது என்ற இலக்கை நோக்கி முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரயில்வே பாதைகளை மின்மயமாக்கல், ஆற்றலை சேமிக்கும் வகையில் ரயில் எஞ்சின்களையும், பெட்டிகளையும் மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளில் உயிரி – கழிவறைகளைப் பொருத்துதல், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களுக்கு மாறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரிமில வாயுவை முற்றிலும் வெளியிடாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது.
40,000 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான அளவில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில் 18,605 கி.மீ. மின்மயமாக்கல் பணியானது 2014-20-ல் செய்து முடிக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் 7,000 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதைகளை மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து அகலப் பாதைகளையும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் மின்மயமாக்கும் பணியை நிறைவு செய்ய ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.
சூரிய ஔியிலிருந்து மின்சாரத்தைப் பெறும் பல்வேறு முன்முயற்சிகளை ரயில்வேத் துறை எடுத்து வருகிறது. கூரைக்கு மேலே பொருத்தக் கூடிய சூரிய தகடுகளைப் பயன்படுத்தி 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் தொடர்பான பணிகளையும் இது மேற்கொண்டுள்ளது. 900 ரயில் நிலையங்களில் கூரைக்கு மேலே பொருத்தக் கூடிய தகடுகள் வாயிலாக 100 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இது தவிர, ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் சூரிய மின்சக்திக்கான உபகரணங்களை பொருத்தவும் ரயில்வேத் துறை நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 20 ஜி வாட் திறனுள்ள சூரிய மின்சக்தி உபகரணங்களை நிறுவக் கூடிய வகையில் 51,000 ஹெக்டேர் நிலம் ரயில்வேத் துறை வசம் உள்ளது.
காற்றாலை மூலம் மின்சக்தியைத் தயாரிக்கும், 103 மெ.வா. திறனுள்ள ஆலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இதில் 21 மெ.வா. திறனுள்ள காற்றாலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, குஐராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 200 மெ.வா. திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்கள், ரயில் நிலையங்களில் 100 சதவீதம் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. மொத்தம் 69,000 ரயில் பெட்டிகளில் 2,44,000-க்கும் அதிகமான உயிரி கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT