Published : 24 Sep 2015 10:23 AM
Last Updated : 24 Sep 2015 10:23 AM
ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகையளவு சோதனை கருவி யில் மோசடி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவறை அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய ஒரு கோடி கார்களுக்கும் மேலாக இத்த கைய மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஜெர்மனியின் ஃபோக்ஸ் வேகன் கார்களுக்கு ஏற்பட்ட சோத னைக்கு மூல காரணமே 45 வயதுடைய டேனியல் கார்டெர் என்ற அமெரிக்க பொறியாளர்தான்.
ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகை யளவை அளவிடும் சாஃப்ட்வேர் கருவியில் செய்யப்பட்ட மோசடியைக் கண்டுபிடித்தவர் இவரே. வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அடங்கிய குழுவினருடன் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் டாலர் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்க வாகன சோத னைகளில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் சொகுசு கார்கள் என்றாலே ஜெர்மனிதான் என்று இதுவரை ஏற்படுத்தி யிருந்த இமேஜ் சிதைந்து போயுள்ளது. அத்துடன் நிறுவனத் தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி யுள்ளது. அனைத்துக்கும் மேலாக நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனம் பெருத்த நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆய் வின்போது அமெரிக்க வாகன புகை அளவு கட்டுப்பாட்டு அமைப்பு விதித்துள்ள புகையளவைக் காட்டிலும் அதிக அளவில் ஃபோக்ஸ்வேகன் வெளியிடுவது தெரியவந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்தபோது உண்மை வெளியானதாக கார்டெர் கூறினார். இவருடன் இணைந்து 5 மாணவர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர்.
இத்தகைய ஆய்வை மேற்கொள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான சுத்தமான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் (ஐசிசிடி) நிதி உதவி செய் துள்ளது. 2012-ம் ஆண்டு இந்த ஆய்வு தொடங்கியது. 2013-ம் ஆண்டு மே மாதத்தில் தங்கள் ஆய்வை இக்குழுவினர் முடித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை மற்றும் கலிபோர்னியா காற்று வள வாரியம் (சிஏஆர்பி) ஆகியவற்றுடன் இணைந்து தங்கள் ஆய்வு முடிவை ஆதாரத்துடன் நிரூபித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
கார்டெரின் குழுவில் ஒரு ஆராய்ச்சி பேராசிரியர், இரண்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து மேற்குக்கரை நகரான சியாட்டில் வரை சாலைகளில் சோதனை நடத்தினர். தொடக்கத்தில் தங்கள் ஆய்வில் தவறு இருக்கலாமோ என சந்தேகித்தனர்.
``நாம் முதலில் சரியான ஆய்வை செய்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் எங்களை நாங்களே நொந்துகொண்டோம்,’’ என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கார்டெர் குறிப்பிட்டுள்ளார். எங்களது ஆராய்ச்சியின்போது பல்வேறு முரண் பட்ட தகவல்கள் கிடைத்தன. ஒரு காரில் 15 முதல் 35 தடவை புகை அளவு சோதனை செய்யப்பட்டது. அதே போல மற்றொரு காரில் 10 முதல் 20 தடவை சோதிக்கப்பட்டது.
ஆய்வில் மாறுபட்ட விவரங்கள் அதாவது முரண்பட்ட புள்ளி விவரங்கள் பதிவானது. இறுதியில் சிறிய மாற்றங்களுடன் ஆய்வைத் தொடர்ந் தோம். வர்ஜீனியா பல்கலையில் மாற்று எரிபொருளுக்கான மையத்தின் இடைக்கால இயக்குநர் என்ஜின் மற்றும் அதன் புகையளவை 320 கி.மீ. தூரம் ஓட்டி சோதித்தார். மொராங்டவுன் பகுதி யில் அதாவது வாஷிங்டனின் மேற்கு பகுதியில் இத்தகைய சோதனை மேற் கொள்ளப்பட்டதாக கார்டெர் தெரிவித்தார்.
எரிபொருள் இன்ஜெக் ஷன் வழங்கு உத்தியில் சிறிய மாறுதல் செய்யப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனம் வெளியிடும் புகை அளவு குறைவாகக் காட்டியது தெரியவந்தது என்று கார்டெர் கூறினார். தங்கள் குழுவின் ஆய்வறிக்கையை ஒன்றரை ஆண்டுக்கு முன்பே பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்ட போதிலும் இப்போதுதான் இது தொடர்பான நடவடிக்கைகள் வெளி வருவது வியப்பளிப்பதாக கார்டெர் கூறினார்.
பொதுமக்கள் மேடையில் வெளி யிட்டதோடு ஃபோக்ஸ்வேகனுக்கு தங்கள் குழுவினர் கேள்வியெழுப்பி யிருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
கார்டெர் குழுவினர் வெளியிட்ட ஐசிசிடி ஆய்வறிக்கையை ஐரோப்பிய கமிஷ னின் இணை ஆய்வு மையம் மேலும் பரிசீலித்தது. அப்போது உண்மையாக வாகனம் வெளியிடும் புகை அளவுக்கும் நிறுவனம் குறிப்பிடும் புகை அளவுக்கும் உள்ள வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது.
வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் ஃபோக்ஸ்வேகனின் பசாட், ஜெட்டா, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஃபோக்ஸ்வேகன் கார்களைப் போலன்றி பிஎம்டபிள்யூ கார்கள் சிறப்பாக செயல் பட்டதோடு குறிப்பிட்ட அளவைக் காட்டி லும் குறைந்த அளவிலேயே புகையை வெளியிட்டதாக கார்டெர் குறிப்பிட்டார்.
புகை அளவு குறித்த சோதனையில் அரிய தகவல்களை இதற்கு முன்பும் வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகம் மேற்கொண்டு வெளியிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சாலைகளில் ஓடும் வாகனங்களின் புகை அளவு குறித்து இந்த பல்கலைக் கழகம் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக் கழகத்தில் உள்ள நடமாடும் வாகன சோதனை மையத்தை உருவாக்கிய 15 பேரடங்கிய குழுவில் கார்டெரும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க நீதித் துறையுடன் இணைந்து பல்வேறு கனரக டீசல் வாகனங்களைத் தயாரிக்கும் காட்டர்பில்லர் இன்கார்ப்பரேஷன், கமின்ஸ் இன்ஜின் கம்பெனி உள்ளிட்ட நிறுவன தயாரிப்புகளை சோதித்துள்ளார்.
தங்கள் தயாரிப்புகள் புகை அளவு வெளியிடுவதில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகம் வெளியிடும்போது உற்பத்தியாளர்கள் அபராதம் செலுத்தவேண்டும். அந்த வகையில் 8.34 கோடி டாலர் வரை டீசல் கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு செலுத்தியுள்ளன. ஃபோக்ஸ்வேகன் நிறுவன விவகாரம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளி யானது. இது தொடர்பாக கருத்து தெரி வித்துள்ள கார்டெர், இந்த விஷயத்தில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. தவறான அளவீடுகளால் ஃபோக்ஸ்வேகன் வெளி யிடும் புகை அளவு உண்மையான அளவைக் காட்டிலும் குறைவாக இருந்த தைக் கண்டுபிடித்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வை செய்ததற்காக எவ்வித ஊக்க தொகையோ அல்லது இது நிராகரிக்கப்பட்டிருந்தால் அதன் பாதிப்போ எதுவும் தங்களுக்கு கிடையாது. சுற்றுச்சூழலை பாதிக்கும் விஷயங்களை வெளிக் கொண்டு வந்தோம் என்று அவர் குறிப்பிட்டார். இதில் எவ்விதமான நிர்பந்தமும் தங்கள் குழுவினருக்கு இருந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT