Published : 12 Jun 2020 09:29 AM
Last Updated : 12 Jun 2020 09:29 AM
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதன்படி பெட்ரோல் லி்ட்டருக்கு 57 பைசாவும், டீசல் லிட்டருக்கு 59 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74 லிருந்து ரூ.74.57 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.72.22 லிருந்து ரூ.72.81 பைசாவாகவும் அதிகரித்துள்ளது
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.78.54 பைசாவாக அதிகரித்துள்ளது, டீசல் லிட்டர் ரூ.71.21 பைசாவாக உயர்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை பெட்ரோலில் கடந்த 6 நாட்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.31 பைசாவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.42 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லாக்டவுன் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை.
ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது உயர்ந்ததும், தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
லாக்டவுன் காலத்தில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்த போது, நுகர்வோர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களையும் மே 6-ம் தேதி மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி எடுத்துக்கொண்டது.அந்த வகையில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும், டீசலில் ரூ.13 உயர்த்தியும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கரோன வைரஸ் பாதிப்பு குறைந்து பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது.
இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அடுத்துவரும் 10 நாட்களும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் இரு எரிபொருளிலும் லிட்டர் ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளது என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT