Published : 02 May 2014 10:37 AM
Last Updated : 02 May 2014 10:37 AM
நடப்பு நிதி ஆண்டில் (2014-15) ஆறு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமே என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், முதலீடுகளை ஈர்ப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி உயரும். அப்போது 6 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவது சாத்தியமே. இருப்பினும் சர்வதேச அளவில் பொருளாதார நிலை இன்னமும் ஏற்றம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது:
மத்தியில் புதிதாக பொறுப் பேற்கும் அரசு உறுதியான கொள்கைகளை எடுப்பதோடு இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 10 அம்சக் கோரிக்கைகளை அமல்படுத் தினால் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் அதிக அளவிலான வளர்ச்சியை எட்ட முடியும்.
2009-2010-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீத அளவுக்கு உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2011-12-ம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாகவும், 2012-13-ம் நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்தது. இருப்பினும் கடந்த நிதி ஆண்டில் வளர்ச்சி சற்று அதிகரித்து 4.9 சதவீதமாக இருந்தது.
2000-2001, 2002-2003 ஆகிய நிதி ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தாராளமயமாக்கலுக்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார். அந்த அளவுக்கு சின்ஹாவின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஒருமுறை அதிகபட்ச வளர்ச்சியின் பலனை மக்கள் அனுபவித்துவிட்டனர். எனவே மந்தமான வளர்ச்சியை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்ட அவர், சிறந்த பொருளாதாரம்தான் சிறந்த அரசியல் என்று குறிப்பிட்டார்.
சிறந்த பொருளாதாரம் சிறந்த அரசியல் நிர்வாகம் அல்ல என்ற கருத்து உருவானால் அது மிகவும் வருத்தத்திற்குரியது. எதிர்க்கட்சியினர் அச்சம் காரணமாகவே மோசமான பொருளாதாரம்தான் சிறந்த அரசியல் என்று கருதுவதாக அவர் கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு குறித்த அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு தரப்பு மக்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகின்றனர். அதேசமயம் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. இங்கு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகவே உள்ளது. நாட்டின் பொருளாதார வளத்தை கருத்தில் கொண்டு வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசின் சில முக்கியமான திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT