Published : 19 Apr 2020 07:34 AM
Last Updated : 19 Apr 2020 07:34 AM

இந்தியாவில் சீன முதலீட்டை தடுக்க அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு

புதுடெல்லி

இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன. இதைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கி வருகிறது. சமீபத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை சீனாவின் மத்திய வங்கி வாங்கியது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டின.

இந்நிலையில் அந்நிய முதலீட்டில் இதுவரை இருந்து வந்த 100 சதவீத அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்து மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் சந்தர்ப்பவாத கையகப்படுத்தும் நிலையைகட்டுப்படுத்த முடியும் என்றுடிபிஐஐடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகிறது. ஏற்கெனவே, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

தற்போது இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி பெற வேண்டும்.

இதற்கு முன்பு வரை குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, வெளிநாட்டில் வாழும் ஒருவர் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்கு எப்டிஐ விதிமுறைகள் அனுமதி அளித்து வந்தன.

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் மிக முக்கிய துறைகளான பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (எப்பிஐ) மேற்கொள்ளும் முதலீடுகளை பங்குச் சந்தைபரிவர்த்தனை வாரியம் (செபி) தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்தியாவில் 16 சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு பதிவு செய்துள்ளன. இவை 110 கோடி டாலர் வரை முன்னணி பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இனிமேல் அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை செபி இனிமேல் தீவிரமாகக் கண்காணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x