Last Updated : 19 Mar, 2020 03:27 PM

 

Published : 19 Mar 2020 03:27 PM
Last Updated : 19 Mar 2020 03:27 PM

கரோனா வைரஸ் தாக்கத்தினால் 3.8 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படலாம்: பிரதமர் மோடிக்கு சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கடிதம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு வருவதையடுத்து அந்தத் துறையைச் சேர்ந்த 3.8 கோடி பேர்களுக்கு வேலையிழப்பு ஏற்படலாம் என்று இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு 12 மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் ‘நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தும்’ முறையில் உதவிகள் வழங்கவும் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

“இந்த கரோனா தொற்று அச்சத்தினால் இந்திய சுற்றுலாத் தொழில் துறை இந்திய அளவில் பெரிய வேலையின்மையை ஏற்படுத்தும், வர்த்தகங்கள் மூடப்படுவதால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்று மோடிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மொத்தம் இந்தத் துறையில் பணியாற்றும் 5.5 கோடி பேர்களில் 70% பேருக்கு வேலை பறிபோகும் அதாவது 3.8 கோடி பேர் வேலையை இழந்து விடும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே வேலையின்மையும் தொழில்கள் முடக்கமும் நாடு முழுதும் தொடங்கி விட்டன என்று இந்த கடிதத்தில் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் மொத்தமமாக சுற்றுலாத்துறை வர்த்தகம் என்பது அன்னியச் செலாவணியில் 28 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள உள்நாட்டு சுற்றுலாத்துறை பெரிய இடர்பாட்டில் சிக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. அதாவது நேரடி சுற்றுலாத்துறை வர்த்தகம் ரூ. 5 லட்சம் கொடி பெறுமானம் என்றால் இதைவிட இரட்டை மடங்கு பொருளாதார நடவடிக்கை இடர்பாட்டில் விழும் அபாயம் இருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் மோடிக்கு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“பிரதமர் அவர்களே, கூடுதலாக திவாலாவதைத் தடுக்க ஜிஎஸ்டி, அட்வான்ஸ் வரி செலுத்தல், பி.எஃப், இ.எஸ்.ஐ.சி. கஸ்டம் டூட்டிகள், ஆகியவை அடங்கிய அரசுக்கு சட்ட ரீதியாகச் செலுத்த வேண்டிய தொகைகளுக்கும் 12 மாத காலம் ஒத்திவைப்பு வழங்கக் கோருகிறோம். எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ போன்று 12 மாதங்களுக்கு வேலையிழப்போருக்கு நேரடியாக அடிப்படை சம்பளத்தை வங்கிக் கணக்கில் மாற்ற முடிவதையும் பரிசீலிக்க பிரதமரை வேண்டுகிறோம்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் பயணத்துக்கான டிசிஎஸ் வரி வசூலிக்கப்படும் என்று நிதி மசோதா 2020-ல் முன் மொழியப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தினால் இந்தியாவிலிருந்து வர்த்தகங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடும் எனவே அதனை அறிமுகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இதனால் இந்திய சுற்றுலாத்துறை நிறுவனங்களின் வர்த்தகங்கள் இழுத்து மூடப்படும்.

அதே போல் சுற்றுலா, பயணம், ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைக்கான ஜிஎஸ்ட் வரி விடுமுறையை 12 மாதங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அதே போல் சுற்றுலாத்துறை முதலீட்டு அனுமதியை விரைந்து முடித்திட பிரதமர் தேசிய சுற்றுலாத்துறை சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x