Last Updated : 01 May, 2020 11:44 AM

 

Published : 01 May 2020 11:44 AM
Last Updated : 01 May 2020 11:44 AM

லாக்டவுன் விளைவு: முதல்முறையாக ஏப்ரல் மாதத்தில் ஒரு கார்கூட விற்காத மாருதி சுஸூகி நிறுவனம் 

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏப்ரல் மாதம் முழுமையாக முடங்கியநிலையில் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுஸூகி ஏப்ரல் மாதத்தில்உ ள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்ததால், ஏப்ரல் மாத நிலவரப்படி மாருதி சுஸூகியின் விற்பனை பூஜ்ஜியமாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டு இதுவரை ஒரு மாதத்தில் கூட ஒரு கார் விற்பனையாகாமல் இருந்து இல்லை. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு இப்படியான சூழலைச் சந்தித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.

அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு.அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் முற்றிலும் பெருதொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் அதன் பாதிப்புகள் மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன

மாருதி சுஸூகி நிறுவனம் மட்டுமல்ல அனைத்து கார் நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் தங்களின் உற்பத்தியை நிறுத்தி, விற்பனை மையங்களைமூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் அனைத்து கார் நிறுவனங்களின் ஏப்ரல் மாத விற்பனையும் பூஜ்ஜியம் என்ற நிலையில்தான் இருக்கும்.

இருப்பினும் குஜராத்தில் உள்ள மாருதி சூஸுகி நிறுவனம் குறைந்த அளவு பணியாளர்களை வைத்து இயக்க அரசு அனுமதியளித்தது. இதனால் கடந்த மாதத்தில் 634 கார்களை தாயரித்து முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த மாதம் 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டி ெநறிமுறைகளை அறிவித்தபின், ஹரியாணாவில் உள்ள மனேசர் உற்பத்தி கூடத்திலிருந்து உற்பத்தியைத் தொடங்கியுள்ளது மாருதி சுஸூகி நிறுவனம். பாதியளவு தொழிலாளர்களுடன், ஒரு ஷிப்ட் மட்டும் தொழிற்சாலையை மாருதி நிறுவனம் இயக்கி வருகிறது. இதன் கடந்த 10 நாட்களில் அங்கு 50 கார்கள் மட்டுமே உற்பத்தியாகியுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 22-ம் தேதி ஊரடங்கு மக்கள் ஊரடங்கு கொண்டுவரப்பட்டதே மாருதி நிறுவனம் தனது உற்பத்தி, விற்பனையை நிறுத்தியது. கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் விற்பனை 47 சதவீதம் சரிந்தது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,58,076 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 83,792 கார்கள் மட்டுமே விற்பனையானது. ஏப்ரல் மாதத்தில் அந்த விற்பனையும்கூட நடக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x