Published : 23 Mar 2020 07:39 AM
Last Updated : 23 Mar 2020 07:39 AM

நாடு முழுவதும் 28 ஆயிரம் விற்பனை நிலையங்களில் பிஎஸ் 6 எரிபொருள் விநியோகத்தை தொடங்கியது இந்தியன் ஆயில்

புதுடெல்லி

வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் பிஎஸ் 6 பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்பட உள்ளநிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தற்போதே விநியோகத்தைத் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் இருக்கும் அதன் 28,000 பெட்ரோல் நிலையங்களில் தற்போது பிஎஸ் 6 எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அதன் தலைவர் சஞ்சிவ் சிங் தெரிவித்துள்ளார்.

பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரத்துக்குள் பிஎஸ் 6 எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளன.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் பிஎஸ் 6 விதியைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பிஎஸ் 6 பெட்ரோல், டீசல் விநியோகத்துக்கு வர உள்ளது. அந்த வகையில் இந்தியா, மிகத் தரம் வாய்ந்த எரிபொருளை விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதியிலேயே பிஎஸ் 6 முறையிலான பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன.

எரிபொருளில் உள்ள சல்ஃபர்சேர்மத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே அதன் தரம் வரையறுக்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் பிஎஸ் 4 எரிபொருளைப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதில் 50 பிபிஎம் அளவில் சல்ஃபர் சேர்மம் உள்ளது. ஆனால் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 எரிபொருளில் சல்ஃபரின் அளவு 10 பிபிஎம் மட்டுமே. இந்நிலையில் சுற்றுச் சூழல் மாசு பெருமளவில் கட்டுப் படுத்தப்படும்.

இந்தியா 2010-ம் ஆண்டு பிஎஸ் 3 முறைக்கு மாறியது. இதில் சல்ஃபர் அளவு 350 பிபிஎம். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2017-ம் ஆண்டில் பிஎஸ் 4-க்கு மாறியது. தற்போது மூன்றே ஆண்டுகளில் பிஎஸ் 6-க்கு மாறியுள்ளது. டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே பிஎஸ் 6 எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x