Published : 01 Jun 2020 02:37 PM
Last Updated : 01 Jun 2020 02:37 PM
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையடுத்து தொடர்ந்து 3 மாதங்களாகக் குறைந்துவந்த மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை இந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை உயர்ந்துள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. இந்த 12 சிலிண்டருக்கும் அதிகமாகத் தேவைப்படுவோர் மானியமில்லாமல் சந்தை விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடந்த 3 மாதங்களாக மானியமில்லாத சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் 53 ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் 61.50 ரூபாயும், மே மாதம் 162.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. மொத்தமாக கடந்த 3 மாதங்களில் மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.277 குறைந்தது.
இந்தச் சூழலில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, சிலிண்டர் விலை ரூ.11.50 முதல் ரூ.37 வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “டெல்லியில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11.50 அதிகிரத்து ரூ.593 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.31.50 அதிகரித்து ரூ.616 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மும்பையில் ரூ.11.50 உயர்த்தப்பட்டு, ரூ.590 ஆகவும், சென்னையில் ரூ.37 அதிகரித்து ரூ.606.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பெண்கள் இந்த மாதம் 30-ம் தேதி வரை இலவசமாக சிலிண்டர் பெறலாம். இதில் பிரச்சினை ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT