Published : 07 Jul 2020 07:48 PM
Last Updated : 07 Jul 2020 07:48 PM

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்கள்: விரைவுபடுத்த மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் நிதின் கட்கரி ஆய்வு நடத்தினார்.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, எம்எஸ்எம்இ துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இணையதளம் மூலமாக இன்று நடைபெற்ற கட்டமைப்புக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்பு மற்றும் கனரகத் தொழில்கள் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி. கே. சிங் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, மின்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ரயில்வே வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கழகம், ஆகிய அமைச்சகங்கள், அமைப்புகள் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது நிலுவையில் உள்ள பல கட்டமைப்புத் திட்டங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. 187 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக வனத்துறையின் ஒப்புதல் பெறுவது குறித்து இக்கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பல திட்டங்களில் இதுவரை வனத்துறையினரின் இரண்டாம் கட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பங்களே இன்னும் வந்து சேரவில்லை என்பதும் குறித்துக் கொள்ளப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள லெவல் கிராசிங்குகள் விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ளதால் அவற்றை அகற்றுவது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கான திட்டங்கள் 167 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது என்றாலும், அது தொடர்பான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது எடுத்துக் கூறப்பட்டது. இவை தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன. இது தொடர்பாக செயல்பாட்டை மேம்படுத்துவது அவசியம். சேதுபாரதம் திட்டத்தின் கீழான திட்டப்பணிகளை மாதந்தோறும் பரிசீலனை செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. ரயில்வே துறையில் 30 சாலைத் திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதற்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காண்பதாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்தார்.

நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு பல்வேறு அமைச்சகங்களின் உயர்நிலை அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்புகளின் மூலம் தீர்வு காணமுடியும் என்றும், இதனால் நிலுவையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படுகிறது என்றும் திரு.நிதின் கட்காரி தெரிவித்தார். எழுத்துப்பூர்வமான தகவல் தொடர்பில் நேரத்தையும், சக்தியையும் விரயமாக்குவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் எல்லா பிரச்சினைகளையும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொண்டுவிட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார். ரயில்வே வாரியத் தலைவர், வனங்கள் துறை தலைமை இயக்குநர், சாலைத்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் கொண்ட கூட்டுக்கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கூட்டம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளையும், ஆணைகளையும் கடைப்பிடித்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள வன அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. ஜவடேகர்

கேட்டுக் கொள்ளப்பட்டார். ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் நடத்தப்படுவதை போல, வனங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறப்பு உயர் அதிகாரம் கொண்ட குழுக்களின் கூட்டம் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.. கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தடைகளைக் களைய இதுபோன்ற குழுக் கூட்டங்கள் உதவும் என்றும் இதனால் நேரமும் பணமும் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தை நடத்தியது கட்காரியின் மிக நல்ல முயற்சி என்று பியூஸ் கோயல் பாராட்டு தெரிவித்தார். இதுபோல் அனைத்து பங்குதாரர்களும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து அவர்கள் முன் உள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் இந்தப் பரிசோதனை முறையிலிருந்து தாமும் நிறைய கற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.

குடிமக்களின் தேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கட்டமைப்பு குழுவிற்கு வழிகாட்டுமாறு அவர் நிதின் கட்காரியைக் கேட்டுக்கொண்டார் ரயில்வே திட்டங்களும் நெடுஞ்சாலைத் திட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், சில சமயங்களில் அவை வெவ்வேறு விதமாகப் பயணிக்கின்றன என்று கூறினார். இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x