Published : 20 Apr 2020 09:13 PM
Last Updated : 20 Apr 2020 09:13 PM
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கில் மூடப்பட்டிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மே 3-ம் தேதிக்குப் பிறகு செயல்பட உள்ளன. ஏற்கெனவே பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த இத்தொழில் நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கொள்வதன் மூலம் எதிர்பாராக நெருக்குதல்களை சமாளிக்கலாம் என்று ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் க. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
''மனித குலம் தற்போது எந்தத் தலைமுறையும் கண்டிராத உலக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதிலிருந்து உடனடியாகவும், உறுதியுடனும் மீள வேண்டிய கட்டாயம் அனைவருக்குமே உருவாகியுள்ளது. குறிப்பாக தொழில்துறையினர் இத்தகைய நெருக்குதலைத் தவிர்க்க குறுகிய மற்றும் நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்குவது அவசியம்.
வாடிக்கையாளரிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை தாமதமாகலாம். பணியாளர்கள் தங்கள் குடும்பச் செலவுக்காக அட்வான்ஸ் கேட்கலாம். சரக்கு சப்ளையர்கள் தங்கள் நிறுவனங்களை இயக்க சில கோரிக்கைகளை முன் வைக்கலாம். வங்கிக் கடன் நிலுவை, மின் கட்டணம், இஎஸ்ஐ, இபிஎப், ஜிஎஸ்டி உள்ளிட்ட தொகைகளைச் செலுத்த வேண்டியிருக்கும்.
நிலையில்லாத தொழில் சூழல் மற்றும் முழுமையான தொழில் இயக்கமின்மையால் குறைந்த வருவாயை மட்டுமே எதிர்நோக்க வேண்டியிருக்கும். இதனால் 2020-21 ஆம் ஆண்டுக்கான லாபம், நஷ்டம் திட்ட அறிக்கையை தயார் செய்து அதில் மறைமுக செலவினங்களைத் தவிர்க்க வேண்டும்.
வங்கிகளை அணுகி கூடுதலாக தொழிலுக்கான மூலதன நிதியைப் பெருக்கிக் கொண்டு நிதி பிரச்சினையைக் களைய வேண்டும்.
சில பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரியச் செய்ய முடியும். அத்தகையோருக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை (லேப்டாப்), இணையதள வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தீவிரமானது என்றாலும் அதிலிருந்து மீண்டு வர நடவடிக்கை எடுத்தால் 2021-ம் ஆண்டு மிகப் பெருமளவிலான தொழில் வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து திட்டமிடுதல் அவசியமாகும்.
தாமதிக்கப்பட்ட நிலுவைத் தொகையில் அதிக கவனம் செலுத்தி வசூலிக்கவேண்டும். வர வேண்டிய தொகைகளை மாற்று வழிமுறை அதாவது சில டிஸ்கவுன்ட் அளித்து வசூலிக்க வேண்டும். மூன்று மாதத்துக்குத் தேவையான வரவு, செலவுகளை வரிசைப்படுத்தி திட்டமிட வேண்டும்.
தேவையறிந்து சிறிய அளவில் சரக்குகளை கொள்முதல் செய்து இருப்பைக் குறைக்க வேண்டும்.
வெளியேற்ற முடியாத அசையா சரக்குகளை தளர்வு செய்து வெளியேற்ற வேண்டும். உரிய நேரத்தில் பணம் தராத வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பற்றாக்குறை உடைய பொருட்களும், பணிகளுக்கும் தேவையான நபர்களை வெளியிலிருந்து பெற வழி செய்யவேண்டும்.
ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை கரோனா வைரஸ் தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. இனிவரும் காலங்களில் வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மட்டுமல்லாமல் சுகாதாரமான சூழலை நமது பணியிடங்களில் நிலவச் செய்ய வேண்டும். தற்போது வரை கரோனா வைரஸின் பரவலை மட்டுமே நாம் தடுத்து வருகிறோம். அதனை இன்னும் முற்றிலுமாக ஒழிக்கவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் தங்கள் ஊரிலிருந்து வந்திருப்பர். இதனால் முதல் நாளிலிருந்தே அவர்களது உடல் வெப்ப நிலை, சளி, இருமல் இருக்கிறதா என்று தொடர்ந்து 15 நாள்களுக்கு கண்காணிக்க வேண்டும். பணியாளர்கள் தினமும் கைகளைக் கழுவுதல், முகக் கவசம், கையுறை அணிதல் மற்றும் பிற தனி மனித பாதுகாப்பு கருவிகளை (பிபிஇ) பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பணியாளரும் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். எப்போதும் முகக்கவசம், கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். வேலை தொடங்குவதற்கு முன்பு பணியாளர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டங்கள் நடத்த வேண்டும்.
ஊரடங்கு நாள்களில் பணியாளர்கள் எவரேனும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனரா? அல்லது அவர்கள் வசிப்பிடத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு ஏதேனும் நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா என்று கண்டறிய வேண்டும்.
அனைத்துப் பணியாளர்களிடமும் செயல் திட்ட அறிக்கையை தயாரிக்கச் சொல்லவும். மனித வள அலுவலரைக் கொண்டு அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்கள் பணிக்குத் திரும்ப தயாராக உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொள்முதல் செய்வோர் அனைத்து சப்ளையர்கள் மற்றும் இணை சப்ளையர்களைத் தொடர்பு கொண்டு சரக்குகளை அனுப்பத் தயாராக உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். சப்ளையர்களிடம் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று சப்ளையர்கள் விவரத்தை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தொழில் தொடர்பான நீட்டிப்பு நிவாரணங்களை சரிவர புரிந்து அதைப் பயன்படுத்தி சவால்களை எதிர்கொண்டால் வளமான தொழில்காலம் அமையும்''.
இவ்வாறு எஸ்ஐஎம்ஏ செயலாளர் க.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT