Published : 05 May 2020 08:08 PM
Last Updated : 05 May 2020 08:08 PM
உலக அளவிலான கோவிட்-19 நோய் காரணமாக உருவாகியுள்ள, புதிய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இறக்குமதிக்கான மாற்று பற்றிய கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்தார்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கரோனா நோயால் பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து, இந்தியாவில் பெண் தொழில் முனைவோர் சங்கப் பிரதிநிதிகள் (ALEAP) மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த நடிப்புத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குவோருடனும் காணொலி மாநாட்டின் மூலம் கட்கரி கலந்துரையாடினார். பிரபல பாடகர்கள் சோனு நிகம், தின் மிகேஷ், தலாத் அசீஸ் ஆகியோர் உட்பட பலர் இந்த கூட்டத்ல் பங்கேற்றனர்.
அவர்களிடம் கட்காரி, பொழுதுபோக்குத் துறையை மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில், அவை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக, தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், பொழுதுபோக்குத் துறை உட்பட பல்வேறு துறைகளிலும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். இந்தத் துறைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் அரசின் ஆதரவையும் அவர்கள் கோரினர். சில ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
பிரதிநிதிகளின் வினாக்களுக்குப் பதிலளித்த கட்கரி, அவர்களுக்கு, அரசு, அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தார். அவர்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்துறை நேர்மறை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்; கோவிட்-19 நெருக்கடி கால நிலை கடந்து போன பின்னர், உருவாகக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
பல புதுமைகளைப் புகுத்துவது, செலவினங்களைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் தரத்தை மேம்படுத்தி தங்கள் அறிவை செல்வமாக மாற்றவேண்டும் என்று அனைத்து பங்குதாரர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். ஆரஞ்சு மண்டலத்திலுள்ள நாக்பூரை அடிப்படையாகக் கொண்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனமொன்று தனிநபர் பாதுகாப்புக் கவசங்களைத் தொடக்கத்திலிருந்தே தயாரித்து வருவதை இதற்கு ஒரு உதாரணமாக அவர் குறிப்பிட்டார். சந்தை விலை 1200 ரூபாய் கொண்ட இந்த தனிநபர் பாதுகாப்புக் கவசங்களை, இந்த நிறுவனம் 550 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையிலான விலைக்கு வழங்குகிறது. நாடு தனி நபர் பாதுகாப்புக் கவசங்களுக்கு, இறக்குமதியையே வெகுவாகச் சார்ந்திருந்தது. தனிநபர் பாதுகாப்புக் கவசங்களைப் பெரும் எண்ணிக்கையில் வழங்கும் நிலையில், இந்த மண்டலம் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT