Published : 30 Mar 2020 06:00 PM
Last Updated : 30 Mar 2020 06:00 PM
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் பிரீபெய்டு சிம்கார்டு ரிசார்ஜ் செய்யாமலேயே ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்படும் எனவும், 10 ரூபாய்க்கு பேசுவதற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தநிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எலும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
‘‘கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிஎஸ்என்எல் பிரீபெய்டு சிம்கார்டு ரிசார்ஜ் செய்யாமலேயே ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்படும். 10 ரூபாய்க்கு பேசுவதற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும். இதன் மூலம் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலத்தில் மக்கள் கடும் ஏழைத் தொழிலாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT