Published : 24 Mar 2020 09:38 AM
Last Updated : 24 Mar 2020 09:38 AM

கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் வங்கி கிளைகளை இயக்கலாம்: இந்திய வங்கியாளர் சங்கம் அறிவுறுத்தல்

புதுடெல்லி

மிகவும் அத்தியாவசியமான பணிகளில் ஒன்றாகத் திகழும் வங்கிச் சேவையில், கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான கிளைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய வங்கியாளர் சங்கம் (ஐபிஏ) வலியறுத்தியுள்ளது.

மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த நேரம் மட்டுமேவங்கிச் சேவைகளை செயல்படுத்தலாம் என்று வங்கி மேலாளர்களுக்கு ஐபிஏ அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 22-ம் தேதியன்று ஒரே நாளில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆகும். இதுவரை கரோனா வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 7ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 360-ஐ தொட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிவரை மாவட்ட நிர்வாகம் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தி குறைந்த நேரம் மட்டுமே வங்கிகளை செயல்படுத்தலாம் என்றும் ஐபிஏ அறிவுறுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் வங்கிகளின் மண்டல மற்றும் வட்டார பிரிவு தலைவர்களே முடிவு செய்யும் அதிகாரத்தை வங்கி தலைமைச் செயல் அதிகாரி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அவசியமான தேவைக்கு மட்டுமே வங்கிக் கிளைகளுக்கு வர வேண்டும் என்றும், பரிவர்த்தனைகளை முடிந்த வரை ஆன்லைன் மற்றும்கடன் அட்டை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர் கள் அதிகம் வங்கிக் கிளைகளுக்கு வருவது வங்கி ஊழியர்களின் நலனை பாதிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆக்ஸிஸ் வங்கி ரூ.100 கோடி நிதி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ஆக்ஸிஸ் வங்கி ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், வங்கி சப்ளையர்கள், அரசு ஏஜென்சிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.

சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு உள்ளிட்டவற்றில் போதியநிதி இல்லாத சூழலில் விதிக்கப்படும் அபராதம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக வங்கி அறிவித்துள்ளது. மிகவும் இக் கட்டான தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொடிய வைரஸ் பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x