Published : 20 Mar 2020 07:46 AM
Last Updated : 20 Mar 2020 07:46 AM

கரோனா வைரஸ் பரவுவதை விரைவாக கட்டுப்படுத்தினாலும் தொழில் துறை மீண்டு வருவதற்கு 9 மாதம் ஆகும்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதை விரைவாக கட்டுப்படுத்த வேண்டும். அவ்விதம் கட்டுப்படுத்தினாலுமே இப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தொழில் துறை மீண்டு பழைய நிலையை எட்டுவதற்கு 9 மாதங்கள் ஆகும்என்று தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள சூழலிலிருந்து உடனடியாக மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் எங்கேயும் தென்படவில்லை. குறிப்பாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வரும் இந்தியா போன்ற நாடுகளில்இது மிகப் பெரும் பாதிப்பை உருவாக்கிஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ்பாதிப்பை மிகப் பெரும் பேரழிவாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த காலாண்டுக்குள் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்துக்குள் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நிதி ஆண்டில் எஞ்சியுள்ள மற்ற மூன்று காலாண்டுகளில் நிறுவனங்கள் செயல்பட முடியும். சர்வதேச அளவில் நிலைமை சீரடைந்து விநியோகச் சங்கிலி பாதிப்பின்றி தொடரும் என்று தொழிலகக் கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி தெரிவித்துள்ளன. வர்த்தக நிறுவனங்கள் வியாபாரத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. சில வர்த்தக நிறுவனங்களும் குறைந்த வேலை நேரங்களே செயல்படுகின்றன. இந்நிலையில் நுகர்வோரின் நம்பகத்தன்மையை பெறுவதும், மக்கள் தாராளமாக செலவழிக்க முன்வருவதும் உடனடியாக சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கரோனா வைரஸ் இந்தியதொழில் துறையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி தேக்க நிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாக சீனா கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்று இந்திய தொழில் துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் வளர்ச்சிப் பாதையை முற்றிலுமாக அடைத்துவிட்டது. இதனால் மீட்சிக்கான சாத்தியம் வெகு அருகில் இல்லை என்றே தோன்றுவதாக ஃபிக்கி மேலும் தெரிவித்தது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் பிற நாடுகளின்பொருளாதார பாதிப்பு இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்று அசோசேம் வலியுறுத்தியுள்ளது. ஆண்டு முழுவதும் பொருளாதார தேக்கநிலையை சந்தித்து வந்துள்ள இந்திய தொழில் துறை தற்போது கரோனா வைரஸால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அசோசேம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மீள்வது மட்டுமின்றி பொருளாதார தேக்கநிலையை முடுக்கிவிட இந்தியா மட்டுமின்றி பிற உலக நாடுகளும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x