Published : 25 Aug 2015 10:08 AM
Last Updated : 25 Aug 2015 10:08 AM

தொழில் கலாச்சாரம்: தோழர்களுக்கு தோள் கொடுக்கலாம்!

உங்களுக்கு ஒரு க்விஸ்.

உலகத்திலேயே பெரிய நாடு எது?

ரஷியா.

ரஷியாவின் பரப்பளவு எத்தனை சதுர கிலோமீட்டர்?

1,70,98,242.

இந்தியாவை விட ரஷியா எத்தனை மடங்கு பெரியது?

சுமார் ஆறு மடங்கு.

கம்யூனிசத் தாயகமாக நாம் பெரிதும் மதிக்கும் ரஷியாவுக்கு நமது அயல்நாட்டு வணிகத்திலும் முக்கிய இடம் உண்டு. ரஷியாவிலிருந்து நம் இறக்குமதி ரூ.25,924 கோடி. நம் இறக்குமதியில் முக்கியமானவை விமானங்கள், பெட்ரோலியம், செம்பு, நிக்கல், ரப்பர். ரஷியாவுக்கு நம் ஏற்றுமதி ரூ.12,823 கோடி. முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள், காபி, டீ, மீன், காய்கறிகள், உணவுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மருந்துகள், இயந்திரங்கள், இரும்பு, உருக்கு.

பூகோள அமைப்பு

உலகத்திலேயே அதிகமான அண்டை நாடுகள் கொண்ட நாடு ரஷியாதான். இந்தப் பட்டியலில் 15 நாடுகள். பூமியால் பிரிவுபடும் தேசங்கள் 13 நார்வே, ஃபின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, பெலாரஸ், உக்ரேன், ஜார்ஜியா, கஜகஸ்தான், சீனா, மங்கோலியா, வட கொரியா. கடலால் பிரிக்கப்படும் நாடுகள் ஜப்பானும், அமெரிக்காவும்.

ரஷியாவில் மலைகள், காடுகள் சமவெளிகள், கடற்கரைகள் ஆகிய நான்கு வகை நிலப்பகுதிகளும் இருக்கின்றன. பெரும்பாலான இடங்கள் சமவெளிகள். இத்தகைய விதவிதமான நில அமைப்புக்களால், பகுதிக்குப் பகுதி பருவநிலை வித்தியாசப்படுகிறது.

ஆயிரத்துக்கும் அதிகமான நதிகளும், சிற்றாறுகளும் நாட்டைச் செழிப்பாக்குகின்றன. உலகின் பத்து சதவீத விவசாய நிலம் ரஷியாவில்தான் உள்ளது. பெட்ரோல். நிலக்கரி, உலோகங்கள், அரிய தனிமங்கள், மரம் ஆகியவை முக்கிய இயற்கைச் செல்வங்கள்.

மக்கள் தொகை

14 கோடி. கிறிஸ்தவர்கள் சுமார் 20 சதவீதம்: முஸ்லீம்கள் சுமார் 15 சதவீதம்; மற்றவர்கள் நாஸ்திகர்கள். 98 சதவீத மக்கள் ரஷிய மொழி பேசுகிறார்கள். ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகச் சிறுபான்மையினரே. ஆண்கள், பெண்கள் இருபாலரும் அபாரக் கல்வியறிவு பெற்றவர்கள். எழுத்தறிவு (Literacy) 99.6 சதவீதம் பேர் பெற்றுள்ளனர்.

சுருக்க வரலாறு

ரஷியாவின் சரித்திரம் எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பம். பத்தாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பரவியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மங்கோலியர் ஆக்கிரமித்தனர். பதினேழாம் நூற்றாண்டில் மாமன்னர் பீட்டர் ரஷியாவை வல்லரசான சாம்ராஜியமாக்கினர். அடுத்து வந்த ஜார் மன்னர்கள் கொடுங்கோல ராயினர். 1917. ஆஹாவென்று எழுந்தது யுகப்புரட்சி. கொடுங்ேகாலன் அலறி வீழ்ந்தான். லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி. சோவியத் யூனியன் என்னும் பெயரோடு, ரஷியா ஒரு கட்சி ஆட்சியில், பொதுவுடைமைப் பாதையில் நடைபோட்டது.

ஏராளமான அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள் வந்தன. மக்கள் ஜனநாயகத்தை விரும்பினார்கள், உரிமைகள் கோரினார்கள். 1990 இல், நாட்டுத் தலைவர் மைக்கேல் கார்பச்சேவ் அரசின் கிடுக்கிப் பிடியைத் தளர்த்தத் தொடங்கினார்.

1991 இல் சோவியத் யூனியன் 15 நாடுகளாகப் பிளவுபட்டது. ரஷியா தனி நாடானது. இந்த நாடுகள், பாதுகாப்பு, வாணிபம் ஆகியவற்றுக்காக, Commonwealth of Independent States என்னும் கூட்டமைப்பு அமைத்திருக்கிறார்கள். இந்த நாடுகளைச் சுருக்கமாக, CIS என்று அழைக்கிறோம்.

ஆட்சி முறை

நாட்டின் தலைநகர் மாஸ்கோ. முக்கிய அரசு அலுவலகங்கள் இங்கேதான் இருக்கின்றன. மக்களாட்சி நடக்கிறது. ஃபெடரல் அசெம்பிளி, ஃபெடரேஷன் கவுன்சில் என்று இரண்டு சபைகள். நாட்டுத் தலைவர் ஜனாதிபதி, ஆட்சித் தலைவர் பிரதமர்.

நாணயம்

ரூபிள் (Rouble) சுமார் ஒரு ரூபாய்க்குச் சமம்.

பொருளாதாரம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 4 சதவீதம்; தொழில்கள் 36 சதவீதம்; சேவைகள் 60 சதவீதம். சுரங்கம் தோண்டித் தாதுப் பொருட்கள் எடுத்தல், இயந்திரங்கள் தயாரிப்பு ஆகியவை உற்பத்தி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் கணிசமான பங்களிக்கின்றன. ராணுவத் தளவாடங்கள், விண்கலங்கள், விமானங்கள், கப்பல்கள், பஸ்கள், கார்கள், டிராக்டர்கள், ரோடு போடும் மெஷின்கள், மின்சாரத் தயாரிப்புக் கருவிகள், மருத்துவக் கருவிகள்.......ரஷியா தயாரிக்காத இயந்திரமோ, கருவியோ கிடையாது என்றே சொல்லலாம்.

பயணம்

பகுதிக்குப் பகுதி பருவநிலை மாறுபடுவதால், போகும் ஊருக்கு ஏற்ப, உங்கள் பயணக் காலத்தைத் தீர்மானியுங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

முக்கியமானவர்களைச் சந்திப்பது சிரமமான காரியம். நமக்குக் காரியம் நடக்கவேண்டுமானால், அசாத்தியப் பொறுமையோடு முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். மீட்டிங் களுக்கு அரைமணி நேரம்வரை தாமதமாக வருவது சர்வ சாதாரணம், ஒரு சிலர் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவார்கள்.

ஆகவே, நீங்கள் சொன்ன நேரத்துக்குப் போய்விடுவது நல்லது. விலாவாரியாகப் பேசுவார்கள். ஆகவே, ஒரு மணி நேர மீட்டிங் பல மணி நேரங்கள் நீடிக்கும். டெக்னிக்கல் சமாச்சாரங்களைத் துருவித் துருவி விசாரிப்பார்கள்.

பரஸ்பர நம்பிக்கை ஏற்பட, உடனடிப் பதில்கனை எதிர்பார்ப்பார்கள். மழுப் பாதீர்கள், பொய் சொல்லாதீர்கள். முழுத் தயார் நிலையில் நீங்கள் வருவதை எதிர்பார்ப்பார்கள். அவர் களும் அப்படியே வருவார்கள்.

பேசும்போது, அனைத்துக்கும் “நோ”, “நோ” என்றுதான் ஆரம்பிப் பார்கள். மெள்ள மெள்ள இறங்கி வருவார்கள். பேரம் பேசுவார்கள். எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்பதில் நீங்களும், உங்கள் குழுவினரும் தெளிவாக, உறுதி யாக இருங்கள். மீட்டிங்கில் அவர்கள் தரும் வாக்குறுதிகள் இறுதியானவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒப்பந் தத்தில் கையெழுத்திடும்வரை, அடிப்படை மாற்றங்கள்கூட வரலாம். கையெழுத்திடும் முன், ரஷியச் சட்டங்களும், இந்தியச் சட்டங் களும் அறிந்த வழக்கறிஞரிடம் ஒப்பந்த நகலைக் காட்டி, அவர் ஒப்புதல் வாங்கிவிடுங்கள். ஒப்பந்த மீறல்கள் நடந்தால், வழக்குகள் ரஷிய நீதிமன்றத்தில் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். சம்மதிக்காதீர்கள். பெரும்பாலான வெளிநாட்டு பிசினஸ்மேன்கள் ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களைத் தேர்ந்தெடுக் கிறார்கள். இவை நடுநிலையானவை, நேர்மையானவை என்பது பலர் அனுபவம்.

நீங்கள் இறக்குமதி செய்தாலோ, அல்லது அவர்களிடம் தொழில் நுட்பம் வாங்கினாலோ, கொடுக்கவேண்டிய பணத்தில் ஒரு பகுதியை அவர்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடச் சொன்னால், அதிர்ச்சி அடையாதீர்கள். நாட்டின் கடுமையான வருமான வரியிலிருந்து தப்பிக்க பல ரஷியத் தொழிலதிபர்கள் கையாளும் குறுக்கு வழி இது. பிசினஸ்மேன்கள் கோட், சூட் அல்லது குறைந்தபட்சம் டை அணியவேண்டும். ஹோட்டலில் ஷார்ட்ஸ் போடலாம். ஆனால், வெள்ளை நிற ஷார்ட்ஸ் வேண்டவே வேண்டாம். அதை அருவருப்போடு பார்ப்பார்கள்.

உபசரிப்புகள்

நீங்கள் அவர்களை மீட்டிங் குகளுக்கு அழைத்தால், டீ, காபி, ஜூஸ், பிஸ்கெட்கள் தாராளமாக வைத்திருங்கள். பேசிக்கொண்டே கொறிப்பது அவர்கள் பழக்கம். பானங் களைப் பிளாஸ்டிக் கப்களில் தருவது கூடவே கூடாது. பீங்கான் கோப்பைகள் உத்தமம்: கண்ணாடிக் கோப்பைகள் மத்திமம்.

இரவுச் சாப்பாடு 7 மணிக்குத் தொடங்கும். மது கட்டாயம் உண்டு. ஸ்காட்ச் விஸ்கி, வோட்கா, ஒயின் ஆகியவை பெரும்பாலானோர் விரும்பும் மது வகைகள். நிறையவே குடிப்பார்கள். பொதுவாகத் தன்னிலை இழப்பதில்லை. தங்கள் வீடுகளுக்கு உங்களை அழைப்பது அபூர்வம். அது நடந்து விட்டால், அவர் நம்பிக்கையைப் பெற்றுவிட்டீர்கள் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள்.

விரும்பும் பரிசுகள்

பூங்கொத்துக்கள், சிகரெட், ஸ்காட்ச் விஸ்கி, காமிரா, பேனா போன்றவை ரஷியர்கள் வரவேற்கும் பரிசுகள்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x